Sunday, 6 November 2022

பொய் சொல்லக் கற்றுக்கொள்!

 


பள்ளிக்கூடம் போகும் மாணவ/மாணவிகள் எப்படிச் சரியான காலணிகளை அணிய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலே நீங்கள் பார்க்கும் காலணிகளை அணிவது மாபெரும் குற்றம் என்பதைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள். சரியான காலணி என்பது கருப்பு நிறமாகவும், கயிறு உள்ளதாகவும் இருக்க வேண்டும். 

அதுவும் நீங்கள் இந்திய மாணவியாக இருந்தால் நீங்கள் மாணவர்கள் முன்னால் முட்டிப் போட  வேண்டி வரும்.  இது தான் உங்களுக்குத்  தண்டனை!

நீங்கள் ஏழை என்பது பள்ளிக்கூடத்தின் பிரச்சனை அல்ல! அவர்களுக்குக் கட்டுப்பாடு தான் முக்கியம்1 நீங்கள் ஏழையாக இருப்பது உங்கள் குற்றம்!

சமீபத்தில் ஒரு மாணவி,  இது போன்ற காலணிகளை அணிந்ததற்காக,  பள்ளி ஆசிரியை ஒருவரால் மேற்சொன்ன தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார்!

மாணவியின் பெற்றோர் இது சம்பந்தமாக போலீஸ் புகார் செய்திருக்கின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட ஆசிரியை "அப்படியெல்லாம் அந்த மாணவிக்கு எதுவும் நடக்கவில்லை!" என்பதாக அவரும் போலீஸில் புகார் செய்திருக்கிறார்! அவர் தனக்கும்  சாட்சியங்கள் உள்ளதாகக் கூறுகிறார்!

மேற்சொன்ன அனைத்தும் காலையில் பள்ளிக்கூடம் கூடும்  நேரத்தில் நடந்தாகச் சொல்லப்படுகிறது. அதாவது  மாணவர்கள் முன்னிலையில்  இவை அனைத்தும் நடந்தேறியிருக்கின்றன. 

ஆனாலும்  தனக்குச் சாட்சியங்கள் இருக்கின்றன என்கிறார் ஆசிரியை!  அப்படியென்றால் மாணவர்கள் தான் அவருக்குச் சாட்சியங்கள். இதை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.  ஒன்று ஆசிரியைச் சொல்லுவது போல எதுவும் நடக்கவில்லை. அப்படியென்றால் அவர் சொல்லுவது சரிதான். இன்னொரு பக்கம் பார்த்தால் மாணவர் முன்னிலையில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால்  அங்கு நடந்த  சம்பவத்தை மாணவர்கள் பார்த்திருக்க வேண்டும். 

இங்கு நமக்கு ஒரு கேள்வி உண்டு. மாணவர்கள் பார்த்திருந்தால், ஆசிரியையின் தூண்டுதலினால், அவர்கள் பொய் சொல்லும்படி  பணிக்கப்படலாம். அதற்கான சாத்தியங்களும் உண்டு. மாணவர்களைப் பொய் சொல்லும்படி ஒரு ஆசிரியர் தூண்டுவாரானால்  அது  மாபெரும் குற்றம். மிகவும் இழிவான ஒரு செயல்.

குறிப்பாகத் தமிழர்கள் ஆசிரியர்களை 'மாதா, பிதா,குரு'  என்று சொல்லி ஆசிரியர்களை குரு என்கிற  மிக உயரிய இடத்தைக் கொடுத்து வைத்திருக்கிறார்கள். மாணவர்களைப் பொய்  சொல்லத் தூண்டுவது என்பது மன்னிக்கப்பட முடியாத செயல்.

ஒன்று மட்டும் நமக்குப் புரிகிறது. பிரச்சனையை மறைப்பதற்கு வேலைகள் நடக்கின்றன. அதற்கு  உடைந்தையானவர்களை வைத்து அவர்களின் ஆலோசனையின் பேரில் நடப்பதாகவே தெரிகிறது. அதனால் கடைசியில் எல்லாமே சுழியம் ஆலிவிடுமோ!

இங்கே நீதி கிடைக்கவில்லை என்றால் இனி வருங்காலங்களில் இதுவே முன்னுதாரணமாகிவிடும் என்கிற அச்சம் நமக்கு உண்டு.

