Thursday, 1 August 2019

வாக்குறுதி நிறைவேற்றப்படும்...!

பிரதமர் மகாதிர் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இந்தத்   தவணை முடியும் மட்டும் நீங்களே பிரதமராக நீடிக்க வேண்டும் என்று கூறப்படுவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாக பிரதமர் மகாதிர் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார். 

சமீபத்தில் எதிர்க்கட்சியினர் அவரைச் சந்தித்து அவரது தலைமை நீடிக்க வேண்டும் என்பதாக வலியுறுத்திய பின்னரும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. 

"கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றபடும்" என்பதை மீண்டும் டாக்டர் மகாதிர் உறுதிப்படுத்தியிருக்கிறார். "எதிர்க்கட்சியினர் கொடுத்த ஆதரவை மதிக்கிறேன். அது அவர்களின் கருத்து.  ஆனால் கொடுத்த வாக்குறுதி காக்கப்படும். அதில் ஏதும் மாற்றமில்லை." 

எதிர்க்கட்சிகள் டாக்டர் மகாதிர் மீது காட்டும் தீடீர் பசத்தை மூத்த பத்திரிக்கையளர் காடிர் ஜாசின் சாடியிருக்கிறார். இந்தத் தீடீர் பாசம் என்பது நாட்டின் நலனுக்காக அல்ல.  எதிர்க்கட்சிகள் நடப்பு அரசாங்கத்தை வீழ்த்தும் சதியில் இறங்கியிருக்கின்றன.  பக்காத்தான்  கட்சிகளிடையே பிளவுகள் ஏற்படுத்தி  அரசாங்கத்தை வீழ்த்துவதே அவர்களின் நோக்கம் என்பதாக அவர் சாடியிருக்கிறார்!

எதிர்கட்சிகளின் தீடீர் பாசம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் டாக்டர் மகாதிர் கட்சியைச் சார்ந்தவர்களே அவர் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என்பதாகவும் கூறி வருகின்றனர்.  தனது சொந்தக் கட்சியினரே, அவர் தலைமை நீடிக்க வேண்டும் என்பதையும் டாக்டர் மகாதிர் ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

இது போன்ற பேச்சுக்கள் டாக்டர் மகாதிரைப் பலவீனப்படுத்துகின்றன என்பதும் ஒரளவு உண்மையே.  எதிர்க்கட்சியினர் கூறுவதை நம்மால் உணர முடிகின்றது.  அவர்களின் நோக்கம் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கம் கொண்டவை.  ஆனால் அதனையே ஆளுங்கட்சியைச்  சேர்ந்தவர்கள் கூறும் போது அது வேறு ஒரு அர்த்தத்தில்  ஊகிக்கப்படும்.  டாக்டர் மகாதீரே அதன் பின்னணியில் இயங்குகிறார் என்பதாகப் பொருள் கொள்ளப்படும்.

நாம் சொல்ல வருவதெல்லாம் இது போன்ற பேச்சுக்கள் வருங்காலங்களில்  எழ்வே கூடாது என்பது தான், குறிப்பாக பக்காத்தான் கட்சியிலிருந்து  இது போன்று பேசுவதை தடை விதிக்க வேண்டும். 

டாக்டர் மகாதிர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்பதை அறிய மகிழ்ச்சி!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Wednesday, 31 July 2019

ஏன் இந்த புலம்பல்..?

அன்வார் இப்ராகிம் அடுத்த பிரதமர் ஆவதை விரும்பாதவர்கள் இருக்கலாம். விரும்பாதவர்களில் பலர் அரசியல்வாதிகள்.   இவர்களில் பலர் அன்வாரின் முன்னாள் எதிர்ப்பாளர்கள். இவர்கள் மீண்டும் மீண்டும்  அன்வாருக்கு எதிராகவே பேசி வருகின்றனர்.

ஆனால் மக்கள்,  அன்வாரை ஆத்ரிக்கின்றனர்.  மக்கள் அமைதியானவர்கள்.  அவர்களின் குரல்  வெளியே  ஒலிப்பதில்லை.  ஆனால் அரசியல்வாதிகளின் குரல் வழக்கம் போல் பத்திரிக்கைகளில் பெரிதுப் படுத்தப்படுகின்றன! 

இந்த  எதிர்ப்பாளர்களின் குரலை நாம் அலட்சியப்படுத்தலாம்.  அல்லது ஒதுக்கிவிடலாம்.  ஆனால் இவர்கள் தொடர்ந்து குரல் எழுப்புவது என்பது மக்களை அவர்கள் தூண்டி விடுகிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. 

டாக்டர் மகாதிர் தொடர்ந்து  அவரின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி வருகிறார். அடுத்த பிரதமர் அன்வார் என்பதில் கருத்து வேறுபாடில்லை.  சமீபத்திய பேட்டி ஒன்றிலும் மீண்டும் அதனையே வலியுறுத்தியிருக்கிறர்.  இனி மேலும் அவர் அப்படித்தான் சொல்லுவார்.  ஒரே காரணம் தான். அவர் வயது அப்படி. இந்த வயதில், தனது 94-வது வயதில் அவர் கொடுத்த வாக்குறுதியை மீறுவது என்பது  மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க முடியாது.  94 வயதில் ஒரு பொய்யராக, ஏமாற்றுக்காரராக அவரால் இருக்க ஒரு நாளும் முடியாது.  அரசியல்வாதிகளில் பெரும்பாலும் வயது வித்தியாசம் இன்றி பொய்யராகவும், உருட்டல் புரட்டல்வாதிகளாகவும் இருக்க முடிகிறது என்றால்  அவர்களின் வளர்ப்பு அப்படி! அந்தப் பட்டியலில் டாக்டர் மகாதீரை சேர்க்க முடியாது! 

