Friday, 3 July 2020
கொள்ளையடிப்பவன் கோடிசுவரனா? (76)
நம்மிடையே தொழிலதிபர் என்பவர் யார் என்பதில் பல குழப்பங்கள் உள்ளன!
தமிழ் நட்டில் கோயில் சிலைகளைத் திருடி விற்பவனை தொழிலதிபர் என்கிறார்கள்! அரசியலில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவனைக் கோடிசுவரன் என்கிறார்கள்! தொழிலில் நேர்மையற்ற - எந்த ஒரு நீதியையும் நேர்மையையும் கடைப்பிடியாதவனை, பணம் சேர்த்தவனை - தொழிலதிபர் என்கிறார்கள்!
யார் தொழிலதிபர் என்பதில் நமக்கு நிறையவே கேள்விகள் எழுகின்றன.
பணம் வேண்டும் என்றால் அதற்காக உழைக்க வேண்டும். தொழிலில் கவனம் செலுத்த வேண்டும். ஓரிரு ஆண்டுகளில் தொழிலதிபர் ஆக சாத்தியமில்லை! எல்லாம் ஒவ்வொரு படியாக மேலே போக வேண்டும். அதுவும் கூட ஓரிரு தலைமுறை ஆகலாம்.
எடுத்த எடுப்பில் நான் தொழிலதிபர் என்றால் எங்கோ, ஏதோ கோளாறு ஏற்பட்டதாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம்! அப்படியெல்லாம் யாராலும் வந்து விட முடியாது! இது மந்திரத்தால் மாங்காய் காய்க்கும் வேலை அல்ல!
தொழிலில் முதல் தலைமுறையிலேயே தொழிலதிபர் ஆகி விட முடியாது. அப்படி ஒருவர் ஆக முடிந்தால் அது ஏமாற்று வேலை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஒரு கோடிசுவரன் என்றால் அவருக்குக் குறைந்தபட்சம் ஒரு கோடி சொத்துக்கள் இருக்க வேண்டும். தொழிலதிபர் என்றால் ...? அதற்கு மேலே...! சும்மா தொழில் செய்பவர்கள் எல்லாம் தொழில் அதிபர்கள் என்கிற வரம்புக்குள் வர முடியாது.
நம் நாட்டில் யார் தொழிலதிபர்கள்? முதல் பத்து பணக்காரர்கள் அல்லது இருபது பணக்காரர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் அவர்கள் பல கோடிகளுக்கு அதிபர்கள் ஆவார்கள்.
நமது தமிழர்களில் ஒருவரைத் தொழிலதிபர் என்று சொல்ல வேண்டும் என்றால் நம் கண்முன் நிற்பவர் ஆனந்தகிருஷ்ணன் மட்டுமே. வேண்டுமானால் ஏர் ஏசியா, டோனி ஃபெர்னாண்டெஸ் சொல்லலாம். ஆனால் ஆனந்தகிருஷ்ணன் எட்டாத உயரத்தில் இருக்கிறார்!
அதனால் தொழிலதிபர் என்பது சாதாரண விஷயம் அல்ல. அதனுடைய உயரம் வேறு. நேற்று முளைத்த காளான்களையெல்லாம் தொழிலதிபர் என்று அடைமொழியிட்டுக் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல!
அரசியலில் கொள்ளையடித்தவன், மக்கள் பணத்தைச் சூறையாடியவன், திருட்டுத் தொழிலில் ஈடுபட்டவன் - இவர்கள் எல்லாம் திருடர்கள் என்று சொல்லலாமே தவிர அவர்களைத் தொழிலதிபர்கள் என்று சொல்லக்கூடாது! அந்த வரம்புக்கள் அவர்கள் வரமாட்டார்கள்!
Thursday, 2 July 2020
தொழிலில் ஈடுபாட்டை அதிகரியுங்கள்! (75)
தொழில் செய்வதன் மூலமே நமது பொருளாதாரம் பலம் பெறும்.
