Thursday 2 July 2020

தொழிலில் ஈடுபாட்டை அதிகரியுங்கள்! (75)

நான் எப்போதுமே சொல்லுவதுண்டு. நமது இளைஞர்கள் தொழிலில் அதிக ஈடுபாடு கொள்ள வேண்டும் என்று.

தொழில் செய்வதன் மூலமே நமது பொருளாதாரம் பலம் பெறும்.

நமது இனத்திலேயே ஒரு குறிப்பிட்ட சில சமூகத்தினர் பொருளாதார பலம் பெற்றிருப்பது எதனால், எப்படி என்பதை நமது இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். 

குறிப்பாக நமது செட்டியார்கள் எனப்படும் நகரத்தார் சமூகத்தை எடுத்துக் கொள்வோம்.  எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அவர்கள் தொழில் செய்வதில் தான் ஆர்வம் காட்டும் சமூகமாக இருக்கின்றனர். அவர்கள் வேலை செய்து தான் பிழைக்க வேண்டும் என்று  நினைப்பதில்லை. அவர்கள் என்ன கெட்டா போய்விட்டார்கள்?   சீன சமுதாயம் என்ன தான் பொருளாதாரத்தில் முன்னணியில் இருந்தாலும் நகரத்தாரும் தொழிலை விட்டு ஓடிவிடவில்லையே!

நமது தமிழ் முஸ்லிம் சகோதரர்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஆரம்ப காலத்தில் எப்படி தொழில்களைத் தங்கள் கைவசம் வைத்திருந்தார்களோ இப்போதும் அப்படித்தானே இருக்கிறார்கள்! எந்த மாற்றமும் இல்லையே! யார் அவர்களுக்குத் தொழில் செய்ய பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள்? ஒருவரும் இல்லையே!

எனக்குத் தெரிந்த முஸ்லிம்  நண்பர்கள் பலர் கையில் இருக்கும் பணத்தை வைத்துத் தான் தொழிலைத் தொடங்கினர்.  பெரிய முதலீடு இல்லை. துணிச்சல் மட்டுமே அவர்களின் முதலீடு. சறுக்கினால் அடி விழும் என்பது அவர்களுக்குத் தெரியும்.  ஆனாலும் ஒதுங்கி விடுவதில்லை! அடுத்த ஆட்டத்துக்குத் தயாராகி விடுவார்கள்! 

அதைத்தான் தன்னம்பிக்கை என்கிறோம். மீண்டும் மீண்டும் எழ வேண்டும். விழுந்து கிடப்பது வெட்கம் என்பதை நாம் உணரவேண்டும்.   மனிதர்கள் நாம்.  அடுத்தக் கட்டத்துக்கு நாம் தயராகி விட வேண்டும்.

இப்போது நமது இளைஞர்கள் பலர் பொருளாதாரப் போட்டிக்குத் தயராகி விட்டனர். பலர் தொழிலில் ஈடுபாடு காட்டுகின்றனர். கூட்டு முயற்சிகள் நம்மிடையே சரியாக வேருன்றவில்லை. அவநம்பிக்கைகள் அதிகம்.  யாரிடமும் போட்டி வேண்டாம். நமது தொழில், நமது பிழைப்பு. நமது முன்னேற்றம். நமது குடும்பம். நமது சமுதாயம்.

ஆனாலும் தனி முயற்சிகள் சிறப்பாகவே இயங்குகின்றன என்றே சொல்லலாம். நம்மால் காசுகளை அள்ளி வீச முடியாது என்பது உண்மை தான். ஆனால் கட்டுப்பாடுகளுடன் நாம் இயங்க வேண்டும். 

நண்பர்களே! தொழிலின் மீதான ஈடுபாட்டை அதிகரியுங்கள்.  பணம் அங்கு தான் கொட்டுகிறது!  இல்லாவிட்டால் சீனர்கள் ஏன் தொழிலிலிருந்து பின் வாங்குவதில்லை என்று யோசியுங்கள்.  நாம் அவர்களிடம் பேசும் போது "இலாபம் இல்லை! தொழிலை மூடப் போகிறேன்!"  என்று சொல்லுவார்களே தவிர அவர்கள் எந்தக் காலத்திலும் தொழிலை விட்டுவிட்டு ஓட மாட்டார்கள்!

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் படித்த போது: மூன்றே மூன்று விழுக்காடு இந்தோனேசிய சீனர்கள் இந்தோனேசியாவின் பொருளாதாரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போதும் கூட பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை!

பொருளாதார பலம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது.

எல்லா வாய்ப்புக்கள் இருந்தும் இந்தியர்களில் பஞ்சாபியர், குஜாராத்தியர், தெலுங்கர்கள், மலையாளிகள் - இவர்களே தொழிலில் முன்னணியில் இருக்கின்றனர். 

நாம் மட்டும் பின்னணியிலிருந்து கொண்டு அவர்களைப் பிழைக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்!

எல்லாருக்கும் வாய்ப்புக்கள் சமம். பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவது நமது கடமை! அவ்வளவு தான்!

குறைகள் சொல்லுவதை விட நிறைகளை மனதில் நிறைத்து பொருளாதார உயர்வில் கவனம் செலுத்துவோம்!

No comments:

Post a Comment