Wednesday, 13 October 2021

மித்ராவால் நித்திரை இல்லை!

 

மித்ராவைப் பற்றியான செய்திகளை இப்போது நாம் அதிகமாகவே கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

மித்ரா இந்தியர்களுக்கு உதவுகிறதோ இல்லையோ அது பற்றியான செய்திகள் மட்டும் நமக்கு அதிகமாகவே கிடைக்கின்றன! வெறும் செய்திகளால் இந்தியர்களுக்கு எந்த பயனும் இல்லை!

மித்ரா என்று வந்ததும் அதோடு கூட சேர்ந்து வருவது ம.இ.கா. தான். மித்ராவால் பயன்பெறுபவர்கள் ஏதோ ஒரு சில ம.இ.கா.வினர் தான். செடிக் என்று சொன்னாலும்  சரி அல்லது மித்ரா என்று பெயரை மாற்றினாலும் சரி பயன் பெறுபவர்கள் ம.இ.கா. வினர் தான் என்கிற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு.

ஆனால் அந்த நிதி உதவி ம.இ.கா. வில் உள்ள அடித்தட்டு அங்கத்தினர்களுக்குப் போய் சேர்ந்தால் கூட  நாம் அதனை ஏற்றுக் கொள்ளலாம். அவர்களிலும் பலர் சிறு வியாபாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.   ஆனால் பயன் பெறுபவர்கள் என்னவோ ம.இ.கா. பெரும் புள்ளிகள்! ஒரு தடவை அள்ளினால் பரவாயில்லை! ஒவ்வொரு தடவையும் அள்ளினால் .? அதனால் தான் ம.இ.கா.வினர் அடிக்கடி இந்த செய்திகளில் அடிபடுகிறார்கள்!   

இப்போது தெருவில் அடித்துக் கொள்ளும் அளவுக்கு மித்ராவைப் பற்றியான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.   எங்கோ தவறுகள் நடந்திருக்கின்றன.

இந்த நேரத்தில் முன்னாள் துணையமைச்சர் பி.வேதமூர்த்தி சொல்லுவதை நாம் ஏற்றுக் கொள்ளுகிறோம். பிரச்சனையை  இலஞ்ச ஊழல் துறைக்குக் கொண்டு செல்வது தான் உண்மையைத் தெரிந்து கொள்ள ஒரே வழி. இதனை இன்றைய  ஒற்றுமைத்துறை அமைச்சர்  ஹலிமா சாடிக் ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது என்பதே நமது அறிவுரை.

நாம் ஏன் அமைச்சர் ஹலிமாவுக்கு இந்த அறிவுரையை வழங்குகிறோம் எனக் கேள்வி எழும். அவர் சமீபத்தில் மித்ரா நிதிக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கை கழுவிவிட்டார்! அதனைப் பயன்படுத்த எந்த அதிகாரமும் தனது அமைச்சுக்குக்  கொடுக்கப்படவில்லை என்பதாக அவர் கூறியிருந்தார். அப்புறம் என்ன? பிரச்சனை இல்லையே!

இந்தப் பிரச்சனையில் அமைச்சர் ஹலிமா நல்லதொரு முடிவு எடுப்பார் என நம்புகிறோம். அவர் மறுப்பு தெரிவித்தால் அவர் நேர்மையில் நாம் சந்தேகம் கொள்ள நேரிடும்! 

தாழ்ந்த நிலையில் இருக்கும் ஒரு சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் எல்லாரும் கை வைக்க முடியும் என்றால் "இது என்ன அரசாங்கமா அல்லது கொள்ளைக்கூட்டமா?" என்று தான் நாம் முடிவுக்கு வரமுடியும்!

மித்ரா ஒரு சிலரின் நித்திரையையாவது கெடுக்கும் என நம்பலாம்!

                                                                                                               

ஆபத்து இன்னும் அகலவில்லை!

 

                                                    வெளிநாட்டுத் தொழிலாளர்கள்

நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இங்கே இருக்கத்தான் போகிறார்கள்! இன்னும் வங்காளதேசிகளை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இப்போது அந்த பிரச்சனைப் பற்றி நாம் பேசப் போவதில்லை. நாட்டை அலைகழித்துக் கொண்டு இருக்கும் கோவிட்-19 தான் நமது இலக்கு.

நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 90 விழுக்காடு மக்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுவிட்டதாக அரசாங்கம் கூறுகிறது. அது நல்ல செய்தி தான். அதன்படி பார்த்தால் நாட்டில் ஓரளவு தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்  என்று அரசாங்கம் எப்படி நம்புகிறதோ நாமும் அப்படித்தான் நம்புகிறோம்.

