Thursday 28 July 2016

நான் ஏழையா...? வாய்ப்பே இல்லே..!


இப்போது,  இந்த நிமிடம் கையில் காசு இல்லை என்பது உண்மை தான். ஏன், நாளைக்குக்  கூட கையில் காசு இல்லாமல் போகலாம்! அதற்காக நான் ஏழையா, என்ன?  வாய்ப்பே இல்லை! இன்றைய நடைமுறையில் சொல்ல வேண்டுமானால் .....சான்சே இல்லே!

பணம் வரும் போகும். அது உருண்டு  கொண்டு தான் இருக்கும்! அதை ஒரு இடத்தில் நிற்க வைக்க முடியாது!

அப்படித்தான் நமது பணமும். கையில் சம்பளம் வந்ததும் இருபது விழுக்காடு,  அதாவது நமது மாதச் சம்பளத்தின் முதல் செலவு என்பதே இருபது விழுக்காடு சேமிப்பில் முதலீடு செய்வது தான். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை! அதன் பிறகு தான் மற்றைய செலவுகள். இந்த இருபது விழுக்காடு சேமிப்பு என்பது ஒன்றும் புதிதல்ல! பல  ஆண்டுகளுக்கு முன்னரே இந்த வழக்கம் நடைமுறையில் இருந்திருக்கிறது! அது பணமாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் அந்த இருபது விழுக்காடு செயல்பாட்டில் இருந்திருக்கிறது.

அதனை வைத்துத் தான் உங்கள் வருமானத்தில் இருபது விழுக்காட்டுப் பணம் சேமிப்பாக இருக்க வேண்டும் என்று இன்றும் சொல்லப் படுகிறது.  அப்படியே வங்கியில் சேமிப்பாக இல்லாவிட்டாலும் காப்புறுதியில் சேமிப்பாகக் கொண்டு வரலாம். காப்புறுதியில் முதலீடு செய்வது என்பது இன்னும் பல நன்மைகளை உங்களுக்குக் கொண்டு வரும். காப்புறுதி கட்டி முடிக்கும் போது நீங்கள் போட்ட பணத்தைவிட உங்களுக்குக் கூடுதலாகவே கிடைக்கும். அப்படி இடையே நீங்கள் மரணித்தாலும் உங்கள் குடும்பம் பயனடையும். காப்புறுதி என்பது பல நன்மைகளைக் கொண்டுவரும்.

நீங்கள் வேலைசெய்து தான் பிழைக்க வேண்டும் என்னும்  நிலையில் இருந்தால் , அதே சமயத்தில் நீங்கள் வேலையிலிருந்து ஒய்வு பெறும் போது, ஓர் இலட்சாதிபதியாக வேண்டும் என்னும் கனவு உங்களுக்கு இருந்தால், உங்களுக்குக் காப்புறுதியே சிறந்த முதலீடு. நீங்கள் நினைத்தது போல நீங்கள் விரும்பிய வேலையும் செய்யலாம் அதே சமயத்தில் வேலையிலிருந்து ஒய்வு பெறும் போது இலட்சாதிபதியாகவும் ஆகலாம்.

எல்லாமே ஒரு திட்டமிடல் மூலம் அனைத்தும் சாத்தியமே! வெற்றிகரமான ஒரு பாதையைத் தேர்ந்து எடுத்து  அந்தப் பாதையையே பின்பற்றுங்கள். முடிந்தவரை உங்களுடைய காப்புறுதி சேமிப்பை ஐம்பது வயதோடு முடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நல்ல நிலையில் இருக்கும் போதே ஒரு வலுவான சேமிப்பை வைத்துக் கொள்ளுங்கள்.

எல்லாமே நமது கையில் தான்! ஏழை என்கிற நினைப்பே வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்! மனத்தாலும் நினைக்காதீர்கள்!

இப்போது சொல்லுங்கள்: நீங்கள் ஏழையா! வாய்ப்பே இல்லை!

No comments:

Post a Comment