Friday 27 January 2017

ஏன் இந்தத் தூண்டுதல்..?


மெரினா கடற்கரையில் நடைபெற்ற அறவழி போராட்டம் இன்னும் நமது மனதை விட்டு அகலவில்லை. அகலவும் கூடாது!

தமிழர் பிரச்சனைக்காக மாணவ - மாணவியர் கூடியதை ஏதோ ஒரு தகாத நிகழ்வாக அரசாங்கம் கருதுவதாகத் தான் நாம் நினைக்க வேண்டியிருக்கிறது.

தமிழ் மாணவர்கள் தான் கூடினார்கள். தமிழ் மாணவியர் தான் கூடினார்கள். நாம் தமிழர்கள் என்னும் உணர்வோடு தான் கூடினார்கள். இதில் என்ன தவறு இருக்க முடியும்?

இது எல்லா மாநிலங்களிலும் நடக்கும் ஒரு காரியம் தானே!  கர்நாடகாவில் மாணவர்கள் ஒன்று கூடினால் அவர்கள் கன்னட மாணவர்கள்.  பஞ்சாபில் ஒன்று கூடினால் அவர்கள் பஞ்சாபிய மாணவர்கள்.

அது போலத்தான் தமிழ் நாட்டிலும். தமிழ் நாட்டில் மாணவர்கள் ஒன்று கூடினால் அவர்கள் தமிழ் மாணவர்கள். 'நான் தமிழன், நான் தமிழச்சி' என்று அவர்கள் சொல்லுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை!

ஆறு நாள்கள் அறவழியில் நடைபெற்ற மாணவர் போராட்டம் ஏழாவது நாள் காவல்துறையினரின் போராட்டக்களமாக மாறியது! என்ன காரணங்கள் சொன்னாலும் அன்று நடந்த அடிதடிகளெல்லாம்  காவல்துறையினரே ஆரம்பித்து வைத்தவை!

மாணவர் மீது ஏவப்பட்ட இந்த அராஜகம் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்குத் தெரியாதா? தெரியும் என்று தான் நாம் நம்ப வேண்டியிருக்கிறது. அதுவும் குறிப்பாக பா.ஜ.க. தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோருக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.

"ஜல்லிக்கட்டை நீங்கள் நடத்துங்கள், உங்களுக்கு எதுவும் ஆகாது. நாங்கள் உங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கிறோம்" என்று சொல்லிச் சொல்லி மாணவர்களை ஊக்கப்படுத்தியவர்கள் இவர்கள் தான்..  நடத்தச் சொல்லித் தூண்டுதலை ஏற்படுத்தியவர்களே இவர்கள் தான்!

ஆளுங்கட்சியின் முதன்மை இடத்தில் இருக்கும் இவர்கள் தான்  கடைசி நேரத்தில் காலைவாரி விட்டவர்கள்! காவல்துறை கட்டுமீறி நடந்து கொண்ட போது அந்த நேரத்தில் அந்த மாணவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது அவர்களின் கடமை அல்லவா? காவக்துறையினரைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம் அல்லவா? மோடியின் வலது கையும் இடது கையுமாக இருக்கும் இவர்களால் தடுத்து நிறுத்த முடியாதா?

தூண்டுதலையும் ஏற்படுத்திவிட்டு கடைசி நேரத்தில் ஓடி ஒளிந்து கொண்டவர்களும் இவர்கள் தான்! தமிழக மாணவர்களை - இளைஞர்களை இனி இவர்கள் நேருக்கு நேர் பார்க்க முடியுமா? சந்திக்க முடியுமா?

தமிழகத்தில் கையாளாகாத ஒரு அரசாங்கம்! எதனையும் கண்டு கொள்ளவில்லை! தொடர்ந்து இப்படித்தான் இருப்பீர்களோ? பார்க்கலாம்!

No comments:

Post a Comment