Tuesday, 22 November 2016
நஜிப்: போராட்டம் போலியானது!
'பெர்சே' யின் இன்றைய (19.11.2016) ஐந்தாவது பேரணி போலியானது என தனது வலைப்பதிவில் வர்ணித்திருக்கிறார் பிரதமர் நஜிப்!
இதுவரை நடந்த பேரணிகள் அனைத்தும் எதிரணியினர் செய்த ஏற்பாடுகள் தான்! மக்களால் தேர்ந்தெதெடுக்கப்பட்ட ஓர் அரசை கவிழ்ப்பது தான் அவர்கள் நோக்கம் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
ஆனால் அவர் சொல்லும்: "மக்கள் அரசாங்கத்திடம் சேவையைத் தான் எதிர்பார்க்கிறார்கள்" என்று சொல்லுவது தான் நமக்குக் கொஞ்சம் நெருடுகிறது!
பிரதமர் சேவை என்று எதனைக் குறிப்பிடுகிறார்? விலைவாசிகள் எக்கச்சக்கமாக ஏறிவிட்டன. அரசாங்கம் எதனையும் கட்டப்படுத்த முடியும் என்னும் நிலையில் இல்லை என்று தான் சராசரி மனிதன் நினைக்கிறான்.
பெட்ரோல் விலை 15 காசு ஏற்றப்பட்டது சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதனை ஒட்டி எல்லா விலைகளும் ஏறி விட்டன.
சமையல் எண்ணைய் விற்பனையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று சும்மா அமைச்சர்கள் அறிக்கைவிட்டால் போதாது. உண்மையில் இப்போது எண்ணைய் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை! பிலாஸ்டிக் பைகளில் விற்கப்படும் விலை குறைவான எண்ணைய் இப்போது முற்றிலுமாகக் கிடைக்கவில்லை. எத்தனையோ ஏழைகள், நடுத்தரக் குடும்பங்கள் இந்தக் குறைந்த விலை சமையல் எண்ணையைத் தான் பயன் படுத்துகிறார்கள். உண்மையைச் சொன்னால் கடந்த ஐந்து, ஆறு மாதங்களாக இந்த எண்ணைய் முற்றிலுமாக கடைகளிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது!அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை!
இன்னொன்று குழந்தைகளின் பால் மாவு என்பது இன்னொரு முக்கியமான விஷயம். அதன் விலை கிடுகிடு என்று ஏறிக்கொண்டே போனால் குடும்பங்கள் எப்படி அதனைத் தாக்குப்பிடிக்க முடியும்? விலை குறையும் என்னும் சாத்தியமே இல்லாமல் தலைதெறிக்க அதன் விலை ஏறிக்கோண்டிருக்கிறது! இதற்கு யார் பொறுப்பு?
அடுத்த மாதத்திலிருந்து சமையல் எரிவாயு (gas cylinder) விலை இன்னும் ஏழு வெள்ளி அதிகரிக்கப் போவாதாக இப்போது பேசுப்படுகிறது. கடைக்காரர்களே இதனைச் சொல்லுகிறார்கள். ஆக, அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்! இதன் விலை ஏற்றம் இன்னும் அதிகமானப் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆனால் பிரதமர் நஜிப் அவர்கள் மக்கள் சேவையைத் தான் எதிர்பார்க்கிறார்கள் என்கிறார். அவர் எதனைச் சேவை என சொல்ல வருகிறார் என்பது நமக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது!
இப்படி விலை ஏற்றத்தை கண்டும் காணாதது போல் இருக்கும் பிரதமர் கொஞ்சம் மக்கள் பக்கம் திரும்பி தனது சேவையைச் சரியான வழியில் கண்காணித்து மக்களின் பிரச்சனைகளைக் கவனித்தால் நாம் அவரைப் போற்றலாம், புகழலாம்!
பிரதமர் அவர்களே! உங்களிடம் நாங்கள் சேவையை எதிர்பார்க்கிறோம். சேவையில் போலி வேண்டாம்!
Friday, 18 November 2016
மோடி அதிரடி! மக்கள் அவதி!
மோடி அதிரடியான முடிவெடுத்தார்! இப்போது மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் மூழ்கிருக்கின்ற்னர்! பல பிரச்சனைகள்; பல துயரங்கள்; பல இன்னல்கள். பல இறப்புக்கள்; பல துக்கங்கள் இன்னும் பல பல!
