Wednesday 27 July 2016

கொடுப்பதற்கும் கையை நீட்டுங்கள்!


வாங்குவதற்கென்றே பிறந்தவர்கள் பலர் இருக்கின்றனர்! வாங்குவதைத் தவிர இவர்களுக்குக் கொடுக்கும் பழக்கம் என்பதே கிடையாது!

கைநீட்டி வாங்குவதற்கு நான் தயார்!  கைநீட்டிக் கொடுப்பதற்கு நான் தயாரில்லை! என்னும் நிலைமையில் தான் பலர் இருக்கின்றனர்!

குறிப்பாக அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் இன்னும் உயர்பதவியில் உள்ளவர்கள் பலருக்கு வாங்குகின்ற பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்களே தவிர கொடுக்கின்ற பழக்கம் உள்ளவர்களாக இல்லை!

ஏன்? ஏழை வீட்டுப் பணமோ, பணக்காரன் வீட்டுப் பணமோ , யார் வீட்டுப் பணமோ எனக்குப் பணம் வந்தால் சரி,  என்னும் மனோபாவம் உள்ளவர்களே அதிகம்!  இது போன்ற மனநிலையில் உள்ளவர்கள் தான் அரசாங்கத்தால் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட மானியங்கள், தமிழ்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்கள் அனைத்திலும் 'கைவைத்து' காசாக்கிவிடுகிறார்கள்!, நாம் அதை விடுவோம். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள்! அரசியல்வாதிகளாய் பார்த்து திருந்தினால் தான் உண்டு!

நாம்  இப்போது சராசரி குடும்பங்களைப் பார்ப்போம். இங்குள்ள  நிலவரம் எப்படி?  ஏறக்குறைய மேல் உள்ள நிலை தான்! அப்பா, அம்மா எதையும் சேர்த்து வைத்திருந்தால் பிள்ளைகளிடையே பலவித போராட்டங்கள்! எனக்கு, உனக்கு என்று பெற்றோர்களைப் பிய்த்து எடுத்து விடுவார்கள்! எவ்வளவு தான் பெற்றோர்கள் அவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்திருந்தாலும்  அவர்களுடைய EPF பணத்தைப் பிடுங்க ஏகப்பட்ட போராட்டங்கள்!

இப்படி எங்குப் பார்த்தாலும் 'எனக்குக் கொடு, எனக்குக் கொடு' என்று அடித்துக் கொள்கிறார்களே தவிர யாருக்கும் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணமே வருவதில்லை!  சொந்தக் குடும்பத்திலும் அப்படித்தான் வெளியிலும் அப்படித்தான்!

இரண்டு கைகள் நமக்கு எதற்கு இருக்கின்றன? வாங்குவதற்கு மட்டும் தானா? கொடுப்பதற்கும் தானே! அட! கர்ணனைப் போல நாம் கொடுக்க முடியாவிட்டாலும் கொஞ்சமாவது கிள்ளி கிள்ளியாவது நாம் கொடுக்கலாம் அல்லவா! நம்மால் முடிந்தது என்னவோ அதனையாவது கொடுக்கலாம் அல்லவா!

நாம் அப்படிக் கொடுப்பதற்கு ஒன்றுமில்லாமலா போய்விட்டது?  நம்மிடையே ஏழைகள் என்று யாரும் சொல்லுவதில்லை என்பது உண்மை தான்.ஆனாலும் நம்மிடையே எத்தனையோ முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் நிறையவே இருக்கின்றன.  சரி! உங்களால் அள்ளி அள்ளிக் கொடுக்க முடியவில்லை.  இந்த இல்லங்களுக்கு அரிசி, பால் பௌடர், மைலோ போன்ற பொருட்களை வாங்கி இந்த இல்லங்களுக்குக் கொடுத்து  உதவலாமே!

கொடுத்து உதவுவதற்கு  எத்தனை எத்தனையோ வழிகள் இருக்கின்றன..எண்ணிக்கையிலா மக்கள் நமது உதவிக்காகக் காத்துக் கிடக்கின்றனர். நம்மால் அனைவருக்கும் உதவ முடியாது. ஒரு சிலருக்காவது நாம் உதவத்தான் வேண்டும்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றால் எப்படி? அந்த ஏழைக்கு நீங்கள் தான் உங்களின் உதவியின் மூலம் சிரிப்பைக் கொண்டு வரவேண்டும்.

கடைசியாக, நண்பர்களே! மற்றவர்களுக்கு உங்கள் கையை நீட்டி உதவும் போது தான் உங்கள் மனம் நிறைவாக இருக்கும்! வாங்குவதற்கு மட்டுமே நான் கையை நீட்டுவேன் என்றால் உங்கள்  மனம் எல்லாக் காலங்களிலும் தத்தளித்துக் கொண்டும், தடுமாறிக் கொண்டும் தான் இருக்கும்!

கொஞ்சம் கொடுப்பதற்கும் உங்கள் கையை நீட்டுங்கள்!




No comments:

Post a Comment