பொய் சொல்லக் கற்றுக்கொள்! பிழைத்துக் கொள்வாய்! என்கிறார்கள்  நவீன கால ஆசிரியர்கள்!

Saturday, 5 November 2022

ஏன் அம்னோ வெற்றி பெற வேண்டும்?

 

பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்,  அம்னோ கட்சியினரைப் பற்றி நல்லதொரு செய்தியைக் கூறியிருக்கிறார்.

நாட்டின் 15-வது பொதுத் தேர்தலை சீக்கிரம் வைக்க வேண்டும் என்று கடந்த அரசாங்கத்திற்கு நெருக்குதலை அம்னோ  கொடுத்தற்கு  ஒரே ஒரு காரணம்  நீதிமன்ற  வழக்குகளில் சிக்கியிருக்கும் அம்னோ தலைவர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பது மட்டும் தான்.

நாம் அதைச் சொன்னால் வீண்பழி என்பார்கள். ஆனால் கடந்த ஆட்சியில் அம்னோவோடு கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைத்தவர்கள் சொல்கிறார்கள்!

சீக்கிரம் தேர்தலை வைத்துவிட்டால் மட்டும் வெற்றி அடைந்துவிட முடியுமா? ஏதோ ஒரு  சில காரணங்கள் அவர்களுக்குச் சாதகமாக அமையும் என்பதாக அம்னோ தலைவர்கள் கனவு காண்கிறார்கள் என்பது மட்டும் உண்மை! ஏன் அதுவே எதிர்க்கட்சிகளுக்கும் சாதகமாக அமையலாம் என்பதும் உண்மை தானே? நியாயங்கள் ஒரு பக்கமாக மட்டும் இருக்கப்போவதில்லை! இரண்டு பக்கமும் சாதகமாக அமையலாம்!

சமீபத்தில் ம.இ.கா. மாநாட்டில் பேசுகின்ற போது அம்னோ தலைவர் ஒரு கருத்தைச் சொன்னார். அது தமாஷாக சொல்லப்பட்டதாக ம.இ.கா. தலைவர்கள் அவரைப் பார்த்துச்  சிரித்தனர்! ஆனால் பொது மக்கள் அப்படி நினைக்கவில்லை.  உள்ளத்தில் உள்ளது தானே வெளியே வருகிறது! அதில் என்ன தமாஷ் வேண்டிக் கிடக்கு?

அவர் பேசும் போது எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால்  "அம்னோ தலைவர்கள் மட்டும் அல்ல ம.இ.கா. தலைவர்களும்  நீதிமன்ற வழக்குகளைச் சந்திக்க வேண்டி வரும்!" என்று தமாஷாகப் பேசியதாக அப்போது பேசப்பட்டது. ஆனால் அது உண்மை தான் என்று மக்கள் புரிந்து வைத்திருக்கின்றனர்!

அவர்கள் விரும்புகிறார்களோ, விரும்பவில்லையோ நீதிமன்றக் கதவுகள் அவர்களுக்காகக் காத்துக் கிடக்கின்றன என்பது மட்டும் உண்மை! எப்பேர்ப்பட்ட திருடனாக இருந்தாலும் ஒரு நாள் அகப்பட்டுத் தானே ஆக வேண்டும்! சிறைச்சாலையை ஏமாற்றினாலும் வீட்டில் உள்ள சிறைச்சாலையைச் சந்தித்துத் தானே ஆக வேண்டும்! தப்ப முடியாது கண்ணா!

இப்போது நமக்கு ஓரளவாவது புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஏன் அம்னோ இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று துடிக்கிறது என்பது! இந்தத் தேர்தலில் எல்லாவித உபாயங்களும் வெளிப்படும் என்பது உண்மையே! அவர்களின் முதல் விளையாட்டு ஜோகூரில் எதிர்க்கட்சி மாநாட்டில் கூச்சலும் குழப்பத்தையும் விளவித்தது! இது தொடரும் என நம்பலாம்.  இப்போதும் அவர்கள் கை தான் ஓங்கியிருக்கிறது. தட்டிக்கேட்க ஆளில்லை!

