Saturday, 27 February 2016

தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நமது இளைஞர்களுக்கு அதுவும் குறிப்பாக இடைநிலைப்பள்ளிகளிருந்து வெளியாகும் மாணவர்களுக்கு நிறைய தகவல்கள் தேவைப்படுகின்றன.

பெற்றோர்கள் படித்தவர்களாக இருந்தால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பெற்றோர்கள், குடும்ப நண்பர்கள் மூலம் அவர்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைத்து விடுகின்றன. அதனால் அவர்கள் உயர்கல்விக் கூடங்களில் சேர்வதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கின்றன.

ஆனால் படிக்காதப் பெற்றோர்களின் நிலையோ பரிதாபம்! வேதனை! தங்கள் பிள்ளைகள் நல்லபடியாகப் படித்து ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக அவர்கள் பணத்தைச் செலவழித்துக் கடைசியில் 'இதுவும் இல்லை, அதுவும் இல்லை' என்னும் நிலைக்கு ஆளாக்கப் படுகின்றனர். வீண்  பண விரயத்திற்கும் ஆளாகின்றனர். கடைசியாக,  படிக்கப் போன அவர்கள் பிள்ளைகளும் எதற்கும் பிரயோஜனம் இல்லாமல் 'என்னத்தையோ'  படித்துவெளியாகின்றனர்.

இன்றைய நிலையில், எனக்குத் தெரிந்த வரை, தகவல்களைச் சேகரிப்பதில் மலாய் மாணவர்களே முன்னணியில் நிற்கின்றனர். அவர்களின் கல்வி தேர்ச்சியினை வைத்து எங்குச் சென்று படிக்க ,முடியுமோ அங்குப் போய் சேர்ந்து விடுகின்றனர். அவர்களுக்கு ஏற்ற கல்வி அவர்களுக்குக் கிடைத்து விடுகிறது. அப்படியே அந்த மாணவர்கள் மேற்கொண்டு படிக்க அக்கறைக் காட்டவில்லை என்றால் அவர்களின் பெற்றொர்கள் அக்கறை எடுத்து அவர்களை எதாவது ஒரு தொழிற்கல்வி கற்க சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

ஒரு மலாய் மாணவனைத் தெரியும்.அவன் பரிட்சையில் எந்தப் பாடத்திலும் தேர்ச்சிபெற வில்லை. அவனை அவன் பெற்றோர்கள் GIATMARA வில்
 'என்ன கிடைக்கிறதோ' அதனைப் படிக்கட்டும் என்று அனுப்பி வைத்தார்கள். அங்கு அவன் மின்சாரம்  சம்பந்தமானப் படிப்பை மேற்கொண்டான். அங்கு முழு நேரப் பயிற்சிகள் அல்லது பகுதி நேரப் பயிற்சிகள் உண்டு. அந்த மாணவன் நல்ல முறையில் முழு நேரப்  பயிற்சியில் கலந்து கொண்டு அந்தத் தொழிற்பயிற்சியில் சிறப்பான மாணவனாக தேர்ச்சிப் பெற்றான்.  அங்குப்பெற்ற அந்தச் சிறப்பானத் தேர்ச்சியின் மூலம் அவனுக்கு தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் டிப்ளோமா படிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதனை முடித்து இப்போது அவன் நல்ல வேலையில் உள்ளான்.

பொதுவாக தொழில் நுட்ப கல்லூரியில் பயில SPM - ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நமது இளைஞர்கள் நல்ல தேர்ச்சி இருந்தும் வாய்ப்புக்களைக் கோட்டை விடுகின்றனர். அதற்கு முக்கியமான காரணம் அறியாமையே. வெளி உலகம் தெரியாதவர்களாக, அவர்களாகவே ஒரு உலகத்தைச் உருவாக்கிக் கொண்டு அதனுள்ளயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பெற்றோர் அதைவிட எதையும் அறியாதவர்களாய் அப்பாவிகளாய் இருக்கின்றனர்.

