Monday, 11 November 2019

மருத்துவம் படிக்க வற்புறுத்தவேண்டாம்...!

நமது வீட்டுப் பிள்ளைகள் மருத்துவம் படிக்க விரும்பினால் அவர்களை நாம் உற்சாகப்படுத்தி அவர்கள் மருத்துவராக வர நம்மால் செய்ய முடிந்த உதவிகளைச் செய்து அவர்களை மருத்துவராக ஆக்குவது நமது கடமை.

ஆனால் விரும்பாத பிள்ளைகளை வற்புறுத்தி மருத்துவம் படிக்க வைக்காதீர்கள்.  அதனால் அவர்களுக்குக் கேடுதல் தான் விளையுமே தவிர நல்லது எதுவும் நடக்கப்போவதில்லை. 

விரும்பி மருத்துவம் படிப்பவர்களின் பயணம்  விண்வெளிக்கும் அவர்களை இட்டுச் செல்லும்    வற்புறுத்திப் படிப்பவர்களின் பயணம் வெறுப்பிலேயே பயணம் செய்யும்.

இப்போது நம் நாட்டில் ஏகப்பட்ட டாகடர்கள் உருவாக்கப்படுகின்றனர். உள் நாட்டில் மருத்துவக் கல்லூரிகளுக்கு பஞ்சமில்லை.  சுமார் 33 மருத்துவக் கல்லூரிகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அங்கிருந்து சுமார் 3,000 மருத்துவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகின்றனராம். அவர்களின் தரத்தைப் பற்றி நாமே தம்பட்டம் அடிக்துக்கொள்ளக் கூடாது. நீங்களே மருத்துவமனைக்குப் போனால் தெரிந்துவிடும். தரத்தைப் பற்றி அரசாங்கமே கவலை கொள்ளவில்லை! நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

இது போக வேளி நாடுகளுக்குப் போய் மருத்துவம் படித்துவிட்டு வருபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 3,000 பேர்.  ஆக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6,000 மருத்துவர்கள் நமது மருத்துவமனைகளை வலம் வருகிறார்களாம்!  தரமான கல்வியும், தரமற்ற கல்வியும் ஒன்று சேர்கின்றன!

இந்த சூழலில் இன்னும் நாங்கள் மருத்துவம்  தான் படிக்க வைப்போம் என்று பெற்றோர்கள் பிடிவாதம் பிடிப்பதை நிறுத்தவேண்டும்.  நமக்குத்  தெரிந்ததெல்லாம்  மருத்துவம் அல்லது  சட்டப்படிப்பு.  இதைவிட்டால் வேறு படிப்பில்லை என்று யாரோ ஒரு புண்ணியவான் சொல்லப் போக அதையே உடும்புப் பிடியாய் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.

இன்றைய நிலை வேறு. அந்தக் காலம் போல குறிப்பிட்ட சில படிப்புக்களைத் தான் படிக்க வேண்டும் என்கிற நிலை இப்போது இல்லை.  இன்றைய மாணவர்களும் அதனை விரும்புவதில்லை. 

ஒவ்வொரு துறைக்கும் தனியே படிப்பு உண்டு.  ஒரு சினிமா நடிகனாக ஆகக் கூட   படிப்பு உண்டு. பட்டம் பெறலாம்.  அது சினிமாத் துறை. விளையாட்டுத் துறைக்கும் படிப்பு உண்டு. பட்டம் பெறலாம்.    அது விளையாட்டுத் துறை.     இப்படி கல்வி பறந்து விரிந்து செல்கிறது.   கணக்கியல் துறை என்பது ஒரு முக்கியமான துறை. அதிலும் பல துணைப்பிரிவுகள். 

இப்படி பல துறைகள் இருக்க  ஒன்றை மட்டும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதை   நாம் கைவிட வேண்டும்.

காலத்துக்கு ஏற்ற மாற்றத்தை நமது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை விட பிள்ளைகள் எந்த கல்வியைப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதற்கான வாய்ப்புக்களை அவர்களுக்கு ஏற்படுத்துக் கொடுக்க வேண்டும்.        

"மருத்துவம் மட்டுமே!" என்று மாணவன் விரும்பினால் அவன் படிக்கட்டும்.  விரும்புவதை படிக்கட்டும். விரும்பாததை வீசி எறியட்டும்!                                        

Thursday, 7 November 2019

யார் இந்த கே.ஆர். வேணுகோபால் சர்மா?

                                                                                      கே. ஆர்.வேணுகோபால் சர்மா 

 இப்போது உலகம் அனைத்திலும் உள்ள தமிழர்களின் பேராசான் என்று போற்றப்படுகின்ற  திருவள்ளுவரை பற்றியான செய்திகள் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகின்றன!

