Thursday, 3 August 2023

பெற்றோர்களே! அலட்சியம் வேண்டாம்!

 

நாம் நம் குழந்தைகளுக்குச் சரியான பாதுகாப்புக் கொடுக்கிறோமா எனபதைப் பெற்றோர்கள் யோசிக்க வேண்டும்.

பெற்றோர்களின் கவனக் குறைவினால்  குழந்தைகளின் மரணம் என்பது  தொடர்ந்து கொண்டே இருப்பது மனதைப் பதைபதைக்க வைக்கிறது.

சமீபத்தில் வெளிவந்த ஒரு செய்தி.  இது நடந்தது இந்தியா,  பெங்களூரு . கைப்பேசியை சார்ஜ் பண்ண பயன்படுத்தப்படும் வயர் எப்படியோ குழந்தையின் கைகளின் அகப்பட்டுக்கொண்டது.  குழந்தைகள் எது கையில் அகப்பட்டாலும் அது உடனே வாயில் தான் வைக்கும். இது இயல்பு நாம் பார்த்திருக்கிறோம்.  குழந்தை பிழைக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் ஒரு தவறு நடந்துவிட்டது.

கைப்பேசி சார்ஜ் ஆனதும் அதன் சுவிட்சை அணைக்காமல்  அப்படியே விட்டுவிட்டது குழந்தைக்கு எமனாகி விட்டது.  குழந்தை  சார்ஜரில் உள்ள பின்னை கடிக்க ஆரம்பித்ததால் மின்சாரம் தாக்கி குழந்தைக்கு  ஆபத்தை ஏற்படுத்திவிட்டது.

யாரை நாம் குற்றம் சொல்லுவது? எட்டு மாத குழந்தைக்கு என்ன தெரியும்?  எந்தப் பொருள் கையில் அகப்பட்டாலும் அது வாயில்  வைத்து சப்பத்தான் செய்யும்.  முதலில் குழந்தைகளுக்கு  இது போன்ற எலக்டிரிக் பொருள்களை கைகளுக்கு எட்டாதவாறு  வைத்திருக்க வேண்டும். ஆனால் மிக முக்கியம் சார்ஜ் செய்த பிறகு சுவிட்சுகளை அணைத்துவிட வேண்டும். இந்த விஷயத்தில் நாம் மிகவும் அலட்சியமாக இருக்கிறோம். இந்த அலட்சியத்தை நாம் ஒவ்வொரு வீட்டிலும் பார்க்கத்தான் செய்கிறோம்.  யாரும் அதனைப்  பொருட்படுத்தவதில்லை.  அந்த அளவுக்கு நாம் அலட்சியமாக  நடந்து கொள்கிறோம்.

குழந்தைகள் இருக்கும் இடங்களில் அதுவும் ஓடி ஆடி துருதுருவென இருக்கும் குழந்தைகள் இருக்கும் இடங்களில்  அலட்சியமாக இருந்துவிட 
முடியாது.  

சில ஆண்டுகளுக்கு முன் நம் ஊரில் நடந்த ஒரு சம்பவம்.  ஐந்து வயது பேரன்,  பாட்டி சாப்பிடும் மருந்துகளை மிட்டாய் என நினைத்து சாப்பிட்டு விட்டான். இறந்து போனான்.  குழந்தைகள் இருக்கும் இடங்களில் மிக மிகக் கவனம் தேவை.  அலட்சியம் வேண்டாம்.

மீண்டும் நாம் சொல்லுவது இதுதான்.  பெற்றோர்களே அதுவும் இளம் பெற்றோர்களே  உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால்  மிக மிக எச்சரிக்கையாய் இருங்கள். குழந்தைகளுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வெளியில் இருந்தும் வருகின்றன. வீட்டிலிருந்தும் வருகின்றன. 

பெற்றோர்களே! நீங்கள் தான் உங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாய் இருக்க வேண்டும்!

Wednesday, 2 August 2023

கேள்வியின் நாயகனே...!

 


மாணவர் ஒருவர் குவந்தான் நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் பதிய சென்ற போது நடந்த நிகழ்வு இது!

குறிப்பிட்ட அந்த மாணவர் தனது குடும்பத்தினருடன் பயணம் செய்திருக்கிறார். பயணம் செய்யும் வழியில் ஓய்வு எடுக்கும் பகுதியில் ஓய்வு எடுத்துவிட்டு  மீண்டும் கார் பயணம் ஆரம்பமாகிவிட்டது.

கார் சிறிது தூரம் சென்ற பிறகு தான்   காரில் மகனைக் காணோமே என்று  தாயாருக்குத் தெரிய வந்து காரை நிறுத்தச் சொல்லியிருக்கிறார். அப்போது தான் மகனை  ஓய்வு எடுக்கும் தலத்திலேயே விட்டுவிட்டு வந்தது  குடும்பத்தினருக்கு ஞாபகத்திற்கு வந்தது!