விழிப்படைந்த சமூகமாக நாம் இருந்தால் அவர்கள் செய்கின்ற தவறுகளுக்கு அவர்களை நாம் குறை சொல்லலாம். ஆனால் அவர்களின் நிலைமையே வேறு.. அவர்கள் உலகமே வேறு. 24 மணி நேரமும் ஆடலும் பாடலும், சினிமாவும் தொலைக்காட்சியும், குடியும் கூத்தும்   இருந்தால் போதும் என்னும் அவலத்துடனேயே வாழ்கின்றவர்களிடம் எதனை நாம் பெரிதாக  எதிர்பார்க்க   முடியும்?

நமது நாட்டில் ஒரு மைல்  தொலைவிற்கு  குறைந்தபட்சம் இரண்டு ம.இ.கா. கிளைகள் உள்ளன.  ஒரளாவாவது இவர்களது குரலை அரசாங்கம் கேட்கும். இந்தக் கிளைகள் அனைத்தும்  மிஞ்சி மிஞ்சிப் போனால் சுமார் 100 அங்கத்தினர்களோ அல்லது அதற்குக்குறைவானவர்களோ தான் இருப்பார்கள். அதாவது ஒரு ஐம்பது குடும்பங்கள் கூட தேறாது.இந்த ஐம்பது குடும்பங்களின் விபரங்கள் இவ்ர்களிடம் இருக்கும். அதனை வைத்தே அந்த அந்தக் குடும்பப் பிள்ளைகளின் கல்வி விபரங்களைத் தெரிந்து கொண்டு அவர்களின் மேற்கல்விக்கு உதவலாம். அவர்கள் நம்மைத் தேடி வரமாட்டார்கள். நாம் தான் அவர்களைத் தேடிப் போக வேண்டும்.அவர்களாக நம்மைத் தேடி வருகிறார்கள் என்றால் அவர்கள் விழிப்படைந்து விட்டார்கள் என்பது பொருள்.

இதில்  நமது சமுதாயத்தின் எதிர்காலம் அடங்கியுள்ளது. நமக்கென்ன என்று நாம் இன்று இருந்தோமானால் நாளை,  நாம் படித்தவர்கள், நாம் பணம் உள்ளவர்கள், நாம் பதவியில் உள்ளவர்கள்,  எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன  என்று  இறுமாப்பு கொண்டு வாழ்ந்தோமானால் நாளை அந்த நிம்மதியான வாழ்க்கைக்கு வேட்டு வைப்பவர்கள்  இன்றைய இந்த இளைஞர்கள் தான்! அதனை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.. காரணம் இவர்கள் தான் நாளைய குண்டர் கும்பல்கள்,  அடியாட்கள் இந்த சமுதாயத்தின் தீய சக்திகள் அனைத்தும்!

நண்பர்களே! நான் சொல்ல வருவதெல்லாம் இது தான். இன்றைய  நமது மாணவர்கள், நமது இளைஞர்கள் -  சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர்.அவர்கள் ஏதாவது கல்லூரிகளில் சேர, தொழிற்பயிற்சிகளில் சேர நம்மால் என்ன செய்ய முடியுமோ அதனை நாம் செய்ய வேண்டும்.நம்மிடம் இருக்கும் தகவல்கள் அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். நமக்குத் தெரிந்தவைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் கோவிலில் கூடும் நேரத்தில் இதனை ஒரு கட்டாயச் செய்தியாக பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் கொண்டுச் செல்லப்பட வேண்டும்.

நாளை நமது சமுதாயம் ஒரு வெற்றிகரமான சமுதாயமாக மாற இன்றே நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்து நம்மை நாமே உயர்த்திக் கொள்ளுவோம்!

நாளைய வெற்றிக்காக இன்றே நாம் வெற்றியை நோக்கி உழைப்போம்!





Thursday, 25 February 2016

சமீபத்தில் ஒரு வேதனையான செய்தி

சமீபத்தில் ஒரு வேதனையானச் செய்தி, செய்தித்தாள்களில் வலம் வந்தன. உணவகத்தில் பணி புரியும் ஒரு மியான்மார் இளைஞன் ஒருவன் தனது கழுத்தை வெட்டிகொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் தான் அது.

இந்தச் செய்தி எப்படியோ வெளியாகி விட்டது. அவ்வளவு தான். வெளியாகாத செய்திகள் ஏராளம்.

