Saturday 5 November 2022

ஏன் அம்னோ வெற்றி பெற வேண்டும்?

 

பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்,  அம்னோ கட்சியினரைப் பற்றி நல்லதொரு செய்தியைக் கூறியிருக்கிறார்.

நாட்டின் 15-வது பொதுத் தேர்தலை சீக்கிரம் வைக்க வேண்டும் என்று கடந்த அரசாங்கத்திற்கு நெருக்குதலை அம்னோ  கொடுத்தற்கு  ஒரே ஒரு காரணம்  நீதிமன்ற  வழக்குகளில் சிக்கியிருக்கும் அம்னோ தலைவர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பது மட்டும் தான்.

நாம் அதைச் சொன்னால் வீண்பழி என்பார்கள். ஆனால் கடந்த ஆட்சியில் அம்னோவோடு கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைத்தவர்கள் சொல்கிறார்கள்!

சீக்கிரம் தேர்தலை வைத்துவிட்டால் மட்டும் வெற்றி அடைந்துவிட முடியுமா? ஏதோ ஒரு  சில காரணங்கள் அவர்களுக்குச் சாதகமாக அமையும் என்பதாக அம்னோ தலைவர்கள் கனவு காண்கிறார்கள் என்பது மட்டும் உண்மை! ஏன் அதுவே எதிர்க்கட்சிகளுக்கும் சாதகமாக அமையலாம் என்பதும் உண்மை தானே? நியாயங்கள் ஒரு பக்கமாக மட்டும் இருக்கப்போவதில்லை! இரண்டு பக்கமும் சாதகமாக அமையலாம்!

சமீபத்தில் ம.இ.கா. மாநாட்டில் பேசுகின்ற போது அம்னோ தலைவர் ஒரு கருத்தைச் சொன்னார். அது தமாஷாக சொல்லப்பட்டதாக ம.இ.கா. தலைவர்கள் அவரைப் பார்த்துச்  சிரித்தனர்! ஆனால் பொது மக்கள் அப்படி நினைக்கவில்லை.  உள்ளத்தில் உள்ளது தானே வெளியே வருகிறது! அதில் என்ன தமாஷ் வேண்டிக் கிடக்கு?

அவர் பேசும் போது எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால்  "அம்னோ தலைவர்கள் மட்டும் அல்ல ம.இ.கா. தலைவர்களும்  நீதிமன்ற வழக்குகளைச் சந்திக்க வேண்டி வரும்!" என்று தமாஷாகப் பேசியதாக அப்போது பேசப்பட்டது. ஆனால் அது உண்மை தான் என்று மக்கள் புரிந்து வைத்திருக்கின்றனர்!

அவர்கள் விரும்புகிறார்களோ, விரும்பவில்லையோ நீதிமன்றக் கதவுகள் அவர்களுக்காகக் காத்துக் கிடக்கின்றன என்பது மட்டும் உண்மை! எப்பேர்ப்பட்ட திருடனாக இருந்தாலும் ஒரு நாள் அகப்பட்டுத் தானே ஆக வேண்டும்! சிறைச்சாலையை ஏமாற்றினாலும் வீட்டில் உள்ள சிறைச்சாலையைச் சந்தித்துத் தானே ஆக வேண்டும்! தப்ப முடியாது கண்ணா!

இப்போது நமக்கு ஓரளவாவது புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஏன் அம்னோ இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று துடிக்கிறது என்பது! இந்தத் தேர்தலில் எல்லாவித உபாயங்களும் வெளிப்படும் என்பது உண்மையே! அவர்களின் முதல் விளையாட்டு ஜோகூரில் எதிர்க்கட்சி மாநாட்டில் கூச்சலும் குழப்பத்தையும் விளவித்தது! இது தொடரும் என நம்பலாம்.  இப்போதும் அவர்கள் கை தான் ஓங்கியிருக்கிறது. தட்டிக்கேட்க ஆளில்லை!

இலஞ்சத்தையும் ஊழலையும் மட்டுமே ஆயுதமாகக் கொண்டிருக்கும் தேசிய முன்னணி நமக்கு வேண்டுமா என்பதை யோசியுங்கள்!

No comments:

Post a Comment