தேர்தல் களம் சூடு பிடிக்கிறது! நாளை (5.11.22) வேட்பு மனு தாக்கல். அதன் பின்னர் தேர்தல் பிரச்சாரம். இரண்டு வார இடைவெளியில் அரசியல் கட்சிகள் தனது பிரச்சாரங்களை மக்களிடம் கொண்டு செல்லலாம். நேரடியாக வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்கு கேட்கலாம். வாக்களிப்பு நாள் 19.11.22.
இனி அடுத்த இரண்டு வாரங்களுக்கு நாமும் அரசியல் பற்றி தான் அதிகம் பேசுவோம்; பேச வேண்டும்.
நாட்டின் வளர்ச்சியில் நமது பங்களிப்பு எதிர்பார்த்தபடி இல்லை. இனியும் நாம் ஏதோ வேண்டா வெறுப்பாகத்தான் பார்க்கப்படுகிறோம். நமது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு விட்டன. அரசாங்கத்தில் நமது குரல் எடுபடவில்லை.
நேற்று வந்த வங்காளதேசிகள் கூட இந்நாட்டுக் குடிமக்கள் போல் வாழ்கின்றனர். உண்மையைச் சொன்னால் இந்நாட்டில் வாழும் இந்தியர்களை விட வெளிநாட்டவர் அதிகமாக வாழ்கின்றனர். இது நாட்டில் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று சொல்லியும் அது பற்றி அரசாங்கம் சட்டைசெய்ததாகத் தெரியவில்லை.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அளவுக்கு அதிகமாகவே நாட்டுக்குள் வருகின்றனர். ஆனால் உள்நாட்டில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் இல்லை என்று மீண்டும் மீண்டும் சொன்னாலும் அரசாங்கத்தின் காதில் விழவில்லை. அனைத்து வேலைகளும் வெளிநாட்டவர்களுக்கு என்றால் உள்நாட்டுக் குடிமக்களுக்கு அரசாங்கம் என்ன சொல்ல வருகிறது?
வெளிநாட்டுத் தொழிலாளர்களால் முதலாளிகளுக்கு இலாபம் என்பதால் முதலாளிகள் அவர்களையே வேலைகளுக்கு அமர்த்த விரும்புகின்றனர்.
இங்கும் இனரீதியில் இந்தியர்கள் பாதிக்கப்படுகின்றோம். பொது வேலைகள் என்கிற போது அவர்களில் பெரும்பாலும் மலாய்க்காரர்களும் இந்தியர்களும் தான். மலாய்க்காரர்களுக் கிடைக்க வேண்டிய பங்கை நிர்வாகங்கள் நிறைவேற்றிவிடுகின்றனர். ஆனால் இந்தியர்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இந்தியர்களைப் பல நிறுவனங்கள் புறக்கணிக்கின்றன. அப்படியே ஒரு சில வேலைகள் கொடுக்கப்பட்டாலும் அவை மிகவும் குறைவான சம்பளத்திற்கான வேலைகளாகத்தான் இருக்கும்.
இந்தியர்களின் முதல் பிரச்சனை என்பது போதுமான வேலை வாய்ப்புக்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. அவர்களைப் பிரதிநிதிக்கிறோம் என்று சொல்லுபவர்கள் அதுபற்றிப் பேச பயப்படுகின்றனர். இவர்களை நாம் என்ன செய்வது?
நம்மைப் பொறுத்தவரை நமக்கு ஒரு மாற்றம் வேண்டும். ஒரு புதிய அரசாங்கம் தேவை. நமது நலனில் அக்கறை உள்ளவர்கள் தேவை. நம்மை மதிப்பவர்களை நாம் மதிக்க வேண்டும். நம்மை மதிக்காத அரசாங்கத்தை நாம் மதிக்க வேண்டிய அவசியமில்லை!
பக்காத்தான் அரசாங்கம் என்பது காலத்தின் கட்டாயம்! அவர்களை நாம் ஆதரிப்போம்!
No comments:
Post a Comment