Thursday 26 January 2017

ஜல்லிக்கட்டு - ஆரம்பம் தான்..!


ஜல்லிகட்டு, முதல் தமிழர் போராட்டம். மாணவர்களாலும், இளைஞர்களாலும் அற வழியில் நடத்தப்பட்டு கடைசி நாளில் மோடி ஆடிய நாடகத்தில் அராஜகத்தில் முடிவுக்கு வந்தது!

முடிவுக்கு வந்ததா...? இல்லை! இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்திய காவல்துறை, உளவுத்துறை தமிழகத்தை தனது கையில் வைத்துக் கொண்டு இன்னும் தமிழர்களை அடக்கி ஒடுக்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடுகளில் புகுந்து பெண்களை அடிப்பதும், உதைப்பதும், இளைஞர்களையும் மாணவர்களையும் கைது செய்வதும் இன்னும் தொடருகின்றன!

தமிழகத்தின் ஆட்சி என்பது இப்போது இந்திய உளவுத்துறையின் கையில்!  ஜனநாயகம் அடக்கி ஒடுக்கப்பட்டுவிட்டது!

போராட்டத்தின் கடைசி நாளன்று காணாமல் போன பல மாணவ மாணவியர், பெண்கள், வயதானவர்கள் - இப்படிப் பலர் என்ன ஆனார்கள் என்று இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை.

இதை நாம் படிக்கும் போது இது போன்ற செய்திகளை இதற்கு முன்பு எங்கோ கேட்டது போல தோன்றுகிறது அல்லவா? ஆமாம். யாழ்ப்பாணத் தமிழர்களை இப்படித்தான் சிங்கள ராணுவம் வீடு வீடாகப் புகுந்து தமிழர்களை நாசப்படுத்தியது என்பதாக நாம் படித்தோம். அது இப்போது தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அனுபவிக்கிறார்கள்.

தமிழர்கள்,  தங்களைத் தமிழர்கள் என்று சொல்லுவதைக் கூட மோடி அரசாங்கம் விரும்பவில்லை.  மாணவர்கள்  'நான் தமிழன் டா! நான் தமிழச்சிடா!' என்று சொன்னதை மோடி அரசாங்கம் ஏதோ தீண்டத்தகாத சொல்லாக நினைப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது!

எது நடந்தாலும் சரி. மோடி அரசாங்கம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஜல்லிக்கட்டு ஒரு ஆரம்பம் தான். தமிழன் புகைய ஆரம்பித்திருக்கிறான். அந்தப் புகையை அவ்வளவு சீக்கிரத்தில் நீங்கள் அனைத்துவிட முடியாது! காவல்துறையும், உளவுத்துறையும் அனைத்தையும் அடக்கிவிட முடியும் என்பது கனவு தான்!

வீதிக்கு வருவதை நீங்கள் தடை செய்தாலும் வீதிகளை வீட்டுக்குக் கொண்டு வரமுடியும் என்பதை நவீனத் தொழில்நுட்பம் நிருபித்திருக்கிறது. தொழில்நுட்பத்தில் தமிழனை அடிக்க ஆளில்லை என்பதைத் தமிழன் நிருபித்திருக்கிறான், மறந்துவிட வேண்டாம்!

ஆம்! ஜல்லிக்கட்டு ஆரம்பம் தான்! இனி தமிழரின் அனைத்துப் பிரச்சனைகளையும் நீங்கள் எதிர்நோக்க வேண்டி வரும்! இனித்  தமிழ் நாட்டில் பா.ஜ.க. வோ, திராவிடக் கட்சிகளோ - சமாதி தான்!

No comments:

Post a Comment