Tuesday 26 February 2019

கேள்வி - பதில் (94)

கேள்வி

வருகின்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும்?

பதில்

மற்ற மாநிலங்களைப் பற்றி தெரியவில்ல என்றாலும் தமிழ் நாட்டைப் பற்றி ஓரளவு கணிக்கலாம். 

தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் தான் இன்னும் நிலவுகிறது. அ.தி.மு.க. வும் தி.மு.க.வும் தான் வெற்றி பெறுவதற்கான முன்னணியில் உள்ள கட்சிகள்.  இந்த முறை அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்று தான் சொல்ல வேண்டும் காரணம்  சமீப காலங்களில் பா.ஜ.க. வோடு சேர்ந்து கொண்டு அவர்கள் பல குளறுபடிகளைச் செய்துள்ளனர்.  அனைத்தும்  தமிழர் நலனுக்காக எதிரானவை.

என்ன தான் பதவி வேண்டும், பணம் வேண்டும் என்று அவர்கள் அலைந்தாலும் அ.தி.மு.க. வின் ஒவ்வொரு அடியும் பணத்தையும் பதவியையும் நோக்கித் தான் நகர்ந்தனவே தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை! தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வமுமில்லை!  காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்! அது தான் அவர்களின் லட்சியம்; உயர்ந்த நோக்கம் அனைத்தும்!

தி.மு.க. வும் கூட முன்பு போல வெற்றி பெற முடியுமா என்னும் ஐயமும் நிலவுகிறது. இது தான் முதன் முதலாக கலைஞர் இல்லாத தேர்தல் திமு.க.விற்கு. அப்படியே வெற்றி பெற்று வந்தாலும் அ.தி.மு.க. வின் வழியைத் தான் இவர்களும் பின் பற்றுவார்கள்.  மற்றபடி தமிழகத்திற்கு இவர்களால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

ஒரு வகையில் பார்த்தால் இந்தத் தேர்தல் தமிழ் நாட்டின் இரண்டு முக்கிய ஆளுமைகள் இல்லாத தேர்தல்.  கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத முதல் தேர்தல். கருணாநிதியின் வாரிசாவது கொஞ்சம் கண்ணுக்குத் தெரிகிறார்.   ஜெயலலிதா எந்த வாரிசுகளையும் உருவாக்கவில்லை. அதனால் அங்கு ஒரு வெற்றிடம் தான் தெரிகிறது. அது ஒரு ஹீரோ இல்லாத கட்சி!   இந்த நேரத்தில் மற்ற கட்சிகளும் உள்ளே வர வாய்ப்பிருக்கிறது. ஆனால் எல்லாமே இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுவதால் இந்த இரு கட்சிகள் தான் முன்னணியில் இருக்கின்றன.

இந்த நேரத்தில் கமல்ஹாசனின் கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேராமல் தனித்துப்  போட்டியிடப்  போவதாக  அறிவித்திருக்கிறார்.  அதே போல நம் தமிழர் கட்சியும் அனைத்துத்  தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது.

ஒன்று சொல்லலாம். இந்த  தி.மு.க., அதி.மு.க.  கட்சிகளின்  கூட்டணி  உடைபடும் அபாயத்தில் இருக்கிறது எனலாம். திராவிடக் கட்சிகளின்  கூட்டணி  உடைவது  தான் தமிழகத்திற்கு நல்லது.

பொறுத்திருந்து  பார்ப்போம்!

No comments:

Post a Comment