Saturday, 30 July 2016
சாலை விளக்கிலும் அடிதடி!
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "கபாலி" திரைப்படம் சில சமீபத்திய நிகழ்ச்சிகளை ஞாபகத்திற்குக் கொண்டுவந்துவிட்டது.
எங்கள் நிறுவனத்தின் முன்னே சாலை சமிக்ஞை விளக்குகள் உள்ளன. எங்கள் பகுதியைச் சுற்றி நிறையவே பெரிய பெரிய நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன.
மால 5.30 லிருந்து சுமார் 7.30 வரை வாகனங்கள் போவதும் வருவதுமாக கட்டுப்பாடுகள் இல்லாமல் ஓடிகொண்டிருக்கும்! வேலை முடிந்து வீடு போகும் நேரம். எல்லாம் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருப்பார்கள்!
அப்போது! சமிக்ஞை, சிவப்பு விளக்கைக் காட்டியதால் கார்கள் அனைத்தும் நின்றன. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினான். அவன் பின்னால் வந்த கார் ஒன்றும் நின்றது. காரிலிருந்து, ஓட்டுனரையும் சேர்த்து, மூன்று இளஞர்கள் இறங்கினார்கள். அவர்கள் கையில் இரும்புத்தடி, கம்புகள் இருந்தன. அவர்களைப் பார்த்ததும் அந்த இளஞன் மோட்டார் சைக்களைப் போட்டுவிட்டு உடனடியாக ஓட்டமெடுத்தான்! அந்த இளைஞர்கள் அவனை விரட்டிப்பிடித்து அவனை இரும்பத்தடி, கம்புகள் கொண்டு அடி அடி என்று அடித்தனர்.அவனோ அவர்களை மீறிக்கொண்டு ஓடினான்; இவர்கள் விரட்டினர்; அடித்தனர். அடிதடி ஓயவில்லை.
பச்சை விளக்கு வந்தது; மஞ்சல் விளக்கு வந்தது; சிவப்பு விளக்கு வந்தது. கார்கள் வெளியாக முடியவில்லை! பிறகு, அந்தக்காரில் வந்த இளைஞர்கள் சாவகாசமாக வந்து காரை எடுத்துக் கொண்டு சென்றனர்! அந்த இளைஞன் எப்படியோ தப்பித்துவிட்டான்!
இப்படித்தான் இன்னொரு சம்பவம். அண்ணனுக்குத் தங்கை மேல் சந்தேகம். தங்கை கிளினிக்கில் 'சிகிச்சை' க்காக காத்திருந்தார். உள்ளே புகுந்தான் அண்ணன். கத்தியை எடுத்து தாறுமாறாக வெட்டினான். தங்கை தப்பிக்க நடுவீதிக்கே வந்துவிட்டார். ஆனாலும் அவன் விடவில்லை. வந்த வேலையை முடித்துவிட்டுத் தான் போனான் அண்ணன்.
சரி! "கபாலி" திரைப்படம் வந்த பிறகு நடந்த நிகழ்ச்சி. ஸ்தாப்பாக் சமிக்ஞை விளக்கு. கார் வந்து நின்றது. காரின் இடது பக்கமும் வலது பக்கமும் இரண்டு மோட்டார் சைக்கள்களிலும் இரண்டு, இரண்டு பேர். இரண்டு பக்கமுமிருந்து உள்ளே இருந்தவரை - கந்தசாமி என்னும் கந்துவட்டிகாரரை - நோக்கி பதினாறு துப்பாக்கிச்சூடுகள். இது குண்டர் கும்பல்களின் சண்டை எனப் போலிஸ் வகைப்படுத்துகிறது.
இது தான் இன்றைய நமது நிலை. எங்கு வேண்டுமானாலும் சண்டை போடலாம், அடிதடி நடத்தலாம், சுட்டுத் தள்ளலாம் கபாலி மூலம் பா.ரஞ்சித் சொல்ல வருவது மிகைப்படுத்தல் அல்ல! நமக்கு நாமே அடித்துக் கொண்டு சாக வேண்டும்! அதற்குக் காவல் துறையும் உடந்தை எனவும் சொல்லப்படுகிறது!
நிச்சயமாக மாற்றங்கள் வரும் என எதிர்பார்ப்போம்! கபாலி மூலம் நல்ல செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது. தலைவர் சொல்லுவதை தம்பிகள் கேட்பார்கள் என் நம்புவோம்! அடிதடிகளைத் தவிர்ப்போம்!
