Sunday, 29 January 2017

பாம்பு பிடிக்கும் தமிழர்கள்!


காக்கா பிடிக்கும் கலை எல்லாருக்குமே வரும்! ஆனால் பாம்பு பிடிக்கும் கலை எல்லாருக்கும் வராது. தமிழர்களுக்கு அது வரும் என்பதை அமெரிக்கர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பர்மிய மலைப்பாம்புகளின் நடமாட்டத்தால் பல வனவிலங்குகள் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன. மலைப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில் வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது!

அப்படி என்ன தான் நடக்கிறது?

மலைப்பாம்புகள் அங்கு வாழும் அனைத்து வன உயிரினங்களையும் கொன்று தின்று விடுகின்றனவாம்! அதனால் பாம்புகள் அதிகரித்தும் மற்ற உயிரினங்கள் அழிந்தும் வருகின்றனவாம்!

இப்போது புளோரிடா வனவிலங்கு காப்பகம் தடாலடியாக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருக்கிறது.  தமிழகம்,  இருளர் சமூகத்தைச் சார்ந்த இரு பாம்புப்பிடி  நிபுணர்களை வரவழைத்திருக்கிறது.  மாசி சடையன், வடிவேல் கோபால் ஆகிய இந்த இருவரும் பாம்புகளை வேட்டையாடுவதோடு பாம்புப் பிடிக்கும் கலையையும் அவர்களுக்குக் கற்றுத்தருவார்கள்!

பரவாயில்லையே! பெரிய படிப்பு படித்த வெள்ளைக்காரர்களுக்கு மலைவாழ் பழங்குடித் தமிழர்களிடம் படிப்பதற்கும் எதாவது இருக்கத்தானே செய்கிறது! நமக்கும் பெருமை தான்!



ஆனாலும் சொல்ல வேண்டிய செய்தி ஒன்று உண்டு. இந்த மலைப்பாம்புகள் புளோரிடா மாநிலத்தைச் சார்ந்த பாம்புகள் அல்ல! இவைகள் வந்தேறிகள்!  இந்த வந்தேறிகள் என்ன செய்தன? அங்குள்ள வனவிலங்குகள் அனைத்தையும் அழித்துக் கொண்டிருந்தன. காடுகளில் வழுகின்ற முயல் வகைகள், குருவி வகைகள் என்று அனைத்து விலங்குகளையும் கபளீகரம் செய்து கொண்டிருந்தன! இதனால் பாம்பு வகைகள் அதிகமாயும், அவர்கள் நாட்டு விலங்குகள் எண்ணிக்கை குறைந்தும் கொண்டு வந்தன.

இதனோடு நமது ஜல்லிக்கட்டு காளைகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.. வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீமை மாடுகளின் மூலம் நமக்கு என்ன கிடைக்கிறது? அதன் பால் நமக்கு நோயை உண்டாக்குகின்றன. பலவிதமான நோய்கள். அதில் புற்று நோயும் ஒன்று. அதன் சாணம் எருவாகப் பயன் படுவதில்லை. அது வெறும் சக்கை!

நமது நாட்டு மாடுகள் அப்படியா? நாட்டு மாடுகளின் பால் சத்துள்ள பால். அது உலக ரீதியில் முதலாம் வகை.ஏற்றுமதிக்கு மிகவும் தரம் உள்ள பால். தாய்ப்பாலோடு ஒப்பிடும் அளவுக்குத் தரம் வாய்ந்தது. அதன் சாணம் எருவாகப் பயன்படும்.  செயற்கை உரம் தேவை இல்லை. ஏற்கனவே நமது நாட்டு மாடுகளைக் கடத்தி மேல் நாட்டவர் உலக அளவில் பால் விற்பனைச் செய்து கொண்டிருக்கின்றனர். நாமோ, அவர்களின் மாடுகளைக் கொண்டு, வீட்டுப் பாலாகக் கூட பயன்படுத்த முடியவில்லை! அவர்கள் நமது மாடுகளை நம்மிடமிருந்து பிரித்து கோடிக்கணக்கில் பணம் பார்க்கின்றனர். நமது விவசாயிகிகள் அழிந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் மாடுகள் அவர்கள் மண்ணூக்கு உரியவை. நமது மாடுகள் நமது மண்ணுக்கு உரியவை. ஒவ்வொன்றும் அவை இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும். அது தான் நமக்கு இயற்கை சொல்லும் பாடம்.

