Monday 11 November 2019

மருத்துவம் படிக்க வற்புறுத்தவேண்டாம்...!

நமது வீட்டுப் பிள்ளைகள் மருத்துவம் படிக்க விரும்பினால் அவர்களை நாம் உற்சாகப்படுத்தி அவர்கள் மருத்துவராக வர நம்மால் செய்ய முடிந்த உதவிகளைச் செய்து அவர்களை மருத்துவராக ஆக்குவது நமது கடமை.

ஆனால் விரும்பாத பிள்ளைகளை வற்புறுத்தி மருத்துவம் படிக்க வைக்காதீர்கள்.  அதனால் அவர்களுக்குக் கேடுதல் தான் விளையுமே தவிர நல்லது எதுவும் நடக்கப்போவதில்லை. 

விரும்பி மருத்துவம் படிப்பவர்களின் பயணம்  விண்வெளிக்கும் அவர்களை இட்டுச் செல்லும்    வற்புறுத்திப் படிப்பவர்களின் பயணம் வெறுப்பிலேயே பயணம் செய்யும்.

இப்போது நம் நாட்டில் ஏகப்பட்ட டாகடர்கள் உருவாக்கப்படுகின்றனர். உள் நாட்டில் மருத்துவக் கல்லூரிகளுக்கு பஞ்சமில்லை.  சுமார் 33 மருத்துவக் கல்லூரிகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அங்கிருந்து சுமார் 3,000 மருத்துவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகின்றனராம். அவர்களின் தரத்தைப் பற்றி நாமே தம்பட்டம் அடிக்துக்கொள்ளக் கூடாது. நீங்களே மருத்துவமனைக்குப் போனால் தெரிந்துவிடும். தரத்தைப் பற்றி அரசாங்கமே கவலை கொள்ளவில்லை! நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

இது போக வேளி நாடுகளுக்குப் போய் மருத்துவம் படித்துவிட்டு வருபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 3,000 பேர்.  ஆக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6,000 மருத்துவர்கள் நமது மருத்துவமனைகளை வலம் வருகிறார்களாம்!  தரமான கல்வியும், தரமற்ற கல்வியும் ஒன்று சேர்கின்றன!

இந்த சூழலில் இன்னும் நாங்கள் மருத்துவம்  தான் படிக்க வைப்போம் என்று பெற்றோர்கள் பிடிவாதம் பிடிப்பதை நிறுத்தவேண்டும்.  நமக்குத்  தெரிந்ததெல்லாம்  மருத்துவம் அல்லது  சட்டப்படிப்பு.  இதைவிட்டால் வேறு படிப்பில்லை என்று யாரோ ஒரு புண்ணியவான் சொல்லப் போக அதையே உடும்புப் பிடியாய் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.

இன்றைய நிலை வேறு. அந்தக் காலம் போல குறிப்பிட்ட சில படிப்புக்களைத் தான் படிக்க வேண்டும் என்கிற நிலை இப்போது இல்லை.  இன்றைய மாணவர்களும் அதனை விரும்புவதில்லை. 

ஒவ்வொரு துறைக்கும் தனியே படிப்பு உண்டு.  ஒரு சினிமா நடிகனாக ஆகக் கூட   படிப்பு உண்டு. பட்டம் பெறலாம்.  அது சினிமாத் துறை. விளையாட்டுத் துறைக்கும் படிப்பு உண்டு. பட்டம் பெறலாம்.    அது விளையாட்டுத் துறை.     இப்படி கல்வி பறந்து விரிந்து செல்கிறது.   கணக்கியல் துறை என்பது ஒரு முக்கியமான துறை. அதிலும் பல துணைப்பிரிவுகள். 

இப்படி பல துறைகள் இருக்க  ஒன்றை மட்டும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதை   நாம் கைவிட வேண்டும்.

காலத்துக்கு ஏற்ற மாற்றத்தை நமது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை விட பிள்ளைகள் எந்த கல்வியைப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதற்கான வாய்ப்புக்களை அவர்களுக்கு ஏற்படுத்துக் கொடுக்க வேண்டும்.        

"மருத்துவம் மட்டுமே!" என்று மாணவன் விரும்பினால் அவன் படிக்கட்டும்.  விரும்புவதை படிக்கட்டும். விரும்பாததை வீசி எறியட்டும்!                                        

No comments:

Post a Comment