சாலை விளக்குகளை மதிப்போம்!
Thursday, 28 July 2016
நான் ஏழையா...? வாய்ப்பே இல்லே..!
இப்போது, இந்த நிமிடம் கையில் காசு இல்லை என்பது உண்மை தான். ஏன், நாளைக்குக் கூட கையில் காசு இல்லாமல் போகலாம்! அதற்காக நான் ஏழையா, என்ன? வாய்ப்பே இல்லை! இன்றைய நடைமுறையில் சொல்ல வேண்டுமானால் .....சான்சே இல்லே!
பணம் வரும் போகும். அது உருண்டு கொண்டு தான் இருக்கும்! அதை ஒரு இடத்தில் நிற்க வைக்க முடியாது!
அப்படித்தான் நமது பணமும். கையில் சம்பளம் வந்ததும் இருபது விழுக்காடு, அதாவது நமது மாதச் சம்பளத்தின் முதல் செலவு என்பதே இருபது விழுக்காடு சேமிப்பில் முதலீடு செய்வது தான். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை! அதன் பிறகு தான் மற்றைய செலவுகள். இந்த இருபது விழுக்காடு சேமிப்பு என்பது ஒன்றும் புதிதல்ல! பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த வழக்கம் நடைமுறையில் இருந்திருக்கிறது! அது பணமாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் அந்த இருபது விழுக்காடு செயல்பாட்டில் இருந்திருக்கிறது.
அதனை வைத்துத் தான் உங்கள் வருமானத்தில் இருபது விழுக்காட்டுப் பணம் சேமிப்பாக இருக்க வேண்டும் என்று இன்றும் சொல்லப் படுகிறது. அப்படியே வங்கியில் சேமிப்பாக இல்லாவிட்டாலும் காப்புறுதியில் சேமிப்பாகக் கொண்டு வரலாம். காப்புறுதியில் முதலீடு செய்வது என்பது இன்னும் பல நன்மைகளை உங்களுக்குக் கொண்டு வரும். காப்புறுதி கட்டி முடிக்கும் போது நீங்கள் போட்ட பணத்தைவிட உங்களுக்குக் கூடுதலாகவே கிடைக்கும். அப்படி இடையே நீங்கள் மரணித்தாலும் உங்கள் குடும்பம் பயனடையும். காப்புறுதி என்பது பல நன்மைகளைக் கொண்டுவரும்.
நீங்கள் வேலைசெய்து தான் பிழைக்க வேண்டும் என்னும் நிலையில் இருந்தால் , அதே சமயத்தில் நீங்கள் வேலையிலிருந்து ஒய்வு பெறும் போது, ஓர் இலட்சாதிபதியாக வேண்டும் என்னும் கனவு உங்களுக்கு இருந்தால், உங்களுக்குக் காப்புறுதியே சிறந்த முதலீடு. நீங்கள் நினைத்தது போல நீங்கள் விரும்பிய வேலையும் செய்யலாம் அதே சமயத்தில் வேலையிலிருந்து ஒய்வு பெறும் போது இலட்சாதிபதியாகவும் ஆகலாம்.
எல்லாமே ஒரு திட்டமிடல் மூலம் அனைத்தும் சாத்தியமே! வெற்றிகரமான ஒரு பாதையைத் தேர்ந்து எடுத்து அந்தப் பாதையையே பின்பற்றுங்கள். முடிந்தவரை உங்களுடைய காப்புறுதி சேமிப்பை ஐம்பது வயதோடு முடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நல்ல நிலையில் இருக்கும் போதே ஒரு வலுவான சேமிப்பை வைத்துக் கொள்ளுங்கள்.
எல்லாமே நமது கையில் தான்! ஏழை என்கிற நினைப்பே வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்! மனத்தாலும் நினைக்காதீர்கள்!
இப்போது சொல்லுங்கள்: நீங்கள் ஏழையா! வாய்ப்பே இல்லை!
Wednesday, 27 July 2016
கொடுப்பதற்கும் கையை நீட்டுங்கள்!
வாங்குவதற்கென்றே பிறந்தவர்கள் பலர் இருக்கின்றனர்! வாங்குவதைத் தவிர இவர்களுக்குக் கொடுக்கும் பழக்கம் என்பதே கிடையாது!
கைநீட்டி வாங்குவதற்கு நான் தயார்! கைநீட்டிக் கொடுப்பதற்கு நான் தயாரில்லை! என்னும் நிலைமையில் தான் பலர் இருக்கின்றனர்!
