Saturday 30 July 2016

சாலை விளக்கிலும் அடிதடி!


வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "கபாலி" திரைப்படம் சில சமீபத்திய நிகழ்ச்சிகளை ஞாபகத்திற்குக் கொண்டுவந்துவிட்டது.

எங்கள் நிறுவனத்தின் முன்னே சாலை சமிக்ஞை விளக்குகள்  உள்ளன. எங்கள்  பகுதியைச் சுற்றி  நிறையவே பெரிய பெரிய நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன.

மால 5.30 லிருந்து சுமார் 7.30 வரை வாகனங்கள் போவதும் வருவதுமாக கட்டுப்பாடுகள் இல்லாமல் ஓடிகொண்டிருக்கும்! வேலை முடிந்து வீடு போகும் நேரம். எல்லாம் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருப்பார்கள்!

அப்போது!  சமிக்ஞை,  சிவப்பு விளக்கைக் காட்டியதால்  கார்கள் அனைத்தும் நின்றன. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினான். அவன் பின்னால் வந்த கார் ஒன்றும் நின்றது.  காரிலிருந்து, ஓட்டுனரையும் சேர்த்து, மூன்று இளஞர்கள் இறங்கினார்கள். அவர்கள் கையில் இரும்புத்தடி, கம்புகள் இருந்தன. அவர்களைப் பார்த்ததும் அந்த இளஞன் மோட்டார் சைக்களைப் போட்டுவிட்டு உடனடியாக ஓட்டமெடுத்தான்! அந்த இளைஞர்கள் அவனை விரட்டிப்பிடித்து அவனை இரும்பத்தடி, கம்புகள் கொண்டு அடி அடி என்று அடித்தனர்.அவனோ அவர்களை மீறிக்கொண்டு ஓடினான்; இவர்கள் விரட்டினர்; அடித்தனர். அடிதடி ஓயவில்லை.

பச்சை விளக்கு வந்தது; மஞ்சல் விளக்கு வந்தது; சிவப்பு விளக்கு வந்தது. கார்கள் வெளியாக முடியவில்லை! பிறகு,  அந்தக்காரில் வந்த இளைஞர்கள் சாவகாசமாக வந்து காரை எடுத்துக் கொண்டு  சென்றனர்! அந்த இளைஞன் எப்படியோ தப்பித்துவிட்டான்!

இப்படித்தான் இன்னொரு சம்பவம். அண்ணனுக்குத் தங்கை மேல் சந்தேகம். தங்கை கிளினிக்கில் 'சிகிச்சை' க்காக காத்திருந்தார். உள்ளே புகுந்தான் அண்ணன். கத்தியை எடுத்து தாறுமாறாக  வெட்டினான். தங்கை தப்பிக்க நடுவீதிக்கே வந்துவிட்டார். ஆனாலும் அவன் விடவில்லை.  வந்த வேலையை முடித்துவிட்டுத் தான் போனான் அண்ணன்.

சரி! "கபாலி" திரைப்படம் வந்த பிறகு நடந்த நிகழ்ச்சி. ஸ்தாப்பாக் சமிக்ஞை விளக்கு. கார் வந்து நின்றது.  காரின் இடது பக்கமும் வலது பக்கமும் இரண்டு மோட்டார் சைக்கள்களிலும் இரண்டு,  இரண்டு பேர். இரண்டு பக்கமுமிருந்து உள்ளே இருந்தவரை - கந்தசாமி என்னும் கந்துவட்டிகாரரை - நோக்கி பதினாறு துப்பாக்கிச்சூடுகள்.  இது குண்டர் கும்பல்களின் சண்டை  எனப் போலிஸ் வகைப்படுத்துகிறது.

இது தான் இன்றைய நமது நிலை. எங்கு வேண்டுமானாலும் சண்டை போடலாம், அடிதடி நடத்தலாம், சுட்டுத் தள்ளலாம்  கபாலி மூலம் பா.ரஞ்சித் சொல்ல வருவது மிகைப்படுத்தல் அல்ல! நமக்கு நாமே அடித்துக் கொண்டு சாக வேண்டும்! அதற்குக் காவல் துறையும் உடந்தை எனவும் சொல்லப்படுகிறது!

நிச்சயமாக மாற்றங்கள் வரும் என எதிர்பார்ப்போம்! கபாலி மூலம் நல்ல செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது. தலைவர் சொல்லுவதை தம்பிகள் கேட்பார்கள் என் நம்புவோம்! அடிதடிகளைத் தவிர்ப்போம்!

சாலை விளக்குகளை மதிப்போம்!


No comments:

Post a Comment