நமது இனத்திலேயே ஒரு குறிப்பிட்ட சில சமூகத்தினர் பொருளாதார பலம் பெற்றிருப்பது எதனால், எப்படி என்பதை நமது இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.
குறிப்பாக நமது செட்டியார்கள் எனப்படும் நகரத்தார் சமூகத்தை எடுத்துக் கொள்வோம். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அவர்கள் தொழில் செய்வதில் தான் ஆர்வம் காட்டும் சமூகமாக இருக்கின்றனர். அவர்கள் வேலை செய்து தான் பிழைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. அவர்கள் என்ன கெட்டா போய்விட்டார்கள்? சீன சமுதாயம் என்ன தான் பொருளாதாரத்தில் முன்னணியில் இருந்தாலும் நகரத்தாரும் தொழிலை விட்டு ஓடிவிடவில்லையே!
நமது தமிழ் முஸ்லிம் சகோதரர்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஆரம்ப காலத்தில் எப்படி தொழில்களைத் தங்கள் கைவசம் வைத்திருந்தார்களோ இப்போதும் அப்படித்தானே இருக்கிறார்கள்! எந்த மாற்றமும் இல்லையே! யார் அவர்களுக்குத் தொழில் செய்ய பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள்? ஒருவரும் இல்லையே!
எனக்குத் தெரிந்த முஸ்லிம் நண்பர்கள் பலர் கையில் இருக்கும் பணத்தை வைத்துத் தான் தொழிலைத் தொடங்கினர். பெரிய முதலீடு இல்லை. துணிச்சல் மட்டுமே அவர்களின் முதலீடு. சறுக்கினால் அடி விழும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் ஒதுங்கி விடுவதில்லை! அடுத்த ஆட்டத்துக்குத் தயாராகி விடுவார்கள்!
அதைத்தான் தன்னம்பிக்கை என்கிறோம். மீண்டும் மீண்டும் எழ வேண்டும். விழுந்து கிடப்பது வெட்கம் என்பதை நாம் உணரவேண்டும். மனிதர்கள் நாம். அடுத்தக் கட்டத்துக்கு நாம் தயராகி விட வேண்டும்.
இப்போது நமது இளைஞர்கள் பலர் பொருளாதாரப் போட்டிக்குத் தயராகி விட்டனர். பலர் தொழிலில் ஈடுபாடு காட்டுகின்றனர். கூட்டு முயற்சிகள் நம்மிடையே சரியாக வேருன்றவில்லை. அவநம்பிக்கைகள் அதிகம். யாரிடமும் போட்டி வேண்டாம். நமது தொழில், நமது பிழைப்பு. நமது முன்னேற்றம். நமது குடும்பம். நமது சமுதாயம்.
ஆனாலும் தனி முயற்சிகள் சிறப்பாகவே இயங்குகின்றன என்றே சொல்லலாம். நம்மால் காசுகளை அள்ளி வீச முடியாது என்பது உண்மை தான். ஆனால் கட்டுப்பாடுகளுடன் நாம் இயங்க வேண்டும்.
நண்பர்களே! தொழிலின் மீதான ஈடுபாட்டை அதிகரியுங்கள். பணம் அங்கு தான் கொட்டுகிறது! இல்லாவிட்டால் சீனர்கள் ஏன் தொழிலிலிருந்து பின் வாங்குவதில்லை என்று யோசியுங்கள். நாம் அவர்களிடம் பேசும் போது "இலாபம் இல்லை! தொழிலை மூடப் போகிறேன்!" என்று சொல்லுவார்களே தவிர அவர்கள் எந்தக் காலத்திலும் தொழிலை விட்டுவிட்டு ஓட மாட்டார்கள்!
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் படித்த போது: மூன்றே மூன்று விழுக்காடு இந்தோனேசிய சீனர்கள் இந்தோனேசியாவின் பொருளாதாரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போதும் கூட பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை!
பொருளாதார பலம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது.
எல்லா வாய்ப்புக்கள் இருந்தும் இந்தியர்களில் பஞ்சாபியர், குஜாராத்தியர், தெலுங்கர்கள், மலையாளிகள் - இவர்களே தொழிலில் முன்னணியில் இருக்கின்றனர்.