இப்போது நாம் அங்குப் போகப் போவதில்லை.  திருவள்ளுவரின் திரு உருவத்தை வரைந்த  ஓவியப் பெருந்தகை கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களைப் பற்றி  கொஞ்சம் பார்ப்போம். 

ஓவியர் சர்மா 17.12.1908 -ம் ஆண்டு சேலத்தில் பிறந்தவர் என்பதாகக் கூறப்பட்டாலும் அவர் இறந்த தேதியை  யாரும் குறிப்பிடவில்லை. அது தேவை இல்லை என்று நினைத்திருக்கலாம்.  காரணம் திருவள்ளுவர் ஓவியம் இருக்கும் வரை  தமிழ் கூறும் நல்லுலகம் அவரது பெயரையும் ஞாபகத்தில்  வைத்திருக்கும் என்று நம்பலாம். அதனால் அவருக்கு இறப்பு என்பது இலை.

திருவள்ளுவர் ஓவியத்தை  வரைய  தனது  தந்தை திருக்குறளை 40 ஆண்டுகள் ஆய்வு செய்த  பின்னர் வரைந்ததாக அவரது மகன் விநாயக் ஸ்ரீராம் குறிப்பிடுகிறார்.  அவருடைய ஆய்வு, உழைப்பு என்பது வீண் போகவில்லை. உலகெங்களிலும்  இன்று திருவள்ளுவரின் திரு ஓவியம் தமிழர்கள் வீட்டை அலங்கரிக்கின்றன. திருவள்ளுவரின் அடையாளம் என்பது இந்த ஒரு ஓவியத்தை தவிர வேறு எதுவும் தமிழ் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர்கள் காமராஜர், பக்தவத்சலம்,  அண்ணாத்துரை, கருணாநிதி  தமிழறிஞர்கள் மு. வரதராசனார், கி.ஆ.பெ. விசுவநாதம்,  கிருபானந்த வாரியார்,  ஜீவா, பாரதிதாசன்  போன்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களின் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார் வேணுகோபால் சர்மா. அனைத்து அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு  தமிழக அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை அதிகாரப்பூர்வமாக திருவள்ளுவர் படமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அவர் கைப்பட வரைந்த அந்த திருவள்ளுவர் ஓவியம் இன்னும் தன்னிடம் இருப்பதாகக் கூறுகிறார் அவரது மகன். 

தனது தந்தை தான் வரைந்த திருவள்ளுவர் படத்திற்கு பணமோ, பொருளோ எதனையும் அவர் பெற்றுக் கொள்ளவில்லை. பொருளாதார உதவிகள் கொடுக்கப்பட்டும் அதனை அவர் மறுத்துவிட்டாராம்,

அவர் வாழ் நாளில் வரைந்தவை மிகச் சில படங்கள் தான். அவர் வரைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்,  காயிதே மில்லத் இன்னும்  சட்டசபையை அலங்கரிக்கின்றன.  மேலும் தமிழ்த்தாய்,  தியாகய்யர், புவனேஸ்வரி, காமாட்சி, மீனாட்சி, கிருஷ்ணர், நள தமயந்தி,  தங்க மயில் முருகன் போன்றவையும் அவர் வரைந்த படங்கள் தாம். 

முன்னாள் முதலைமைச்சர், சி.என்.அண்ணாத்துரையால் "ஓவியப் பெருந்தகை" என்னும் பட்டத்தை அளித்து சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.

வேணுகோபால் சர்மாவின் தொழில் என்பது: அவர் முன்னாள் நாடக நடிகர். அதன் பின்னர் சினிமாவுக்கு வந்து சொந்தமாகப் படங்களைத் தயாரித்து இயக்கி வெளியிட்டவர். ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

கடைசியாக நாம் சொல்ல வருவதெல்லாம்:  திருவள்ளுவர் எல்லாக் காலங்கிலும்  பலரில் ஏதோ அவரும் ஒரு சாமியார் என்பதாகத்தான் இருந்து வந்தார்!  அதிலும் பல படங்களில் ஓரு கோமாளி சாமியாராகவே காட்டப்பட்டு வந்தார்!  

ஆனால் அதனைத் திருத்தி அமைத்தவர் கே.ஆர்.வேணுகொபால் சர்மா.  சும்மா திருத்தி அமைக்கவில்லை. நாற்பது ஆண்டுகளின் உழைப்பு. திருக்குறளைப் படித்து, புரிந்து  அதனை அவர் செய்திருக்கிறார்.