ஐனூறு ருபாய் நோட்டுக்களும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் செல்லாது என்று மோடி அறிவித்த அந்த நொடியிலிருந்து இதுவரை பல ஏழை எளிய மக்கள் மட்டும் அல்ல நடுத்தரக் குடும்பங்களும் பல வகைகளிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்!
நடுத்தர மக்கள் எப்படியோ ஏதோ சில வழிகளில் தப்பித்துக் கொள்ளுகின்றனர். அவர்களுக்கும் துன்பம் தான். ஆனால் அவர்கள் எப்படியோ யாரையோ பிடித்து தங்களது காரியங்களைச் சாதித்துக் கொள்ளுகின்றனர்.
ஏழை மக்களின் துயரக்குகுரல் தான் நம்மையும் துயரத்தில் ஆழ்த்துகிறது.. திருமணம் நின்று போனது, இறந்தோரை அடக்கம் செய்ய முடியவில்லை, நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வழியில்லை, குழந்தைகளுக்கு உணவு தர முடியவில்லை என்று இப்படி ஏகப்பட்ட அவலக்குரல்; அழுகைக்குரல்.
மிகவும் வருத்தத்திற்கு உரியது தான். அதில் ஐயமில்லை. ஒன்று மட்டும் நமக்குப் புரிகிறது. நமது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிரமத்திற்கு உள்ளாகும் போது நாம் யாரும் அவர்களைக் கண்டு கொள்வதில்லை. நமது சிரமத்தைபற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறோம். நமது பிரச்சனை ஒரு வேளை அவசரமில்லாத பிரச்சனையாக இருக்கலாம். நாளை செய்து கொள்ளலாம். அல்லது அதற்கு அடுத்த நாள் கூட செய்து கொள்ளலாம். இந்த வேளையில் இப்போது யாருக்கு உதவி தேவைப் படுகிறதோ அவர்களுக்கு நாம் உதவ முன் வரவேண்டும். அப்படி உதவி செய்தவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை நாம் வாழ்த்துகிறோம். ஆனால் அப்படி உதவும் நிலையில் இருந்தும் உதவாதவர்கள் நிறையவே இருப்பார்கள்..அவர்களுக்காக நாம் வருந்தத்தான் வேண்டியிருக்கிறது.
ஆபத்து அவசர வேளைகளில் நாம் உதவத்தான் வேண்டும். அது நமது கடமை. சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர், பலத்தரபட்ட மக்கள் நேரங்காலம் பாராமல்.தங்களால் முடிந்தவரை உதவினர். அரசியல்வாதிகள் தான் இதற்கு விதிவிலக்கு. மக்கள் மனிதாபிமானம் உள்ளவர்கள். இது பணம் சம்பந்தப்பட்டது என்பதால் மனிதாபிமானம் கொஞ்சம் விலகிப்போய்விட்டதாகாவே நாம் நினைக்க வேண்டியிருக்கிறது.
நாட்டின் மேம்பாட்டுக்காக சில நடவடிக்கைகள் எடுக்கும் போது பாதிப்புக்கள் வரத்தான் செய்யும். அதிலும் ஏழை மக்கள் பாதிக்கப்படும் போது நமக்கும் அது வருத்தத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஆனால் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் இந்தப் பிரச்சனைகள் எளிதாகக் களையப்பட வேண்டியவை. ஆனால் நம்மிடையே உள்ள அந்த அலட்சியம், ஏழை என்றால் இரக்க உணர்வு நம்மிடம் இல்லை.
மோடியின் இந்த நடவடிக்கையில் சில குறைபாடுகள் இருக்கலாம். "இப்படித்தான் செய்யணுமா, அப்படிச் செய்யலாமே!" என்று குறை சொல்லுவதில் பயனில்லை! இப்போது அவர் இப்படித்தான் செய்திருக்கிறார்! இப்படியும் செய்யலாம் என்பது அவரின் நிலைப்பாடு.
இது வரையில் வந்த செய்திகளைப் பார்க்கும் போது பல கோடிகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன! இன்னும் வரும்!
இது வெற்றியா, தோல்வியா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
Thursday, 17 November 2016
அம்மா! நீங்கள் நலமா?
அம்மாவை நினைத்தால் நமக்கு இன்னும் தலை சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது!
தமிழக முதல்வர் அம்மா அவர்கள் உடல்நிலை தேறி வருகிறார், வருகிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர மற்றபடி உண்மை நிலவரம் தெரிந்தபாடில்லை!
இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் அம்மாவின் ஆசியோடும், அம்மாவின் ஆலோசனையின் பேரிலும் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று செய்திகள் கூறுகின்றன. அப்படியென்றால் அம்மா படுத்தப்படுக்கையாக இருக்கிறார் என்றெல்லாம் சொல்லமுடியாது.