இலஞ்சத்தையும் ஊழலையும் மட்டுமே ஆயுதமாகக் கொண்டிருக்கும் தேசிய முன்னணி நமக்கு வேண்டுமா என்பதை யோசியுங்கள்!

Friday, 4 November 2022

தேர்தல் களம் சூடு பிடிக்கிறது!

 

தேர்தல் களம் சூடு பிடிக்கிறது! நாளை (5.11.22) வேட்பு மனு தாக்கல். அதன் பின்னர் தேர்தல் பிரச்சாரம். இரண்டு வார இடைவெளியில் அரசியல் கட்சிகள் தனது பிரச்சாரங்களை மக்களிடம் கொண்டு செல்லலாம். நேரடியாக வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்கு கேட்கலாம்.  வாக்களிப்பு நாள் 19.11.22. 

இனி அடுத்த இரண்டு வாரங்களுக்கு நாமும் அரசியல் பற்றி தான் அதிகம் பேசுவோம்; பேச வேண்டும். 

நாட்டின் வளர்ச்சியில் நமது பங்களிப்பு எதிர்பார்த்தபடி இல்லை. இனியும் நாம் ஏதோ  வேண்டா வெறுப்பாகத்தான்  பார்க்கப்படுகிறோம்.  நமது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு விட்டன.  அரசாங்கத்தில் நமது குரல் எடுபடவில்லை.

நேற்று வந்த வங்காளதேசிகள் கூட இந்நாட்டுக் குடிமக்கள் போல் வாழ்கின்றனர்.  உண்மையைச் சொன்னால் இந்நாட்டில் வாழும் இந்தியர்களை விட வெளிநாட்டவர் அதிகமாக வாழ்கின்றனர். இது நாட்டில் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று சொல்லியும் அது பற்றி அரசாங்கம் சட்டைசெய்ததாகத் தெரியவில்லை.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அளவுக்கு அதிகமாகவே நாட்டுக்குள் வருகின்றனர். ஆனால் உள்நாட்டில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் இல்லை என்று மீண்டும் மீண்டும் சொன்னாலும் அரசாங்கத்தின்  காதில் விழவில்லை. அனைத்து வேலைகளும் வெளிநாட்டவர்களுக்கு என்றால் உள்நாட்டுக் குடிமக்களுக்கு அரசாங்கம் என்ன சொல்ல வருகிறது?

வெளிநாட்டுத் தொழிலாளர்களால் முதலாளிகளுக்கு இலாபம் என்பதால் முதலாளிகள் அவர்களையே வேலைகளுக்கு அமர்த்த விரும்புகின்றனர்.

இங்கும் இனரீதியில் இந்தியர்கள் பாதிக்கப்படுகின்றோம். பொது வேலைகள் என்கிற போது அவர்களில் பெரும்பாலும் மலாய்க்காரர்களும் இந்தியர்களும் தான். மலாய்க்காரர்களுக் கிடைக்க வேண்டிய பங்கை நிர்வாகங்கள் நிறைவேற்றிவிடுகின்றனர். ஆனால் இந்தியர்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இந்தியர்களைப்  பல நிறுவனங்கள் புறக்கணிக்கின்றன. அப்படியே ஒரு சில வேலைகள் கொடுக்கப்பட்டாலும்  அவை மிகவும் குறைவான சம்பளத்திற்கான வேலைகளாகத்தான் இருக்கும்.

இந்தியர்களின் முதல் பிரச்சனை என்பது போதுமான வேலை வாய்ப்புக்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. அவர்களைப் பிரதிநிதிக்கிறோம்  என்று சொல்லுபவர்கள்  அதுபற்றிப் பேச பயப்படுகின்றனர். இவர்களை நாம் என்ன செய்வது?

நம்மைப் பொறுத்தவரை நமக்கு ஒரு மாற்றம் வேண்டும்.  ஒரு புதிய அரசாங்கம் தேவை. நமது நலனில் அக்கறை உள்ளவர்கள் தேவை. நம்மை மதிப்பவர்களை நாம் மதிக்க வேண்டும். நம்மை மதிக்காத அரசாங்கத்தை நாம் மதிக்க வேண்டிய அவசியமில்லை!

பக்காத்தான் அரசாங்கம் என்பது காலத்தின் கட்டாயம்! அவர்களை நாம் ஆதரிப்போம்!