Wednesday 27 February 2019

அட! நஸ்ரியுமா..!

பதவியில் இருக்கும் போது நாட்டின் ஒற்றுமைக்காகப் பேசுவதும்  பதவியில்  இல்லாத போது "நாடாவது! வெண்டைக்காயாவது!" என்று பேசுவதும் ஒரு சில அரசியல்வாதிகளின் இயல்பு.

அந்த ஒரு சில அரசியல்வாதிகளில் இப்போது நமது முன்னாள் அமைச்சர் நஸ்ரியும் சேர்ந்து கொண்டார். அம்னோ கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நஸ்ரி சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது நாடு நாசமாய்ப் போனால் எனக்கென்ன என்னும் போக்கில் பேசியிருக்கிறார்!

அதிலும் அவர் முக்கியமாக சட்டத்துறைத் தலைவர்,  நிதியமைச்சர்,  தேசிய தலைமை நீதிபதி  இவர்களைப் பற்றி பேசும் போது இவர்கள் அனைவரும் மலாய்க்காரர் அல்லதவர்கள் என்று பேசியிருக்கிறார். இவர் ஒன்றுமே அறியாதவர் அல்ல. ஏற்கனவே இந்தப் பதவியில் இருந்தவர்கள் இப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளனர். அனைத்தும் ஊழல் குற்றச்சாட்டுகள்!  கொள்ளையடிப்பவர்கள் மலாய்க்காரர்களாக இருக்கலாம் , தமக்கு நீதி, நியாயம் தேவை இல்லை என்கிற நஸ்ரியின் கருத்தைப் பற்றி என்ன சொல்லுவது?
படித்தவர், பண்பட்டவர் இப்படிப் பேசினால் பாமரன் என்ன சொல்லுவான்?

கொள்ளையடிப்பது, ஊழல் புரிவது பாவம் என்கிற எண்ணமே தவறு என்கிறார் நஸ்ரி!  ஒரு சத்தியம் செய்வதன் மூலம் அனைத்துப் பாவங்களும் கழுவப்படும் என்னும் நஸ்ரியின் கருத்தைப் பெரும்பாலோர் ஏற்கவில்லை! அதுவே நமது வெற்றி!  

இன்னொன்றையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.   பிரச்சனைகள் வரும்போது அதன் முழு விபரங்களையும் அறியாமல் உடனே "மலாய் உரிமைகள் பறி போகின்றன" என்று கத்தி  ஆர்ப்பாடம் செய்வது இப்போது மலேசிய அரசியலில் புதிய பரிணாமம் என்றே சொல்லலாம்.  பறி போக என்ன இருக்கிறது? எல்லாவற்றையும் இறுக்கிக் கை இடுக்கில் வைத்துக் கொண்டு பறி போகிறதே என்றால் யார் நம்புவார்? 

அப்படி என்றால் எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இருக்கிறதா,இல்லையா என்றே தெரியவில்லை! ஒவ்வொரு நாளும் மலாய் உரிமைகளைப் பற்றியே பேசினால் எங்களுக்கென்று எந்த உரிமைகளும் இல்லையா?

நஸ்ரி பதவி போன பிறகு என்னன்னவோ பிதற்றுகிறார்!  இத்தனை ஆண்டுகள் பதவியில் இருந்த பாரிசான் ஆட்சி ஏன் கவிழ்ந்தது என்பதைக் கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்கமாட்டேன் என்கிறார். எங்களுடைய உரிமை மறுக்கப்பட்டன அதனை நாங்கள் பார்த்துக் கொண்டே தான் இருக்க வேண்டுமா? அது தான் மாற்றத்தின் ஆரம்பம்!

நாட்டின் நலன் முக்கியம். நஸ்ரியின் வழி  முக்கியம் அல்ல!

No comments:

Post a Comment