Wednesday, 27 February 2019

அட! நஸ்ரியுமா..!

பதவியில் இருக்கும் போது நாட்டின் ஒற்றுமைக்காகப் பேசுவதும்  பதவியில்  இல்லாத போது "நாடாவது! வெண்டைக்காயாவது!" என்று பேசுவதும் ஒரு சில அரசியல்வாதிகளின் இயல்பு.

அந்த ஒரு சில அரசியல்வாதிகளில் இப்போது நமது முன்னாள் அமைச்சர் நஸ்ரியும் சேர்ந்து கொண்டார். அம்னோ கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நஸ்ரி சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது நாடு நாசமாய்ப் போனால் எனக்கென்ன என்னும் போக்கில் பேசியிருக்கிறார்!

அதிலும் அவர் முக்கியமாக சட்டத்துறைத் தலைவர்,  நிதியமைச்சர்,  தேசிய தலைமை நீதிபதி  இவர்களைப் பற்றி பேசும் போது இவர்கள் அனைவரும் மலாய்க்காரர் அல்லதவர்கள் என்று பேசியிருக்கிறார். இவர் ஒன்றுமே அறியாதவர் அல்ல. ஏற்கனவே இந்தப் பதவியில் இருந்தவர்கள் இப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளனர். அனைத்தும் ஊழல் குற்றச்சாட்டுகள்!  கொள்ளையடிப்பவர்கள் மலாய்க்காரர்களாக இருக்கலாம் , தமக்கு நீதி, நியாயம் தேவை இல்லை என்கிற நஸ்ரியின் கருத்தைப் பற்றி என்ன சொல்லுவது?
படித்தவர், பண்பட்டவர் இப்படிப் பேசினால் பாமரன் என்ன சொல்லுவான்?

கொள்ளையடிப்பது, ஊழல் புரிவது பாவம் என்கிற எண்ணமே தவறு என்கிறார் நஸ்ரி!  ஒரு சத்தியம் செய்வதன் மூலம் அனைத்துப் பாவங்களும் கழுவப்படும் என்னும் நஸ்ரியின் கருத்தைப் பெரும்பாலோர் ஏற்கவில்லை! அதுவே நமது வெற்றி!  

இன்னொன்றையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.   பிரச்சனைகள் வரும்போது அதன் முழு விபரங்களையும் அறியாமல் உடனே "மலாய் உரிமைகள் பறி போகின்றன" என்று கத்தி  ஆர்ப்பாடம் செய்வது இப்போது மலேசிய அரசியலில் புதிய பரிணாமம் என்றே சொல்லலாம்.  பறி போக என்ன இருக்கிறது? எல்லாவற்றையும் இறுக்கிக் கை இடுக்கில் வைத்துக் கொண்டு பறி போகிறதே என்றால் யார் நம்புவார்? 

அப்படி என்றால் எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இருக்கிறதா,இல்லையா என்றே தெரியவில்லை! ஒவ்வொரு நாளும் மலாய் உரிமைகளைப் பற்றியே பேசினால் எங்களுக்கென்று எந்த உரிமைகளும் இல்லையா?

நஸ்ரி பதவி போன பிறகு என்னன்னவோ பிதற்றுகிறார்!  இத்தனை ஆண்டுகள் பதவியில் இருந்த பாரிசான் ஆட்சி ஏன் கவிழ்ந்தது என்பதைக் கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்கமாட்டேன் என்கிறார். எங்களுடைய உரிமை மறுக்கப்பட்டன அதனை நாங்கள் பார்த்துக் கொண்டே தான் இருக்க வேண்டுமா? அது தான் மாற்றத்தின் ஆரம்பம்!

நாட்டின் நலன் முக்கியம். நஸ்ரியின் வழி  முக்கியம் அல்ல!

மகாதிர் நீண்ட நாள் வாழ வேண்டும்!

பிரதமர் மகாதிர்  நீண்ட நாள்  வாழ  வேண்டும் என்பதில் இப்போது துங்கு ரசாலியும் சேர்ந்து கொண்டிருக்கிறார். அதுவே நமது பிரார்த்தனையும் கூட! 

இன்றைய அரசியல் சூழலில் அவர் இருப்பது நாட்டிற்கு நல்லது என்பது தான் அனைத்து மலேசியர்களின் எதிர்பார்ப்பும்! அவர் தான் நாட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதை மக்களறிவர். அவர் சொல்லுகின்ற சொல்லுக்கு மலேசியர் அனவரும் கட்டுப்படுகின்றனர்,  அரசியல்வாதிகள் உட்பட!  அது போது அவர் மக்கள் ஆதரவைப் பெற்றவர் என்பது.

அரசியலில் இரு துருவங்களாக இருப்பவர்கள்  துங்கு ரசாலியும, டாக்டர் மகாதிரும். இருப்பினும்  துங்கு  ரசாலி,   டாக்டர்  மகாதிர் நாட்டின் நலனுக்காக நீண்ட நாள் வாழ  வேண்டும்  என  பிராத்திக்கிறார்.  நமக்கும் மகிழ்ச்சியே! 

ஆனால்  அம்னோவில்  உள்ள  பிற தலைவர்கள் இவர் சொல்லுவதை  ஏற்றுக் கொள்ளுவார்களா?  ஏற்றுக் கொள்ள  மாட்டார்கள் என்பதை  நாம்  அறிவோம்! ஏன்  முன்னாள்  பிரதமர்  நஜிப்  ஏற்றுக் கொள்ளுவாரா?  அம்னோ தலைவர்கள் யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அது தான் உண்மை!