நாட்டின் 14-வது தேர்தலில் வெற்றி பெற்று டாக்டர் மகாதீரை பிரதமர் பதவிக்குக் கொண்டு வந்த போது அவர் ஓர் இடைக்கால பிர்தமர் என்கிற அறிவிப்போடு தான் அவர் பதவி ஏற்றார்.  இதில் ஏதும் ஒளிவு மறைவு இல்லை. 

இப்போது இதனை எதிர்ப்பவர்கள் என்ன காரணத்தோடு எதிர்க்கிறார்கள்?  முக்கியமாக அரசாங்கம் இயங்க முடியாத அளவுக்கு ஒரு நெருக்கதலைக் கொண்டு வருகிறார்கள்!  பக்கத்தான் அரசாங்கம் மக்களிடையே  ஒரு செல்வாக்கைப் பெறாதபடி கவனமாக இருக்கிறார்கள்! இது எதிர்கட்சிகளின் வேலை. அப்படி செய்தால் தான் அது அவர்களுக்கு,  வருகின்ற பொதுத் தேர்தலில் இலாபம்!  ஆளுங்கட்சியில் இருப்பவர்கள், அன்வாரின் முன்னாள் எதிர்ப்பாளர்கள்.  அன்வார் பதவிக்கு வந்தால் தங்கள் பதவிக்கு ஆபத்து என்று நினைப்பவர்கள்!

இப்போது "டாக்டர் மகாதிரே இருக்கட்டும்" என்று புலம்புவர்கள் யார் என்பது புரிகிறது அல்லவா!

Monday, 29 July 2019

நியாயமான விசாரணை கிடைக்காது...!

பிரதமர் துறையின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் டாக்டர் முஜாஹிட் யுசோப் ராவா,   சர்ச்சைக்குறிய இந்திய ,மத போதகர் ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு நாடு கடத்தாதது ஏன்  என்பது பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

"ஜாகிரை நாடு கடுத்துவதில் பிரச்சனை இல்லை. ஆனால் அவருக்கு நீதி கிடைக்குமா என்பதில் தான் சிக்கல்.  நீதியை அடிப்படையாகக் கொண்டு அவர் நியாயமாக நடத்தப்பட வேண்டும்.  அங்கு அவருக்கு நியாயமான விசாரணை கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். இந்த விவகாரத்தில் வேறு எந்த தனிப்பட்ட காரணங்களும் இல்லை."

அந்த விளக்கங்களை நாம் ஏற்றுக் கொள்ளுகிறோம்.  இந்தியாவில் அவருக்கு நியாயமான விசாரணை கிடைக்காது என்பது ஜாகிருக்குத் தான் (பிரதமருக்கும் தான்)  தெரியும். நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.

ஆனால் நமக்கும் அமைச்சரிடமிருந்து  சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. ஜாகிருக்கு மற்ற இஸ்லாமிய நாடுகள் குடியுரிமை கொடுக்காத நிலையில் மலேசிய குடியுரிமை கொடுக்க ஏதாவது விசேஷ காரணங்கள் உண்டா? 
 
 அவருக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டதன் நோக்கமே இங்குள்ள இந்து மதத்தினருக்கு எதிராக செயல் பட வேண்டும் என்பது தான் என்று சொல்லப்படுகிறதே! உண்மையா? அவருடைய செய்பாடுகளும் அப்படித்தானே இருக்கின்றன!

இந்தியாவில் அவர் இந்துக்களுக்கு எதிராக செயல்பட முடியவில்லை. அதனால் அவர் இந்துக்களை எதிர்ப்பதற்கு மலேசியாவை ஒரு தளமாக பயன்படுத்துகிறாரா? 

ஜாகிர் எல்லாக் காலங்களிலும் இஸ்லாம் அல்லதவர்களை குறை சொல்லுபவராகவே தன்னை வளர்த்துக் கொண்டு வந்திருக்கிறார்.  அது அவருடைய பிரச்சனை. ஆனால் மலேசியாவிலும் இந்துக்களை எதிர்க்கும் வாய்ப்பை அவருக்கு அரசாங்கம் கொடுத்திருக்கிறது.  ஜாகிர் இங்கு அடைக்கலம் நாடுவதற்கு முன்னர் இல்லாத பிரச்சனைகள் எல்லாம் இப்போது எழுகின்றன.  உண்மையைச் சொன்னால் இவருடைய பேச்சுக்கள் அனைத்தும் நிந்தனை சட்டத்தின் கீழ் வரவேண்டும். கடைசியாக இந்திரா காந்தின் குழந்தை பிரசன்னா டிக்சா "மறைக்கப்பட்டு" இருப்பதிலும் இவர் பெயர் அடிபடுகிறது. 

இந்த அளவுக்கு ஜாகிர் இந்த நாட்டில் சுதந்திரமாக செயல்படுகிறார்! இது வரை அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் கொண்டு வரப்படவில்லை!

இங்கு, நமது நாட்டில், நீதி, நியாயம் பற்றி பேச முடியாத போது இன்னொரு நாட்டின் நீதி நியாயம் பற்றி பேசுவது ......என்ன நியாயம்?

அங்கு எப்படி நியாயமான விசாரணை கிடைக்காதோ  இங்கும் அது கிடைக்காது என்று நாமும் நினைக்க வேண்டியது தானோ!