கே. ஆர்.வேணுகோபால் சர்மா
இப்போது உலகம் அனைத்திலும் உள்ள தமிழர்களின் பேராசான் என்று போற்றப்படுகின்ற திருவள்ளுவரை பற்றியான செய்திகள் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகின்றன!
இப்போது நாம் அங்குப் போகப் போவதில்லை. திருவள்ளுவரின் திரு உருவத்தை வரைந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
ஓவியர் சர்மா 17.12.1908 -ம் ஆண்டு சேலத்தில் பிறந்தவர் என்பதாகக் கூறப்பட்டாலும் அவர் இறந்த தேதியை யாரும் குறிப்பிடவில்லை. அது தேவை இல்லை என்று நினைத்திருக்கலாம். காரணம் திருவள்ளுவர் ஓவியம் இருக்கும் வரை தமிழ் கூறும் நல்லுலகம் அவரது பெயரையும் ஞாபகத்தில் வைத்திருக்கும் என்று நம்பலாம். அதனால் அவருக்கு இறப்பு என்பது இலை.
திருவள்ளுவர் ஓவியத்தை வரைய தனது தந்தை திருக்குறளை 40 ஆண்டுகள் ஆய்வு செய்த பின்னர் வரைந்ததாக அவரது மகன் விநாயக் ஸ்ரீராம் குறிப்பிடுகிறார். அவருடைய ஆய்வு, உழைப்பு என்பது வீண் போகவில்லை. உலகெங்களிலும் இன்று திருவள்ளுவரின் திரு ஓவியம் தமிழர்கள் வீட்டை அலங்கரிக்கின்றன. திருவள்ளுவரின் அடையாளம் என்பது இந்த ஒரு ஓவியத்தை தவிர வேறு எதுவும் தமிழ் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர்கள் காமராஜர், பக்தவத்சலம், அண்ணாத்துரை, கருணாநிதி தமிழறிஞர்கள் மு. வரதராசனார், கி.ஆ.பெ. விசுவநாதம், கிருபானந்த வாரியார், ஜீவா, பாரதிதாசன் போன்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களின் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார் வேணுகோபால் சர்மா. அனைத்து அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழக அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை அதிகாரப்பூர்வமாக திருவள்ளுவர் படமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அவர் கைப்பட வரைந்த அந்த திருவள்ளுவர் ஓவியம் இன்னும் தன்னிடம் இருப்பதாகக் கூறுகிறார் அவரது மகன்.
தனது தந்தை தான் வரைந்த திருவள்ளுவர் படத்திற்கு பணமோ, பொருளோ எதனையும் அவர் பெற்றுக் கொள்ளவில்லை. பொருளாதார உதவிகள் கொடுக்கப்பட்டும் அதனை அவர் மறுத்துவிட்டாராம்,
அவர் வாழ் நாளில் வரைந்தவை மிகச் சில படங்கள் தான். அவர் வரைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத் இன்னும் சட்டசபையை அலங்கரிக்கின்றன. மேலும் தமிழ்த்தாய், தியாகய்யர், புவனேஸ்வரி, காமாட்சி, மீனாட்சி, கிருஷ்ணர், நள தமயந்தி, தங்க மயில் முருகன் போன்றவையும் அவர் வரைந்த படங்கள் தாம்.
முன்னாள் முதலைமைச்சர், சி.என்.அண்ணாத்துரையால் "ஓவியப் பெருந்தகை" என்னும் பட்டத்தை அளித்து சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.
வேணுகோபால் சர்மாவின் தொழில் என்பது: அவர் முன்னாள் நாடக நடிகர். அதன் பின்னர் சினிமாவுக்கு வந்து சொந்தமாகப் படங்களைத் தயாரித்து இயக்கி வெளியிட்டவர். ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார்.
கடைசியாக நாம் சொல்ல வருவதெல்லாம்: திருவள்ளுவர் எல்லாக் காலங்கிலும் பலரில் ஏதோ அவரும் ஒரு சாமியார் என்பதாகத்தான் இருந்து வந்தார்! அதிலும் பல படங்களில் ஓரு கோமாளி சாமியாராகவே காட்டப்பட்டு வந்தார்!
ஆனால் அதனைத் திருத்தி அமைத்தவர் கே.ஆர்.வேணுகொபால் சர்மா. சும்மா திருத்தி அமைக்கவில்லை. நாற்பது ஆண்டுகளின் உழைப்பு. திருக்குறளைப் படித்து, புரிந்து அதனை அவர் செய்திருக்கிறார்.
தமிழுலகம் அவரது ஓவியத்தை ஏற்றுக்கொண்டது. அதுவே தொடர வேண்டும் என்பதே நமது ஆசை.
ஆமாம், யார் இந்த கே.ஆர்.வேணுகோபால் சர்மா?அவர் தான் காமாட்சிப்பட்டி ராமசாமி ஐயர் மகன் வேணுகோபால்!
No comments:
Post a Comment