அதுவும் தமிழகத் தொழிலாளர்கள் பல இன்னல்களை அனுபவிக்கின்றனர். கேட்டால் வேதனையாக இருக்கும். அனைத்தும் தமிழகத்து சினிமாபாணி வில்லன்களைப் போல செயல்படும் உள்ளூர் முதலாளிகள்.

இவர்களை முதலாளிகள் என்று நான் சொல்லமாட்டேன். இவர்கள் அடியாட்கள்; பெரும்பாலும் குண்டர் கும்பலைச் சார்ந்தவர்கள். இவர்கள் பணம் பண்ணுவதற்காகவே இந்தத் தமிழகத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பவர்கள்.

இங்கும் நல்ல தரமான முதாளிகள், நல்ல உள்ளூர், வெளியூர் நிறுவனங்கள் எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலிருந்து முறையான ஒப்பந்தங்களோடு ஆவணங்களோடு இங்கு வந்து வேலை செய்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் எழவில்லை. அது போல பல நாட்டினர் இங்கு வந்து  வேலை செய்கின்றனர்.

ஆனால் பிரச்சனையெல்லாம் தமிழகக் கிராமங்களிலிருந்து இங்கு  வருபவர்களால் தான். போலி ஏஜண்டுகள் மூலம், இங்கு வருபவர்களுக்குத் தான் அடி உதை என்று பலவித பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.  அந்தக் கிராமப்புற இளைஞர்கள் அப்பவித்தனமாக இங்கு வந்து மாட்டிக் கொள்ளுகின்றனர்.

மிகவும் வருத்தப்பட வேண்டிய  ஒரு செய்தி. இங்குப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பற்காக அங்குள்ள சொத்து சுகங்களை விற்று, பலரிடம் கடன் வாங்கி கடைசியில் இங்கு வந்து மாட்டிக் கொள்ளுகின்றனர்.

அங்கிருந்து வருபவர்களிடம், இங்கு வந்து சேர்ந்ததும் விமான நிலையத்திலே அந்த ஏஜெண்டுகள்  அவர்களுடைய கடப்பிதழ்களை வாங்கி வைத்துக் கொள்ளுகின்றனர். எல்லாமே ஒரிரு மாதம் பயணம் செய்வதற்கான விசா. அதற்கு மேல் அவர்கள் இங்கு தங்க முடியாது., இப்போது இவர்கள் இங்கு தங்கவும் முடியாது, இந்தியாவிற்குப் போகவும் முடியாது என்கிற ஒரு நிலை.

வந்து விட்டார்கள் அல்லவா?  வேலை கொடுத்தால் உண்டு. இல்லாவிட்டால் ஒன்றுமில்லை. ஆனால் வேலையை எப்படியாவது எங்கேயாவது கண்டுபிடித்துக் கொடுத்து விடுவார்கள். ஆனால் சம்பளம் கொடுப்பார்களா என்பது கேள்விக்குறி. இவர்களைப் பொறுத்தவரை தமிழகத் தொழிலாளர்கள் ஏதோ ஒரு இலவச இணைப்பு மாதிரி! அவ்வளவு தான். மனிதாபிமானம் என்பதெல்லாம் இவர்களிடம் இல்லை. சம்பளம் கேட்டால் அடி! உதை! என்பதெல்லாம் இவர்களுக்குச் சர்வ சாதாரனம்!

எனக்குத் தெரிந்த ஒரு ராமஸ்வரத்தைச் சேர்ந்த ஓர் ஏழை இளைஞன். அங்குப் பணம்  கடன் வாங்கி இங்குப் பெரிய கனவுகளோடு வந்த இளைஞன். வந்ததோ ஒரு பயண விசா. எந்த விபரமும் தெரியாத அப்பாவி இளைஞன். வந்த அடுத்த நாளே கூட இருந்தவர்கள் "வெளியே எங்கும் போகக் கூடாது. போலிஸ் பார்த்தால் உள்ளே தள்ளிவிடுவார்கள்" என்று உண்மையைச் சொல்லி பயமுறுத்தி விட்டார்கள். அந்த இளைஞனால் வந்து ஒரு பத்து நாள்கள் கூடத் தாக்குப்பிடிக்க முடியவில்லை, போலிஸைக் கண்டு அவனால் பயந்து பயந்து வாழ முடியவில்லை. நான் ஊர் போகிறேன் என்று புலம்ப ஆரம்பித்து விட்டான். ஏதோ நாங்கள் எல்லாரும் சேர்ந்து அவனை ஊருக்கு அனுப்பி வைத்தோம்.