அதன் பின்னர் அந்த மாணவர் ஒயவு தலத்தில் இருந்த வேறொரு பயணியின்  உதவியோடு அவரது குடும்பத்தினரோடு வந்து சேர்ந்து கொண்டார்.  எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

பொறுப்பில்லாத மாணவராக இருக்கக் கூடுமோ  என்று நிலைத்தாலும்  ஒன்று மட்டும் நிச்சயம். எல்லாம் பதட்டம், பதட்டம், பதட்டம் தான்!  பழக்கம் இல்லாத புதிய கல்லூரிக்குச் செல்லும் போது, புதிய மாணவர்கள், புதிய சூழல்,  அனைத்தும் புதிய, புதிய, புதிய - எல்லாமே புதியது! அதனால் மாணவனுக்கும் நம்பிக்கை வரவில்லை.

ஆனால் அவனது குடும்பத்தினர் மீது தான் நாம் குற்றம் சொல்ல வேண்டும். பெரியவர்கள். அனுபவம் உள்ளவர்கள். பெரியவர்கள் தான் அவனுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். புதிய இடத்திற்குப் போகிறோமே  என்கிற பயம் அவனுக்கு இருக்கத்தான் செய்யும். முதல் நாளே அவனுக்கு அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டிருப்பது  வேதனையான விஷயம்.

எல்லாமே நல்லபடியாக முடிந்தது என்பது நல்ல விஷயம் தான். அவனும் இந்த  நிகழ்வை மறந்து நல்லபடியாக அவனது கல்வியைத் தொடர  நாம் இறைவனை வேண்டுகிறோம்!

Tuesday, 1 August 2023

உணவு என்றாலே பயம் ஏற்படுகிறது!

 

இப்போதெல்லாம் உணவு என்றாலே ஒரு பயத்தை ஏற்படுத்தி விட்டார்கள்!

உணவகம் சென்றால் சுத்தமாக இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுகிறது. அதுவும் 'கழிப்பிடம் பக்கம்  போய் விடாதீர்கள்! அப்புறம் சாப்பிட முடியாது!' என்று சொல்லுகின்ற பழக்கமும் நமக்கு உண்டு. இப்போது இதனையெல்லாம் தாண்டி வந்துவிட்டோம். இப்போதும் திருப்திகரமாக இல்லை.

சரி உணவகம் ஒரு பக்கம் இருக்கட்டும். உணவகப் பொருள்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள்  ஒரு பக்கம்  ஆபத்துகளை அள்ளி வீசுகின்றன.

என்ன தான் சொல்லுவது?  எலி கழிவுகள் ஒரு பக்கம், கெட்டுப்போன உணவு பொருட்கள், காலாவதியான உணவு பொட்டலங்கள்  - ஐயோ! ஐயோ! என்று புலம்ப வேண்டியிருக்கிறது.  

பொது மக்கள் தான் புலம்புகிறோம். தொழிற்சாலைகள் அது பற்றி எல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கவலைப்படுவதாக இருந்தால் அது எப்படி இந்த அளவுக்கு மக்களுக்குக் குப்பைகளை அள்ளித் தருவார்கள்?

சும்மா இரண்டு வாரம் தொழிற்சாலைகளை மூடச் சொன்னால்  என்ன நடக்கும்?  ஒன்றுமே நடக்காது! இதுவரை ஒன்றும் நடக்கவில்லையே! இனிமேலுமா நடக்கப்போகிறது?

நமது குற்றச்சாட்டு எல்லாம் சட்டங்கள் கடுமையாக இல்லை. சட்டங்கள் மீறப்படுகின்றன. அதற்குச் சுகாதார அமைச்சு துணை போகிறது, அவ்வளவு தான்!

உணவுப் பொருட்கள் எனும்போது அரசாங்கம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். கடுமையாக நடந்து கொள்ளவில்லை என்றால்  இப்படித்தான் நடக்கும்.  இந்த இரண்டு வார தொழிற்சாலகள் மூடப்படுவது எல்லாம் பழைய நடைமுறை. இதற்கெல்லாம் முதலாளிகள் பயப்படப் போவதில்லை.  ஒரு வேளை,  வேலை செய்யும் தொழிலாலர்களுக்குச் சம்பளம் கிடைக்காமல் போகலாம், அவ்வளவு தான்!

விதிகளை மீறினால் ஆறு மாதங்கள் தொழிற்சாலையை இழுத்து மூட வேண்டும். அவர்களுக்கான அபராதம் ரி.ம.1,00,000 (ஒரு இலட்சம்) வெள்ளியாக இருக்க வேண்டும்.  இப்படி செய்தால் யோசித்துப் பாருங்கள்.  அவர்கள் மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய வாய்ப்பே இல்லை!

இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். பொதுவாகச் சொன்னால் ஊழல் தான் ஆட்சி புரிகிறது!  வேறு யாரையும் குற்றம் சொல்ல முடியாது!

அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாம் பயந்து கொண்டே தான் இருக்க வேண்டும்!