நாம் மட்டும் பின்னணியிலிருந்து கொண்டு அவர்களைப் பிழைக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்!
எல்லாருக்கும் வாய்ப்புக்கள் சமம். பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவது நமது கடமை! அவ்வளவு தான்!
குறைகள் சொல்லுவதை விட நிறைகளை மனதில் நிறைத்து பொருளாதார உயர்வில் கவனம் செலுத்துவோம்!
வழிபாட்டுத் தலங்களை உடைப்பதாவது?
நமது நாட்டில் வழிபாட்டுத் தலங்களை உடைப்பதை ஏதோ ஒரு கடமையாக அல்லது தமாஷாக எடுத்துக் கொள்கிறார்கள் போலத்தான் நமக்குத் தோன்றுகிறது!
வழிபாட்டுத் தலங்கள் என்னும் போது அதனை வெறும் மதமாக மட்டும் நாம் பார்க்கக் கூடாது. நாம் சாராத மதம் என்றால் அதனை வெறுப்போடு பார்க்கின்ற பார்வை மாற வேண்டும்.
நம் நாட்டில் பல்வேறு சமயங்களின் வழிபாட்டுத் தலங்களைப் பார்க்கிறோம். இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக! எந்த ஒரு ஆலயக் கட்டடங்களும் நமக்குப் புதிதல்ல. இந்துக் கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், சீனக் கோயில்கள், புத்தக் கோயில்கள், சீக்கியக் கோயில்கள் = இப்படி நீள்கிறது நமது வழிபாட்டுத் தலங்களின் பட்டியல். எதுவும் நமக்குப் புதிதல்ல.
நமது வாழ்க்கை முறை இப்படித்தான் இது வரை போய்க் கொண்டிருக்கிறது. அதில் எந்த மாற்றமும் தேவை இல்லை என்பது தான் மக்களின் கருத்து என்று சொல்லத் தேவை இல்லை.
இதனை ஏன் நாம் மாற்ற வேண்டும்? அதற்கென்ன அவசியம் வந்தது? இப்படி கோயில்களை உடைப்பதன் மூலம் அப்படி யார் உங்களைத் தூக்கி வைத்துக் கொண்டு ஆடப் போகிறார்கள்!
நாம் இதைப் பற்றி நினைக்கும் போது நமக்கு வேதனையாகத் தான் இருக்கிறது. இந்துக் கோயில்கள் என்னும் போது அவைகள் இன்று நேற்று புதிதாக முளைத்தவை அல்ல. எத்தனையோ ஆண்டுகள். தோட்டப்புறங்கள் எப்போது தோன்றினவோ அப்போதே இந்துக் கோயில்களும் தோன்றிவிட்டன.
காலங்காலமாக இருந்த கோயில்களை நேற்று முளைத்த அரசியல்வாதிகள் நல்ல பேர் வாங்க வேண்டும் என்பதற்காக அவைகளை உடைக்க வேண்டும் என்று கூறுவது எதனால்? வழிபாட்டுத் தலங்களை உடைப்பது நல்லது என்று யார் இவர்களுக்குப் ப்-போதித்தார்கள்?
ஏதோ, எங்கோ தேவையற்ற முட்டாள்தனங்களை எல்லாம் படித்துவிட்டு, பார்த்துவிட்டு இப்போது இங்கு "அதை உடை, இதை உடை!" என்று பேசுவதை நிறுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
ஓரு நூற்றாண்டு காலம் மக்களால் வழிபடும், கெடாவில் உள்ள ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தை "இப்போது நாங்கள் உடைப்போம்!" என்று மாநில பாஸ் அரசாங்கம் கூறுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு அதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே நமது தாழ்மையான விண்ணப்பம்.
நல்லது பாஸ் அரசாங்கத்திலும் நடக்கும் என எதிர்ப்பார்ப்போம்!
Subscribe to:
Posts (Atom)