ஆனால் இப்போது அது கூட நடக்காது. எங்கே இருக்கிறோம் என்று தெரியாத இடங்களுக்கு அவர்களை வேலைகளுக்குச் சேர்த்து விடுகின்றனர்.

ஒன்று மட்டும் சொல்லுவேன். இங்கு வேலைக்கு வருவதென்றால் முறையான பயணப் பத்திரங்கள், நிறுவனங்கள் உடனான முறையான ஒப்பந்தங்கள் இவற்றோடு வாருங்கள். வேலை செய்யுங்கள். மீண்டும் தாயகத்திற்குத் திரும்பங்கள்.

இங்கு வந்தால் "நல்லா தண்ணி அடிக்கலாம்" என்று கிராமத்தில் உள்ள அப்பா அம்மாவை விட்டு, அக்காள் தங்கைளை விட்டு வராதீர்கள்.

இங்கு தண்ணியும் அடிக்கலாம்!உங்களைத் தண்ணிருக்குள்ளும் அமுக்கலாம்! எல்லாம் உங்கள் கையில்!

Saturday, 13 February 2016

பெயரில் என்ன இருக்கிறது.....?

பெயரில் என்ன இருக்கிறது என்று நம்மில் பலர் அலட்சியமாக இருந்து விடுகிறோம்.

அது சரியா? சிலருக்கு அது சரி. எதற்கு எடுத்தாலும் அலட்சியம் காட்டுபவர்களுக்கு அது சரி தான். அவர்களுக்கு இனம் இல்லை; மொழி இல்லை; கலாச்சாரம் இல்லை. எதுவுமே இல்லை! எதையும் புரிந்து கொள்ளுவதுமில்லை!

நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை. யார் எதைச் சொன்னாலும் அது தேவையா, தேவை இல்லையா என்று யோசித்துப் பார்ப்பதுமில்லை. .

ஏன் இந்தப் பீடிகை?

இப்போது தான் ஓர் உணவகத்திலிருந்து வருகிறேன் உணவகத்தில் ஒரு தாய் தனது மகனைப் பார்த்து "பர்ஷன்! பர்ஷன்!" என்று  இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கும் தனது மகனைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தார்.

நான் அதிர்ந்து போனேன். என்னடா..பெயர் இது?   எதிலுமே சேர்த்துக்கொள்ள முடியவில்லையே!

அவர்களைப் பார்ப்பதற்கும் அப்படி ஒன்றும் நவீனத் தமிழ்க் குடும்பாகத் தெரியவில்லை.  ஒரு வயதானப் பெண்மனி, இரண்டு வளர்ந்த பெண் பிள்ளைகள் அந்தச்  சிறுவனும்   அவன் தாயும். அனைவருமே கொஞ்சம் இலேசான கருமை நிறம். நெற்றியில் விபூதி. எப்படிப் பார்த்தாலும் அவர்கள் பிள்ளைகள் தமிழ்ப்பள்ளியில் படிப்பவர்கள் என்று சொல்லலாம்.

அசல் தமிழர்கள் என்று நம்பக்கூடிய இவர்கள் எப்படி இது போன்ற பெயர்களை வைக்கிறார்கள் என்பது நமக்குப் புரியவில்லை.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன வென்றால் மலேசியத் தமிழர்களின் குழைந்தைகளின்  பெயர்கள் கோவில் பூசாரிகளால் நிச்சயக்கப்படுகின்றன என்பது தொண்ணூறு விழுக்காடு உண்மை!       

நான் இங்கு பணி புரியும் ஒரு தமிழக பூசாரியை இது பற்றிக் கேட்ட போது  அவர் இங்குள்ள பூசாரிகளுக்குச் சமய அறிவு போதாமையால் இப்படி கொஞ்சம் கூட பொருத்தமில்லாதச் சொற்களைப் பயன்படுத்தி  பெயர்களை வைக்கச் சொல்லுகிறார்கள். என்பதாகச் சொன்னார். 

