Monday, 6 May 2024

மக்களின் போராட்டத்திற்கு வெற்றி!

 

கோலகுபுபாரு  தோட்ட மக்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்ததில்  நமக்கும் மகிழ்ச்சியே.

எல்லாகாலங்களிலும் இந்தியர்களை மடையர்களாக  நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பாடம்.  இந்தியர்கள் என்றாலே எப்படியாவது  மடக்கிவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு  ஒரு பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது.

அங்கு ஏற்பட்ட பிணக்கு என்பது  பத்து, பதினைந்து வருடங்களுக்கு மேல்  கிடப்பில் போடப்பட்ட வீடமைப்புத் திட்டம் தான்.  சமீபகாலம் வரை அங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த ஒரு சீனப்பெண்மணி. ஜ.செ.க. ஏழைகளின் நலனுக்கு பாடுபடும்  கட்சி என்று சொன்னாலும்  அவர்கள் ஏன் மௌனம் சாதித்தார்கள்? ஒரே காரணம் அங்கு ஏற்பட்டது இந்தியர்களின் பிரச்சனை.  அதனால் தான் அவர்கள் அதனைச் செயல்படுத்த  எந்த முயற்சியும்  எடுக்கவில்லை.

ஒர் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஜ.செ.க. சீனர்கள் கட்சி என்பதில் சந்தேகமில்லை.  அவர்கள் சீனர்களின் பிரச்சனைக்குத் தான்  முக்கியத்துவம் கொடுப்பார்கள். நமது அங்கத்துவம் என்பது சும்மா 'பல்லின கட்சி'  என்று  வெளியே காட்டிக்கொள்ளத்தான்!  மற்றபடி  நமக்கு எந்த மரியாதையும் இல்லை! 

இப்போதும் கூட பார்த்தால் சீனர்களின் பிரச்சனைக்கு வாய் திறப்பார்களே தவிர இந்தியர்களின் பிரச்சனைக்கு 'கப்சிப்' அவ்வளவு தான்!

எப்படியோ இந்த வீடமைப்பு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியவர்,  செயல்படுத்தியவர், வாதாடியவர், போராடியவர்,  என்று எப்படி எடுத்துக் கொண்டாலும் அதற்குக் காரணமானவர் Parti Sosialis Malaysia கட்சியின் திரு.அருட்செல்வன் அவர்கள் தான் என்று ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

                                                        அருட்செல்வன் (PSM)
திரு அருட்செல்வன் நல்ல சேவையாளர் என்பது நமக்குத் தெரியும்.  ஆனால் அவரை நம்மால் ஆதரிக்க முடியவில்லை. எல்லாகாலங்களிலும் ஏமாற்றுபவர்களையே ஆதரித்துப் பழகிவிட்டோம்! அதனை மாற்றிக்கொள்ள  முடியவில்லை! நாம் உயிர்வாழ டத்தோ, டான்ஸ்ரீ, டத்தோஸ்ரீ - இவைகளெல்லாம் தேவை!  மீண்டும் மீண்டும் ஏமாறத்  தயாராக இருக்கிறோமே தவிர, திருந்த தயாராக இல்லை! அது தான் நமது நிலைமை!

எப்படியோ இந்த வெற்றியை அங்குள்ள மக்களுடன் சேர்ந்து  நாமும் கொண்டாடுகிறோம். இனி நமது  போராட்டங்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக  இருக்கட்டும்.   ஒன்று  சேர்ந்தால் எதனையும் சாதிக்கலாம் என்பது இந்த நிகழ்வு நமக்குப் புலப்படுத்துகிறது.

வாழ நினைத்தால் வாழலாம்!

Sunday, 5 May 2024

ஏன் வாய் திறக்கவில்லை?

 

பிரதமர் அன்வார்,  இந்திய சமூகத்திற்கு நான் தொடர்ந்து செய்ய வேண்டியதை  செய்து கொண்டு தான்  இருக்கிறேன்  என்று சொல்லி வருகிறார்.

ஆனாலும் அப்படி என்ன செய்து விட்டார் என்கிற கேளவி தான் தொடர்ச்சியாக  எழுப்பப்படுகிறது.  அதில் உண்மை உண்டு என்று  தான் நமக்கும் படுகிறது.

பிரதமர் அடிக்கடி சொல்லுவது என்ன வென்றால்  வணிகம் செய்ய பண உதவி செய்கிறோம்  என்கிறார்.  நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.  மித்ரா மூலம் உதவிகள் கிடைக்கின்றன. அது பெரும்பாலும் ஏழைகளுக்குப் போய் சேருவதில்லை. இருந்தாலும் கிடைக்கின்றது. அதே போல சிறுகடன் உதவிகள் பெற மேலும்  இரு  அமைப்புக்களின் மூலம் கிடைக்கின்றன.  பயன்படுத்தத் தெரிந்தவர்கள் பயன் படுத்திக் கொள்கிறார்கள். அந்த இரு அமைப்புகளும் மலேசியர்களுக்குப் பொதுவானவை.   இருந்தாலும் நமக்கும் அதில் வாய்ப்புக் கொடுப்பதற்காக  நன்றி கூறுகிறோம்.

பிரதமர் மேற்சொன்னவைகளைத் தான் அடிக்கடி குறிப்பிட்டுக்  கூறி வருகிறார்.  இருக்கட்டும் அதனை நாம் மறுக்கவில்லை.  ஆனால் மெட் ரிகுலேஷன் கல்வி இட ஒதுக்கீடு பற்றி மட்டும் பேச மறுக்கிறார்.  இப்போது எத்தனை இடங்கள் கிடைக்கின்றன என்பது பற்றியும் பேசுவதில்லை.  எத்தனை இடங்கள் கொடுக்கலாம் என்பது பற்றி வாய் திறக்க மறுக்கிறார்.

