Tuesday 1 August 2023

உணவு என்றாலே பயம் ஏற்படுகிறது!

 

இப்போதெல்லாம் உணவு என்றாலே ஒரு பயத்தை ஏற்படுத்தி விட்டார்கள்!

உணவகம் சென்றால் சுத்தமாக இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுகிறது. அதுவும் 'கழிப்பிடம் பக்கம்  போய் விடாதீர்கள்! அப்புறம் சாப்பிட முடியாது!' என்று சொல்லுகின்ற பழக்கமும் நமக்கு உண்டு. இப்போது இதனையெல்லாம் தாண்டி வந்துவிட்டோம். இப்போதும் திருப்திகரமாக இல்லை.

சரி உணவகம் ஒரு பக்கம் இருக்கட்டும். உணவகப் பொருள்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள்  ஒரு பக்கம்  ஆபத்துகளை அள்ளி வீசுகின்றன.

என்ன தான் சொல்லுவது?  எலி கழிவுகள் ஒரு பக்கம், கெட்டுப்போன உணவு பொருட்கள், காலாவதியான உணவு பொட்டலங்கள்  - ஐயோ! ஐயோ! என்று புலம்ப வேண்டியிருக்கிறது.  

பொது மக்கள் தான் புலம்புகிறோம். தொழிற்சாலைகள் அது பற்றி எல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கவலைப்படுவதாக இருந்தால் அது எப்படி இந்த அளவுக்கு மக்களுக்குக் குப்பைகளை அள்ளித் தருவார்கள்?

சும்மா இரண்டு வாரம் தொழிற்சாலைகளை மூடச் சொன்னால்  என்ன நடக்கும்?  ஒன்றுமே நடக்காது! இதுவரை ஒன்றும் நடக்கவில்லையே! இனிமேலுமா நடக்கப்போகிறது?

நமது குற்றச்சாட்டு எல்லாம் சட்டங்கள் கடுமையாக இல்லை. சட்டங்கள் மீறப்படுகின்றன. அதற்குச் சுகாதார அமைச்சு துணை போகிறது, அவ்வளவு தான்!

உணவுப் பொருட்கள் எனும்போது அரசாங்கம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். கடுமையாக நடந்து கொள்ளவில்லை என்றால்  இப்படித்தான் நடக்கும்.  இந்த இரண்டு வார தொழிற்சாலகள் மூடப்படுவது எல்லாம் பழைய நடைமுறை. இதற்கெல்லாம் முதலாளிகள் பயப்படப் போவதில்லை.  ஒரு வேளை,  வேலை செய்யும் தொழிலாலர்களுக்குச் சம்பளம் கிடைக்காமல் போகலாம், அவ்வளவு தான்!

விதிகளை மீறினால் ஆறு மாதங்கள் தொழிற்சாலையை இழுத்து மூட வேண்டும். அவர்களுக்கான அபராதம் ரி.ம.1,00,000 (ஒரு இலட்சம்) வெள்ளியாக இருக்க வேண்டும்.  இப்படி செய்தால் யோசித்துப் பாருங்கள்.  அவர்கள் மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய வாய்ப்பே இல்லை!

இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். பொதுவாகச் சொன்னால் ஊழல் தான் ஆட்சி புரிகிறது!  வேறு யாரையும் குற்றம் சொல்ல முடியாது!

அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாம் பயந்து கொண்டே தான் இருக்க வேண்டும்!

No comments:

Post a Comment