இப்போது  நாட்டில் யாரால்  பிரச்சனைகள்  ஏற்படுகின்றன?  உண்மையைச்  சொன்னால் அம்னோவில்  உள்ள  அரசியல்வாதிகளால் தான் பிரச்சனைகள் ஏற்படுகின்றன!  புதிய அரசாங்கம் எதனைச்  செய்தாலும் அதனை எதிர்க்க வேண்டும்  என்பதாக நஜிப் உத்தரவு  பிறப்பித்திருக்கிறார்!    நாட்டில் ஏற்பட்ட  சமீபகால ஆர்ப்பாட்டங்கள்  அனைத்தும் தேவை இல்லாத  ஆர்ப்பாட்டங்களே! அனைத்தும்  அம்னோ தரப்பில்  இருந்து  ஊதி  ஊதி  பெரிதாக்கப் பட்டவை!

உண்மையைச் சொன்னால்  புதிய  அரசாங்கத்தைச்  செயல்பட விடாமல் இருப்பது  தான்  அவர்கள் நோக்கம். அதனைத் தான்  அவர்கள் வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்!

ஆக, துங்கு ரசாலி,  டாக்டர் மகாதிர் நீண்ட நாள் வாழ வேண்டும்  என்பதில் யாருக்கும் பிரச்சனை இல்லை. ஆனால் நாட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்க  வேண்டும் என்றால் துங்கு ரசாலி அம்னோ அரசியல்வாதிகளிடம் இதனைச் சொல்ல வேண்டும். அவர்கள் அமைதியாக இருந்தாலே நாட்டில் எந்தக் குழப்பமும் ஏற்படாது!

நாட்டில் அமைதி, முன்னேற்றம் இருந்தாலே டாக்டர் மகாதிர் நூறு ஆண்டுகள் பேர் போடுவார்.  சந்தேகமே வேண்டாம்!

காரணம் அவருக்கு வேண்டியது நாட்டின்  முன்னேற்றமே!

Tuesday, 26 February 2019

கேள்வி - பதில் (94)

கேள்வி

வருகின்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும்?

பதில்

மற்ற மாநிலங்களைப் பற்றி தெரியவில்ல என்றாலும் தமிழ் நாட்டைப் பற்றி ஓரளவு கணிக்கலாம். 

தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் தான் இன்னும் நிலவுகிறது. அ.தி.மு.க. வும் தி.மு.க.வும் தான் வெற்றி பெறுவதற்கான முன்னணியில் உள்ள கட்சிகள்.  இந்த முறை அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்று தான் சொல்ல வேண்டும் காரணம்  சமீப காலங்களில் பா.ஜ.க. வோடு சேர்ந்து கொண்டு அவர்கள் பல குளறுபடிகளைச் செய்துள்ளனர்.  அனைத்தும்  தமிழர் நலனுக்காக எதிரானவை.

என்ன தான் பதவி வேண்டும், பணம் வேண்டும் என்று அவர்கள் அலைந்தாலும் அ.தி.மு.க. வின் ஒவ்வொரு அடியும் பணத்தையும் பதவியையும் நோக்கித் தான் நகர்ந்தனவே தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை! தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வமுமில்லை!  காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்! அது தான் அவர்களின் லட்சியம்; உயர்ந்த நோக்கம் அனைத்தும்!

தி.மு.க. வும் கூட முன்பு போல வெற்றி பெற முடியுமா என்னும் ஐயமும் நிலவுகிறது. இது தான் முதன் முதலாக கலைஞர் இல்லாத தேர்தல் திமு.க.விற்கு. அப்படியே வெற்றி பெற்று வந்தாலும் அ.தி.மு.க. வின் வழியைத் தான் இவர்களும் பின் பற்றுவார்கள்.  மற்றபடி தமிழகத்திற்கு இவர்களால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

ஒரு வகையில் பார்த்தால் இந்தத் தேர்தல் தமிழ் நாட்டின் இரண்டு முக்கிய ஆளுமைகள் இல்லாத தேர்தல்.  கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத முதல் தேர்தல். கருணாநிதியின் வாரிசாவது கொஞ்சம் கண்ணுக்குத் தெரிகிறார்.   ஜெயலலிதா எந்த வாரிசுகளையும் உருவாக்கவில்லை. அதனால் அங்கு ஒரு வெற்றிடம் தான் தெரிகிறது. அது ஒரு ஹீரோ இல்லாத கட்சி!   இந்த நேரத்தில் மற்ற கட்சிகளும் உள்ளே வர வாய்ப்பிருக்கிறது. ஆனால் எல்லாமே இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுவதால் இந்த இரு கட்சிகள் தான் முன்னணியில் இருக்கின்றன.

இந்த நேரத்தில் கமல்ஹாசனின் கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேராமல் தனித்துப்  போட்டியிடப்  போவதாக  அறிவித்திருக்கிறார்.  அதே போல நம் தமிழர் கட்சியும் அனைத்துத்  தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது.

ஒன்று சொல்லலாம். இந்த  தி.மு.க., அதி.மு.க.  கட்சிகளின்  கூட்டணி  உடைபடும் அபாயத்தில் இருக்கிறது எனலாம். திராவிடக் கட்சிகளின்  கூட்டணி  உடைவது  தான் தமிழகத்திற்கு நல்லது.

பொறுத்திருந்து  பார்ப்போம்!