பிரதமர் அன்வார், இந்திய சமூகத்திற்கு நான் தொடர்ந்து செய்ய வேண்டியதை செய்து கொண்டு தான் இருக்கிறேன் என்று சொல்லி வருகிறார்.
ஆனாலும் அப்படி என்ன செய்து விட்டார் என்கிற கேளவி தான் தொடர்ச்சியாக எழுப்பப்படுகிறது. அதில் உண்மை உண்டு என்று தான் நமக்கும் படுகிறது.
பிரதமர் அடிக்கடி சொல்லுவது என்ன வென்றால் வணிகம் செய்ய பண உதவி செய்கிறோம் என்கிறார். நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். மித்ரா மூலம் உதவிகள் கிடைக்கின்றன. அது பெரும்பாலும் ஏழைகளுக்குப் போய் சேருவதில்லை. இருந்தாலும் கிடைக்கின்றது. அதே போல சிறுகடன் உதவிகள் பெற மேலும் இரு அமைப்புக்களின் மூலம் கிடைக்கின்றன. பயன்படுத்தத் தெரிந்தவர்கள் பயன் படுத்திக் கொள்கிறார்கள். அந்த இரு அமைப்புகளும் மலேசியர்களுக்குப் பொதுவானவை. இருந்தாலும் நமக்கும் அதில் வாய்ப்புக் கொடுப்பதற்காக நன்றி கூறுகிறோம்.
பிரதமர் மேற்சொன்னவைகளைத் தான் அடிக்கடி குறிப்பிட்டுக் கூறி வருகிறார். இருக்கட்டும் அதனை நாம் மறுக்கவில்லை. ஆனால் மெட் ரிகுலேஷன் கல்வி இட ஒதுக்கீடு பற்றி மட்டும் பேச மறுக்கிறார். இப்போது எத்தனை இடங்கள் கிடைக்கின்றன என்பது பற்றியும் பேசுவதில்லை. எத்தனை இடங்கள் கொடுக்கலாம் என்பது பற்றி வாய் திறக்க மறுக்கிறார்.
முன்பு ஒரு காலத்தில பிரதமராக இருந்த நஜீப் ரசாக் 2500 இடங்கள் ஒதுக்கி இருந்தார். அதனையே இலக்காக வைத்து இப்போது நாமும் 2500 இடங்களை ஒதுக்கும்படி கேட்கிறோம். பிரதமரோ அது பற்றி பேசுவதில்லை! எவ்வளவு தான் கொடுக்கலாம் என்கிற முடிவை அவரால் எடுக்க முடியவில்லை.
இந்திய சமுகத்தைப் பார்த்து, தேர்தலுக்கு முன்பு, மிகவும் ஏழ்மையான சமுகம் என்று மிகவும் அனுதாபப்பட்டார். அவர்கள் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட கல்வி எத்துணை முக்கியம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். ஆனால் அந்தக் கல்வியைப் பற்றி பேசாமல் கடந்து போய் விடுகிறார்! இந்திய சமுகத்திற்குக் கல்வி தேவை இல்லை என்று நினைக்கிறார் என்று தான் நமக்குத் தோன்றுகிறது.
அதிகாரம் வலிமையானது என்பார்கள். அந்த அதிகாரத்தை நாம் அளவுக்கு மீறியே கொடுத்து விட்டோமோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
பிரதமர் இந்திய மாணவர் நலன் கருதி குறிப்பாக மெட்ரிகுலேஷன் பற்றியான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று நினைவுறுத்துகிறோம்.