Friday, 27 January 2017

ஏன் இந்தத் தூண்டுதல்..?


மெரினா கடற்கரையில் நடைபெற்ற அறவழி போராட்டம் இன்னும் நமது மனதை விட்டு அகலவில்லை. அகலவும் கூடாது!

தமிழர் பிரச்சனைக்காக மாணவ - மாணவியர் கூடியதை ஏதோ ஒரு தகாத நிகழ்வாக அரசாங்கம் கருதுவதாகத் தான் நாம் நினைக்க வேண்டியிருக்கிறது.

தமிழ் மாணவர்கள் தான் கூடினார்கள். தமிழ் மாணவியர் தான் கூடினார்கள். நாம் தமிழர்கள் என்னும் உணர்வோடு தான் கூடினார்கள். இதில் என்ன தவறு இருக்க முடியும்?

இது எல்லா மாநிலங்களிலும் நடக்கும் ஒரு காரியம் தானே!  கர்நாடகாவில் மாணவர்கள் ஒன்று கூடினால் அவர்கள் கன்னட மாணவர்கள்.  பஞ்சாபில் ஒன்று கூடினால் அவர்கள் பஞ்சாபிய மாணவர்கள்.

அது போலத்தான் தமிழ் நாட்டிலும். தமிழ் நாட்டில் மாணவர்கள் ஒன்று கூடினால் அவர்கள் தமிழ் மாணவர்கள். 'நான் தமிழன், நான் தமிழச்சி' என்று அவர்கள் சொல்லுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை!

ஆறு நாள்கள் அறவழியில் நடைபெற்ற மாணவர் போராட்டம் ஏழாவது நாள் காவல்துறையினரின் போராட்டக்களமாக மாறியது! என்ன காரணங்கள் சொன்னாலும் அன்று நடந்த அடிதடிகளெல்லாம்  காவல்துறையினரே ஆரம்பித்து வைத்தவை!

மாணவர் மீது ஏவப்பட்ட இந்த அராஜகம் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்குத் தெரியாதா? தெரியும் என்று தான் நாம் நம்ப வேண்டியிருக்கிறது. அதுவும் குறிப்பாக பா.ஜ.க. தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோருக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.

"ஜல்லிக்கட்டை நீங்கள் நடத்துங்கள், உங்களுக்கு எதுவும் ஆகாது. நாங்கள் உங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கிறோம்" என்று சொல்லிச் சொல்லி மாணவர்களை ஊக்கப்படுத்தியவர்கள் இவர்கள் தான்..  நடத்தச் சொல்லித் தூண்டுதலை ஏற்படுத்தியவர்களே இவர்கள் தான்!

ஆளுங்கட்சியின் முதன்மை இடத்தில் இருக்கும் இவர்கள் தான்  கடைசி நேரத்தில் காலைவாரி விட்டவர்கள்! காவல்துறை கட்டுமீறி நடந்து கொண்ட போது அந்த நேரத்தில் அந்த மாணவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது அவர்களின் கடமை அல்லவா? காவக்துறையினரைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம் அல்லவா? மோடியின் வலது கையும் இடது கையுமாக இருக்கும் இவர்களால் தடுத்து நிறுத்த முடியாதா?

தூண்டுதலையும் ஏற்படுத்திவிட்டு கடைசி நேரத்தில் ஓடி ஒளிந்து கொண்டவர்களும் இவர்கள் தான்! தமிழக மாணவர்களை - இளைஞர்களை இனி இவர்கள் நேருக்கு நேர் பார்க்க முடியுமா? சந்திக்க முடியுமா?