ட வில் ஆரம்பியுங்கள், டி யில் ஆரம்பியுங்கள், டு வில் ஆரம்பியுங்கள் என்று பெற்றோர்களிடம் சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள்?  சில நூற்றாண்டுகளாக தமிழை மறந்து வாழும் ஆப்பரிக்கத் தமிழர்களின் பெயர்கள்  மருவி  அவர்களின் உண்மைப் பெயர் என்ன என்பதைக் கூட இப்போது நம்மால் ஊகிக்க முடியவில்லை.

இங்கு நிலைமை அப்படி இல்லை. இன்னும் நம்மிடையே தமிழ் இருக்கிறது. தமிழ்ப்புத்தகங்களைப் படிக்கிறோம். தமிழ்ப்பத்திரிக்கைகள் இருக்கின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று ஏகப்பட்ட ஊடகங்கள் எல்லாம் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு இருந்தும் நமது அடையாளங்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன் கெடா மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் நாரண.திருவிடச்செல்வன் அவர்கள் தூய தமிழில் பெயர் வைப்பது பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தார். அது அறுபதாம் ஆண்டுகளில் வந்த ஒரு புத்தகம். அப்போதாவது தாத்தா, பாட்டி, சினிமா நடிகர்களின் பெயர்கள் என்று குழந்தைகளுக்குப் பெயர்களை வைத்துக் கொண்டிருந்தார்கள்

இப்போதுள்ள மருமகள்கள்  தாத்தா, பாட்டி பெயர்களை விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக நிஷா, இஷா, பிஷா, திஷா, ரிஷா ஷிஷா என்பது போன்ற பெயர்களை வைத்து நம்மைத் திணறடிக்கிறார்கள்! 

இப்படித்தான் "மாடர்ன்" னாக பெயர் வைப்போம் என்றால் நாம் தமிழர்கள் என்னும் அடையாளத்திற்காகவாவது  நிஷா சின்னதுரை, இஷா இளங்கோவன், திஷா திருவாசகம், ரிஷா ரத்தினம், ஷிஷா செல்வதுரை என்று பெயர் வைத்தால் நமது கொஞ்ச நஞ்ச அடையாளமாவது  நீடிக்கும்.,அதனை ஏன் நாம் புறம் தள்ள  வேண்டும்?  

ஐ.நா. சபையில்,  தென் ஆப்பரிக்க  பிரதிநிதியாக அங்கம் வகித்த நவநீதம் பிள்ளை என்பவரைப்  பலர் அறிவர் அவர் ஒரு தமிழ்ப்பெண் என்பதை அவருடைய பெயர் தானே ஆதாரமாக விளங்குகிறது. இல்லாவிட்டால் அவரை நாம் கறுப்பர்கள் பட்டியலில் தானே சேர்க்க வேண்டி வரும்?

அதே போல,  தென் அமெரிக்காவின் ஒரு பகுதியில் இருக்கும் GUYANA என்னும் நாட்டின் ஆட்சி மொழி ஆங்கிலம். பல மொழிகள் அங்கு பேசுப்படுகின்றன. அந்த நாட்டின் பிரதமர் ஒரு தமிழர்.அவர் பெயர் மோசஸ் நாகமுத்து.மோசஸ் என்பது கிறிஸ்துவப் பெயராக இருந்தாலும் அவருடைய பரம்பரைப் பெயரான நாகமுத்து என்பது அவர் ஒரு தமிழர் என்பதைக் காட்டிக் கொடுக்கின்றதே! அவருடைய மூதாதையர் தமிழ் நாட்டிலிருந்து அங்கு பிழைக்கச் சென்றவர்கள் என்பதற்கான அடையாளம் அது தானே!  

பெற்றோர்களே! குழந்தைகளின் பெயரில் அலட்சியம் காட்டாதீர்கள். உங்கள் பெயரை உங்கள் பிள்ளைகள் சொல்ல வேண்டும். வெள்ளைக்காரர்கள் தங்களது குடும்பப் பெயரை மிகவும் மதிக்கிறார்கள்.

நமக்கும் அந்தக் கடப்பாடு உண்டு.பெயரில் எல்லாமே உண்டு. அதில் நமது சரித்திரமே உண்டு. அலட்சியம் வேண்டாம்!