தமிழுலகம் அவரது ஓவியத்தை ஏற்றுக்கொண்டது. அதுவே தொடர வேண்டும் என்பதே நமது ஆசை.

ஆமாம், யார் இந்த கே.ஆர்.வேணுகோபால்  சர்மா?அவர் தான் காமாட்சிப்பட்டி  ராமசாமி ஐயர் மகன் வேணுகோபால்!

இனி அடுத்த ஆண்டும் இல்லை..!


பிரதமர் பதவியை அன்வார் இப்ராகிடம் ஒப்படைப்பது பற்றி,  மகாதிர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார் என்று சொல்லுவதில் நியாயமில்லை!

அவர் எப்போதும் ஒன்றை மட்டும் வலியுறுத்துகிறார்.  "அன்வார் இப்ராகிம் தான் அடுத்த பிரதமர்" என்பதை மட்டும் அவர் சொல்லத் தவறுவதில்லை.  அப்படி அவர் ஒவ்வொரு முறையும் சொல்லும் போதும் அடுத்து வருவது ஏதோ ஓர் அறிவிப்பு.  அது அன்வாருக்குப் பாதகமாகவே அமைகிறது!

சமீபத்தில் பேங்கோக்கில் ஒரு பேட்டியின் போது "அன்வார் தான் அடுத்த பிரதமர், அஸ்மின் அலி அல்ல" என்பதாகப் பேட்டி கொடுத்திருந்தார். இங்கு வந்த பிறகு  அடுத்து ஆண்டும் "நான் தான் பிரதமர்" என்பதாகக் கூறியிருக்கிறார்!

இதனையெல்லாம் குறை கூறுவதில் புண்ணியமில்லை.  அவர் தன்னை விட சிறந்த பிரதமர் இன்றைய நிலையில் யாரும் இல்லை என்கிற எண்ணத்தில் அவர் இருக்கிறார். 

அதற்கும் காரணங்கள் உண்டு.   முன்பு அவர் பிரதமர் பதவியிலிருந்து  விலகிய போது  அவரின் வாரிசுகள் என்று சொல்லப்பட்டவர்கள் யாரும் அவர் எதிர்பார்த்தபடி அவர்களின் செயல்பாடுகள் சரியாக அமையவில்லை  என்பது தான் அவர்கள் மீது இப்போதும் அவர் வைக்கின்ற குற்றச்சாட்டு!

அதனால் அடுத்த பிரதமர் யார்  என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்று அவர் நினைக்கிறார்.

உண்மை தான் நாமும் அவர் கருத்தில் உடன்படுகிறோம். ஆனால் இப்போது அவர் யாரையும் வாரிசாக நினைக்க வேண்டிய நிலையில் இல்லை.  காரணம் அடுத்த பிரதமர் யார் என்கிற பிரச்சனை எப்போதோ தீர்க்கப்பட்டு விட்ட ஒரு பிரச்சனை.  சென்ற பொதுத் தேர்தலின் போது  அந்த முடிவு எடுக்கப்பட்டு விட்டது.  ஆமாம், அன்வார் இப்ராகிம் தான் அடுத்த பிரதமர் என்கிற முடிவு பக்காத்தான் தலைவர்களிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முடிவாகும்.  

பிரதமர் மகாதிர் தற்காலிகமாகத் தான் பதவிக்கு வந்தார்.  அடுத்த பிரதமரிடம் ஒப்படைக்கும் தேதி, ஆண்டு என்பதெல்லாம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.  பதவியை ஒப்படைக்க அவர் விரும்பினாலும் அவரைச் சுற்றியிருக்கும் ஊழல்வாதிகள் அன்வார் பதவிக்கு வருவதை விரும்பவில்லை! அதன் காரணமாகத்தான்  இந்த இழுத்தடிப்பு நாடகம்!

பிரதமர் மகாதிர் எப்போது தனது பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பார் என்பது நம் முன்னே உள்ள கேள்வி.  இப்போதைக்கு அல்ல என்பது நமக்குத் தெரிகிறது.  அடுத்த தேர்தல் வரை இழுத்தடிக்கப்படலாம் என்றே தோன்றுகிறது. அவர் பதவி விலகுவார் என்று நமக்குத் தோன்றவில்லை!

அடுத்த பொதுத் தேர்தல் வர ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அவர் விலகலாம்  என்பதே நமது கணிப்பு! இது அரசியல்! எதுவும் நடக்கும்!

ஏதோ நல்லது நடக்கப்போகிறது என்பதே நமது எதிர்பார்ப்பு!