இப்போது நம் கண் முன்னே இருப்பது கோலகுபுபாரு இடைத்தேர்தல் மட்டும் தான்!
அத்தொகுதியில் உள்ள மக்கள் தான் அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்கிற முடிவை எடுக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் அவர்களைப் பிரதிநிதித்தவர்கள் எத்தகைய சேவைகளைக் கொடுத்தார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.
வெளியே இருந்து கொண்டு பல நூறு அவதூறுகளை அள்ளி வீசலாம். பொதுவாக எடுத்துக் கொண்டால் சிலாங்கூர் அரசாங்கம் ஏழைகளுக்குப் பல நல்ல செயல் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்பதை ஏற்றுக் கொள்ளலாம். அதில் இந்தியர்களும் பயன் பெறுகின்றனர் என்பதை மறுக்க முடியாது.
ஆனால் நாம் பேசுவது அந்தத் தொகுதி அளவில் என்ன நடந்திருக்கிறது என்பது தான். நிச்சயமாக அதே தொகுதியில் மலாய்க்காரர்களும் சீனர்களும் கூடவே இந்தியர்களும் காலங்காலமாக வாழ்ந்து கொண்டு தான் வருகின்றனர்.
நமக்குத் தெரிந்தவரை மலாய்க்காரர்களை ஏமாற்ற முடியாது. அது தானாகவே வந்து சேரும். சேராவிட்டால் அதன் பலனை அரசியல்வாதிகள் அனுபவிக்க நேரும்! அந்த அளவுக்கு அவர்களிடம் பயம் உண்டு . சீனர்களுக்கு அனைத்தும் 'உள்ளுக்குள்ளேயே' பேரம் முடிந்துவிடும். அவர்களை ஏமாற்றுவது கடினம்.
இதில் இந்தியர்கள் தான் வாயில்லா பூச்சிகள்! ஏமாற்றுவது எளிது. நமது தேவைகள் புறக்கணிக்கப்படுவது இயல்பு. நமது தேவைகள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. உணவு பொட்டலங்களைக் கொடுத்து சரிபண்ணுவது நமக்கு மட்டும் தான் நடக்கும்! இது தான் நமக்குக் கிடைக்கும் இலஞ்சம்! இதனைக் கொடுத்தே இந்திய சமுதாயத்தை சரிசெய்துவிடலாம் என்கிற எண்ணம் அரசியல்வாதிகளுக்கு உண்டு!
நமது கோரிக்கை என்ன என்பதற்குத் தான் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அங்கு வீடமைப்புத் திட்டம் நிறைவேற்றப்படாத ஒரு திட்டம் என்று கூறப்படுகிறது. அதனை நிறைவேற்றக் கூறி நாம் அழுத்தம் கொடுக்கலாம். இந்த நேரத்தில் அது நிறைவேற வாய்ப்புகள் உண்டு. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் போராட வேண்டும்.
இத்தனை நாள்கள் நடந்த பேச்சுவார்த்தைகள், பிரச்சாரங்கள், பல்வேறு கருத்துகளை அங்குள்ள தொகுதி தலைவர்கள் கேட்டிருப்பார்கள். அதன் மூலம் அவர்களுக்கு நல்ல தெளிவு கிடைத்திருக்கும். யாரை நம்பலாம், யார் போலிகள் போன்ற விபரங்கள் இப்போது தெரிந்திருக்கும்.
நீங்களே யாருக்கு உங்கள் வாக்கு என்பதை முடிவு செய்யுங்கள். குடிமுழுகிப் போக ஒன்றுமில்லை. இலஞ்சம் தவிர் என்பதை மறந்து விடாதீர்கள்!
No comments:
Post a Comment