தமிழகத்தில் கையாளாகாத ஒரு அரசாங்கம்! எதனையும் கண்டு கொள்ளவில்லை! தொடர்ந்து இப்படித்தான் இருப்பீர்களோ? பார்க்கலாம்!

Thursday, 26 January 2017

ஜல்லிக்கட்டு - ஆரம்பம் தான்..!


ஜல்லிகட்டு, முதல் தமிழர் போராட்டம். மாணவர்களாலும், இளைஞர்களாலும் அற வழியில் நடத்தப்பட்டு கடைசி நாளில் மோடி ஆடிய நாடகத்தில் அராஜகத்தில் முடிவுக்கு வந்தது!

முடிவுக்கு வந்ததா...? இல்லை! இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்திய காவல்துறை, உளவுத்துறை தமிழகத்தை தனது கையில் வைத்துக் கொண்டு இன்னும் தமிழர்களை அடக்கி ஒடுக்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடுகளில் புகுந்து பெண்களை அடிப்பதும், உதைப்பதும், இளைஞர்களையும் மாணவர்களையும் கைது செய்வதும் இன்னும் தொடருகின்றன!

தமிழகத்தின் ஆட்சி என்பது இப்போது இந்திய உளவுத்துறையின் கையில்!  ஜனநாயகம் அடக்கி ஒடுக்கப்பட்டுவிட்டது!

போராட்டத்தின் கடைசி நாளன்று காணாமல் போன பல மாணவ மாணவியர், பெண்கள், வயதானவர்கள் - இப்படிப் பலர் என்ன ஆனார்கள் என்று இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை.

இதை நாம் படிக்கும் போது இது போன்ற செய்திகளை இதற்கு முன்பு எங்கோ கேட்டது போல தோன்றுகிறது அல்லவா? ஆமாம். யாழ்ப்பாணத் தமிழர்களை இப்படித்தான் சிங்கள ராணுவம் வீடு வீடாகப் புகுந்து தமிழர்களை நாசப்படுத்தியது என்பதாக நாம் படித்தோம். அது இப்போது தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அனுபவிக்கிறார்கள்.

தமிழர்கள்,  தங்களைத் தமிழர்கள் என்று சொல்லுவதைக் கூட மோடி அரசாங்கம் விரும்பவில்லை.  மாணவர்கள்  'நான் தமிழன் டா! நான் தமிழச்சிடா!' என்று சொன்னதை மோடி அரசாங்கம் ஏதோ தீண்டத்தகாத சொல்லாக நினைப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது!

எது நடந்தாலும் சரி. மோடி அரசாங்கம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஜல்லிக்கட்டு ஒரு ஆரம்பம் தான். தமிழன் புகைய ஆரம்பித்திருக்கிறான். அந்தப் புகையை அவ்வளவு சீக்கிரத்தில் நீங்கள் அனைத்துவிட முடியாது! காவல்துறையும், உளவுத்துறையும் அனைத்தையும் அடக்கிவிட முடியும் என்பது கனவு தான்!

வீதிக்கு வருவதை நீங்கள் தடை செய்தாலும் வீதிகளை வீட்டுக்குக் கொண்டு வரமுடியும் என்பதை நவீனத் தொழில்நுட்பம் நிருபித்திருக்கிறது. தொழில்நுட்பத்தில் தமிழனை அடிக்க ஆளில்லை என்பதைத் தமிழன் நிருபித்திருக்கிறான், மறந்துவிட வேண்டாம்!

ஆம்! ஜல்லிக்கட்டு ஆரம்பம் தான்! இனி தமிழரின் அனைத்துப் பிரச்சனைகளையும் நீங்கள் எதிர்நோக்க வேண்டி வரும்! இனித்  தமிழ் நாட்டில் பா.ஜ.க. வோ, திராவிடக் கட்சிகளோ - சமாதி தான்!