Wednesday 13 October 2021

ஆபத்து இன்னும் அகலவில்லை!

 

                                                    வெளிநாட்டுத் தொழிலாளர்கள்

நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இங்கே இருக்கத்தான் போகிறார்கள்! இன்னும் வங்காளதேசிகளை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இப்போது அந்த பிரச்சனைப் பற்றி நாம் பேசப் போவதில்லை. நாட்டை அலைகழித்துக் கொண்டு இருக்கும் கோவிட்-19 தான் நமது இலக்கு.

நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 90 விழுக்காடு மக்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுவிட்டதாக அரசாங்கம் கூறுகிறது. அது நல்ல செய்தி தான். அதன்படி பார்த்தால் நாட்டில் ஓரளவு தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்  என்று அரசாங்கம் எப்படி நம்புகிறதோ நாமும் அப்படித்தான் நம்புகிறோம்.

ஒரு விஷயத்தை நம்மால் உறுதி செய்ய முடியவில்லை. நாட்டில் மலேசியர்களின் மக்கள் தொகையில் தான் 90 விழுக்காடு மக்கள் தடுப்பூசி போடப்பட்டிருக்கின்றனர். ஆனால் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்? இன்னும் எந்த ஆவணமுமின்றி இங்கு தங்கியிருக்கும் தொழிலாளர்கள்? இப்படி பல கேள்விகள் உண்டு.

எல்லா ஆவணங்களையும் வைத்துக் கொண்டு வேலை செய்பவர்கள் நிச்சயமாக தடுப்பூசியைப் போட்டிருப்பார்கள் என சொன்னால் நம்பலாம். ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கியிருப்பவர்கள் இலட்சக்கணக்கில் இருப்பதாகவும் கணக்கிடப்படுகிறது. அவர்கள் தாமாக முன்வந்து ஊசிப்போட்டுக் கொள்வார்கள் என்பதெல்லாம் கனவில் தான் நடக்க வேண்டும்!

ஆக, அப்படிப் பார்த்தால் நமது நாட்டில் தடுப்பூசி போடாதவர்கள் இன்னும் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பது புரியும்! இந்த நிலையில் கோவிட்-19 தொற்றை வெகுவாக குறைக்க முடியும் என்பதை எப்படி நம்புவது?

எப்படியோ அந்த கடவுள் தான் மலேசியர்களைக் காப்பாற்ற வேண்டும். காப்பாற்றுவார் என நம்புவோம்.

மழை விட்டாலும் தூவானம் இன்னும் விடவில்லை!

No comments:

Post a Comment