ஒரு விஷயத்தை நம்மால் உறுதி செய்ய முடியவில்லை. நாட்டில் மலேசியர்களின் மக்கள் தொகையில் தான் 90 விழுக்காடு மக்கள் தடுப்பூசி போடப்பட்டிருக்கின்றனர். ஆனால் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்? இன்னும் எந்த ஆவணமுமின்றி இங்கு தங்கியிருக்கும் தொழிலாளர்கள்? இப்படி பல கேள்விகள் உண்டு.

எல்லா ஆவணங்களையும் வைத்துக் கொண்டு வேலை செய்பவர்கள் நிச்சயமாக தடுப்பூசியைப் போட்டிருப்பார்கள் என சொன்னால் நம்பலாம். ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கியிருப்பவர்கள் இலட்சக்கணக்கில் இருப்பதாகவும் கணக்கிடப்படுகிறது. அவர்கள் தாமாக முன்வந்து ஊசிப்போட்டுக் கொள்வார்கள் என்பதெல்லாம் கனவில் தான் நடக்க வேண்டும்!

ஆக, அப்படிப் பார்த்தால் நமது நாட்டில் தடுப்பூசி போடாதவர்கள் இன்னும் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பது புரியும்! இந்த நிலையில் கோவிட்-19 தொற்றை வெகுவாக குறைக்க முடியும் என்பதை எப்படி நம்புவது?

எப்படியோ அந்த கடவுள் தான் மலேசியர்களைக் காப்பாற்ற வேண்டும். காப்பாற்றுவார் என நம்புவோம்.

மழை விட்டாலும் தூவானம் இன்னும் விடவில்லை!

Tuesday, 12 October 2021

இது ஒரு மாறுபட்ட உலகம்!

                                                    நன்றி:  வணக்கம் மலேசியா
பொதுவாகவே நகைப் பைத்தியம் என்றால் அது இந்தியப் பெண்கள் தான் முன்னணியில் நிற்பார்கள்!  அது இந்தியாவாக இருக்கட்டும் அல்லது நமது மலேசியாவாகட்டும் தங்கம் என்றால் இந்தியர்கள் தான்.                    

இந்நாட்டில்  சீனர்கள் பணக்காரர்கள் என்கிற பெயர் உண்டு. மலாய்க்காரர்கள் நல்ல உத்தியோகங்களில் உள்ளவர்கள் என்கிற பெயர் உண்டு.  மலேசியாவில் மூன்றவது பெரிய இனம் இந்தியர்கள். அது மட்டும் அல்ல. மற்ற இனத்தவர்களைவிட குறைவான வருமானத்தைப் பெறுபவர்கள் என்கிற ஒரு பெயரும் நமக்கு உண்டு.

ஆனால் தங்கம் என்று வரும் போது இந்தியப் பெண்கள் தான் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்  என்கிற பெயர் நமக்கு உண்டு.  இப்போது உள்ள புதிய தலைமுறை கொஞ்சம் வித்தியாசமானவர்கள் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத் தான்  வேண்டும். 

ஆனால் எல்லாவற்றையும் தூக்கி விழுங்கக்கூடிய ஒரு செய்தி.  சீனாவில் நடந்த திருமணம் ஒன்றில் மணமகளுக்கு அறுபது கிலோ தங்கத்தைப் போட்டு அழகு பார்த்திருக்கிறார் மணமகன்! நமக்குத் தெரிந்தவரை சீனர்கள் தங்கத்திற்காக அலைவதில்லை. பணம் என்பதே தொழிலில் முதலீடு செய்யத்தான் என்று நினைப்பவர்கள்.

அந்த அறுபது கிலோ தங்கத்தை போட்டுக் கொண்டு நடக்கக்கூட முடியாத சூழலில் மிகவும் சிரமப்பட்டு மணமேடைக்கு வந்திருக்கிறார்! மணமகளுக்கு இந்த அளவு தங்கம் தேவை தானா என்று தெரியவில்லை! ஆனால் மணமகன் அது தேவை என்பதால் தான் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். மணமகன் பெரும் பணக்காரர் என்பது தெரிகிறது!

இந்தியாவில் குஜாராத் மார்வாடிகளுக்கு இது போன்ற திருமணங்களில் தான் தங்களது செல்வத்தைக் காண்பிப்பதற்கான இடங்களாக அமைகின்றன! ஆனால் அவர்களில் கூட இப்படி அறுபது கிலோ தங்கத்தை மணமகள் சுமந்ததாக செய்திகள் இல்லை!

பரவாயில்லை! முடிந்தவன்  பொன்முடி சூட நினைக்கிறான்! முடியாதவன் இருக்கும் தலைமுடியே போதும் என்கிறான்!