அவர் தெளிவாகத்தான் இருக்கிறார். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. தனது அமைச்சர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று ஆலோசைனைகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார். எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது.
ஆனாலும் இதுவரை அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்பட வில்லை!
சமீபத்தில் வெளியான அறிக்கையில் தமிழக வாக்காளர்களை அவருடைய கட்சிக்கு வாக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் செய்த பிரார்த்தனைகளினால் தான் தேறி வருவதாகவும், விரைவில் பணிக்குத் திரும்புவேன் என்றும் கூறியிருக்கிறார்!
ஆனால் அப்படி என்ன தான் தேறிவருகிறார் என்று யாராலும் கணிக்கமுடியவில்லை! அப்பொல்லோ மருத்துவமனையை விட அவரது ஜோஸ்யர்கள் சொல்லுவதைத்தான் நாம் நம்ப வேண்டியிருக்கிறது! எல்லாவற்றையும் கணித்து சொல்லுபவர்கள் அவர்கள் தான்! முதல்வரும் மருத்துவர்களைவிட ஜோஸ்யர்களைத்தான் அதிகம் நம்புபவர் என்பது அனைவரும் அறிந்தது தான்!
ஜோஸ்யர்கள் அவர் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்புவார் என்று எல்லாவற்றையும் கணக்குப்போட்டுத் தான் சொல்லியிருக்கிறார்கள்! ஆனால் லண்டன் டாக்டரோ இன்னும் சிறப்பான சிகிழ்ச்சை வேண்டுமென்றால் லண்டனுக்கு வாங்கோ என்று அழைப்பு விடுத்திருக்கிறார்!
ஆனாலும் இதுவரை அவரைப்பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை!
அப்பல்லோ மருத்துவமனையோ இப்படி ஒரு நிலைமை அவர்களுக்கு வரும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஐம்பது ஆண்டு காலம் திராவிடக்கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கின்றன. ஆனால் ஒரு முதல்வருக்கு மருத்துவம் பார்க்க ஒர் அரசாங்க மருத்துவமனைக் கூட தகுதியானதாக இல்லை!
இப்போதைய, முதல்வரின் புகலிடம் அப்பல்லோ மருத்துவமனை தான்! நூல்நிலையத்தை இடித்து அதனை மருத்துவமனை ஆக்கினார். அது ஏன் என்பது இப்போது தான் நமக்குப் புரிகிறது! அது அவருக்கு முன்னரே புரிந்துவிட்டது!
இப்போது மருத்துவமனை வீடாகிவிட்டது! அப்பல்லோவுக்கு தலைவலி, திருகுவலி எல்லாம் சேர்ந்து கொண்டது! அப்பல்லோவின் மருத்துவ 'பில்' கோடிகளுக்கு வரலாம்! அது ஒரு பிரச்சனை அல்ல! தமிழன் சாராயத்தைக் குடித்தே அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான்! இப்போது தனது குடும்பம் அழிந்தாலும் பரவாயில்லை அம்மாவைக் காப்பாற்ற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறான்! சாராயப்பணம் சரியான வழிகாட்டும் என நாமும் எதிர்பார்ப்போம்!
ஆனாலும் அம்மாவின் நிலைமை என்னவென்று இன்னும் நமக்குத் தெரியவில்லையே! தனது மேல் இருக்கும் ஊழல் குற்றச்சாட்டு ஒரளவு தணிந்த பின்னர் தான் அம்மாவின் உடல்நிலை சரியாகுமா? அதுவரை மருத்துவமனை தான் - அல்லது வீடாகக்கூட இருக்கலாம் - அவர் நிரந்தர ஓய்வில் இருப்பாரா? அவருடைய உடல்நிலைமைக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஏதும் தொடர்புகள் இருக்கின்றனவா என்பது போகப் போகத்தான் தெரியும்!
இப்படியெல்லாம் நினைப்பதற்கு நாம் காரணமல்ல. சசிகலா, முதல்வரை தனது இரும்புப்பிடியில் வைத்திருக்கிறார் என்று சொல்லப்படுவதால் தான் இப்படியெல்லாம் நாம் நினைக்க வேண்டியிருக்கிறது! இதுவரை அவரை யாரும் பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை! அப்படியென்றால்.......?
இப்போது நாம் கேட்பதெல்லாம்: அம்மா! நீங்கள் நலமா?
Subscribe to:
Posts (Atom)