Thursday 2 July 2020

வழிபாட்டுத் தலங்களை உடைப்பதாவது?


 நமது நாட்டில் வழிபாட்டுத் தலங்களை உடைப்பதை ஏதோ ஒரு கடமையாக அல்லது தமாஷாக எடுத்துக் கொள்கிறார்கள் போலத்தான் நமக்குத் தோன்றுகிறது!

வழிபாட்டுத் தலங்கள் என்னும் போது அதனை வெறும் மதமாக மட்டும் நாம் பார்க்கக் கூடாது.  நாம் சாராத மதம் என்றால் அதனை வெறுப்போடு பார்க்கின்ற பார்வை மாற வேண்டும். 

நம் நாட்டில் பல்வேறு சமயங்களின் வழிபாட்டுத் தலங்களைப் பார்க்கிறோம்.  இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக! எந்த ஒரு ஆலயக் கட்டடங்களும் நமக்குப் புதிதல்ல.   இந்துக் கோயில்கள்,  தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், சீனக் கோயில்கள், புத்தக் கோயில்கள், சீக்கியக் கோயில்கள் = இப்படி நீள்கிறது நமது வழிபாட்டுத் தலங்களின் பட்டியல். எதுவும் நமக்குப் புதிதல்ல. 

நமது வாழ்க்கை முறை இப்படித்தான் இது வரை போய்க் கொண்டிருக்கிறது.  அதில் எந்த மாற்றமும் தேவை இல்லை என்பது தான் மக்களின் கருத்து என்று சொல்லத் தேவை இல்லை. 

இதனை ஏன் நாம் மாற்ற வேண்டும்? அதற்கென்ன அவசியம் வந்தது? இப்படி கோயில்களை உடைப்பதன் மூலம் அப்படி யார் உங்களைத் தூக்கி வைத்துக் கொண்டு ஆடப் போகிறார்கள்!

 நாம் இதைப் பற்றி நினைக்கும் போது நமக்கு வேதனையாகத் தான் இருக்கிறது. இந்துக் கோயில்கள் என்னும் போது அவைகள் இன்று நேற்று புதிதாக முளைத்தவை அல்ல. எத்தனையோ ஆண்டுகள். தோட்டப்புறங்கள் எப்போது தோன்றினவோ அப்போதே இந்துக் கோயில்களும் தோன்றிவிட்டன. 

காலங்காலமாக இருந்த கோயில்களை நேற்று முளைத்த அரசியல்வாதிகள் நல்ல பேர் வாங்க வேண்டும் என்பதற்காக அவைகளை உடைக்க வேண்டும் என்று கூறுவது எதனால்? வழிபாட்டுத் தலங்களை உடைப்பது  நல்லது என்று யார் இவர்களுக்குப் ப்-போதித்தார்கள்?

ஏதோ, எங்கோ தேவையற்ற முட்டாள்தனங்களை எல்லாம் படித்துவிட்டு, பார்த்துவிட்டு இப்போது இங்கு "அதை உடை, இதை உடை!" என்று பேசுவதை நிறுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

ஓரு நூற்றாண்டு காலம் மக்களால் வழிபடும், கெடாவில் உள்ள ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தை "இப்போது நாங்கள் உடைப்போம்!" என்று மாநில பாஸ் அரசாங்கம் கூறுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு அதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே நமது தாழ்மையான விண்ணப்பம். 

நல்லது பாஸ் அரசாங்கத்திலும் நடக்கும் என எதிர்ப்பார்ப்போம்!

No comments:

Post a Comment