முன்பு ஒரு காலத்தில பிரதமராக இருந்த நஜீப் ரசாக் 2500 இடங்கள் ஒதுக்கி இருந்தார். அதனையே இலக்காக வைத்து இப்போது நாமும் 2500 இடங்களை ஒதுக்கும்படி  கேட்கிறோம்.  பிரதமரோ அது பற்றி பேசுவதில்லை!  எவ்வளவு தான் கொடுக்கலாம் என்கிற முடிவை அவரால் எடுக்க முடியவில்லை.

இந்திய சமுகத்தைப் பார்த்து, தேர்தலுக்கு முன்பு,  மிகவும் ஏழ்மையான சமுகம் என்று மிகவும் அனுதாபப்பட்டார்.  அவர்கள்  ஏழ்மை நிலையிலிருந்து விடுபட  கல்வி எத்துணை முக்கியம் என்பதை அவர் அறிந்திருக்கிறார்.  ஆனால் அந்தக் கல்வியைப் பற்றி பேசாமல் கடந்து போய் விடுகிறார்!  இந்திய சமுகத்திற்குக்  கல்வி  தேவை இல்லை என்று நினைக்கிறார் என்று தான் நமக்குத் தோன்றுகிறது.

அதிகாரம் வலிமையானது என்பார்கள்.  அந்த அதிகாரத்தை நாம் அளவுக்கு மீறியே கொடுத்து விட்டோமோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

பிரதமர் இந்திய மாணவர் நலன் கருதி  குறிப்பாக மெட்ரிகுலேஷன்  பற்றியான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று நினைவுறுத்துகிறோம்.

Saturday, 4 May 2024

இலஞ்சம் தவிர்!

இப்போது நம் கண் முன்னே இருப்பது கோலகுபுபாரு  இடைத்தேர்தல் மட்டும் தான்!

அத்தொகுதியில் உள்ள மக்கள் தான் அவர்களுக்கு எது நல்லது  எது கெட்டது என்கிற முடிவை எடுக்க வேண்டும்.  இத்தனை ஆண்டுகள் அவர்களைப்  பிரதிநிதித்தவர்கள்  எத்தகைய சேவைகளைக் கொடுத்தார்கள்  என்பது அவர்களுக்குத்தான்  தெரியும்.

வெளியே இருந்து கொண்டு பல நூறு அவதூறுகளை அள்ளி வீசலாம். பொதுவாக எடுத்துக் கொண்டால் சிலாங்கூர்  அரசாங்கம்  ஏழைகளுக்குப் பல  நல்ல செயல் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது  என்பதை  ஏற்றுக் கொள்ளலாம். அதில் இந்தியர்களும் பயன் பெறுகின்றனர்  என்பதை மறுக்க முடியாது.

ஆனால் நாம் பேசுவது அந்தத் தொகுதி அளவில் என்ன நடந்திருக்கிறது  என்பது தான்.  நிச்சயமாக அதே தொகுதியில்  மலாய்க்காரர்களும் சீனர்களும் கூடவே இந்தியர்களும்  காலங்காலமாக வாழ்ந்து கொண்டு தான் வருகின்றனர்.

நமக்குத் தெரிந்தவரை  மலாய்க்காரர்களை ஏமாற்ற முடியாது.  அது தானாகவே வந்து சேரும்.  சேராவிட்டால் அதன் பலனை அரசியல்வாதிகள்  அனுபவிக்க நேரும்!   அந்த அளவுக்கு அவர்களிடம் பயம் உண்டு .  சீனர்களுக்கு அனைத்தும் 'உள்ளுக்குள்ளேயே'  பேரம் முடிந்துவிடும்.  அவர்களை ஏமாற்றுவது கடினம்.

இதில் இந்தியர்கள் தான் வாயில்லா பூச்சிகள்! ஏமாற்றுவது எளிது. நமது தேவைகள் புறக்கணிக்கப்படுவது  இயல்பு.  நமது தேவைகள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.  உணவு பொட்டலங்களைக் கொடுத்து சரிபண்ணுவது நமக்கு மட்டும் தான் நடக்கும்!    இது தான் நமக்குக் கிடைக்கும்  இலஞ்சம்!  இதனைக் கொடுத்தே இந்திய சமுதாயத்தை சரிசெய்துவிடலாம் என்கிற எண்ணம் அரசியல்வாதிகளுக்கு உண்டு!

நமது கோரிக்கை என்ன என்பதற்குத் தான் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  அங்கு வீடமைப்புத் திட்டம் நிறைவேற்றப்படாத ஒரு திட்டம் என்று கூறப்படுகிறது.  அதனை நிறைவேற்றக் கூறி நாம் அழுத்தம் கொடுக்கலாம்.  இந்த நேரத்தில் அது நிறைவேற வாய்ப்புகள் உண்டு. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் போராட வேண்டும்.

இத்தனை நாள்கள் நடந்த பேச்சுவார்த்தைகள், பிரச்சாரங்கள், பல்வேறு கருத்துகளை அங்குள்ள தொகுதி தலைவர்கள்  கேட்டிருப்பார்கள்.  அதன் மூலம் அவர்களுக்கு நல்ல தெளிவு கிடைத்திருக்கும்.  யாரை நம்பலாம், யார் போலிகள்  போன்ற விபரங்கள் இப்போது  தெரிந்திருக்கும்.

நீங்களே யாருக்கு உங்கள் வாக்கு என்பதை முடிவு செய்யுங்கள்.   குடிமுழுகிப் போக ஒன்றுமில்லை. இலஞ்சம் தவிர் என்பதை மறந்து விடாதீர்கள்!