குறிப்பாக அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் இன்னும் உயர்பதவியில் உள்ளவர்கள் பலருக்கு வாங்குகின்ற பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்களே தவிர கொடுக்கின்ற பழக்கம் உள்ளவர்களாக இல்லை!
ஏன்? ஏழை வீட்டுப் பணமோ, பணக்காரன் வீட்டுப் பணமோ , யார் வீட்டுப் பணமோ எனக்குப் பணம் வந்தால் சரி, என்னும் மனோபாவம் உள்ளவர்களே அதிகம்! இது போன்ற மனநிலையில் உள்ளவர்கள் தான் அரசாங்கத்தால் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட மானியங்கள், தமிழ்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்கள் அனைத்திலும் 'கைவைத்து' காசாக்கிவிடுகிறார்கள்!, நாம் அதை விடுவோம். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள்! அரசியல்வாதிகளாய் பார்த்து திருந்தினால் தான் உண்டு!
நாம் இப்போது சராசரி குடும்பங்களைப் பார்ப்போம். இங்குள்ள நிலவரம் எப்படி? ஏறக்குறைய மேல் உள்ள நிலை தான்! அப்பா, அம்மா எதையும் சேர்த்து வைத்திருந்தால் பிள்ளைகளிடையே பலவித போராட்டங்கள்! எனக்கு, உனக்கு என்று பெற்றோர்களைப் பிய்த்து எடுத்து விடுவார்கள்! எவ்வளவு தான் பெற்றோர்கள் அவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்திருந்தாலும் அவர்களுடைய EPF பணத்தைப் பிடுங்க ஏகப்பட்ட போராட்டங்கள்!
இப்படி எங்குப் பார்த்தாலும் 'எனக்குக் கொடு, எனக்குக் கொடு' என்று அடித்துக் கொள்கிறார்களே தவிர யாருக்கும் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணமே வருவதில்லை! சொந்தக் குடும்பத்திலும் அப்படித்தான் வெளியிலும் அப்படித்தான்!
இரண்டு கைகள் நமக்கு எதற்கு இருக்கின்றன? வாங்குவதற்கு மட்டும் தானா? கொடுப்பதற்கும் தானே! அட! கர்ணனைப் போல நாம் கொடுக்க முடியாவிட்டாலும் கொஞ்சமாவது கிள்ளி கிள்ளியாவது நாம் கொடுக்கலாம் அல்லவா! நம்மால் முடிந்தது என்னவோ அதனையாவது கொடுக்கலாம் அல்லவா!
நாம் அப்படிக் கொடுப்பதற்கு ஒன்றுமில்லாமலா போய்விட்டது? நம்மிடையே ஏழைகள் என்று யாரும் சொல்லுவதில்லை என்பது உண்மை தான்.ஆனாலும் நம்மிடையே எத்தனையோ முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் நிறையவே இருக்கின்றன. சரி! உங்களால் அள்ளி அள்ளிக் கொடுக்க முடியவில்லை. இந்த இல்லங்களுக்கு அரிசி, பால் பௌடர், மைலோ போன்ற பொருட்களை வாங்கி இந்த இல்லங்களுக்குக் கொடுத்து உதவலாமே!
கொடுத்து உதவுவதற்கு எத்தனை எத்தனையோ வழிகள் இருக்கின்றன..எண்ணிக்கையிலா மக்கள் நமது உதவிக்காகக் காத்துக் கிடக்கின்றனர். நம்மால் அனைவருக்கும் உதவ முடியாது. ஒரு சிலருக்காவது நாம் உதவத்தான் வேண்டும்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றால் எப்படி? அந்த ஏழைக்கு நீங்கள் தான் உங்களின் உதவியின் மூலம் சிரிப்பைக் கொண்டு வரவேண்டும்.
கடைசியாக, நண்பர்களே! மற்றவர்களுக்கு உங்கள் கையை நீட்டி உதவும் போது தான் உங்கள் மனம் நிறைவாக இருக்கும்! வாங்குவதற்கு மட்டுமே நான் கையை நீட்டுவேன் என்றால் உங்கள் மனம் எல்லாக் காலங்களிலும் தத்தளித்துக் கொண்டும், தடுமாறிக் கொண்டும் தான் இருக்கும்!
கொஞ்சம் கொடுப்பதற்கும் உங்கள் கையை நீட்டுங்கள்!
Subscribe to:
Posts (Atom)