Wednesday, 31 January 2024

வியாபாரம் யார் கையில்?

 

நம் மலேசிய நாட்டின் சிறு தொழில்கள் யார் கையில்?  மார்க்கெட்டுகளுக்குப் போனால்  யாரிடம் பொருட்களை வாங்குகிறோம்?

முன்பெல்லாம் சீனர்கள் வியாபாரங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்கள்.  ஓரளவு மலாய்க்காரர்களும் இந்தியர்களும்  ஏதோ ஒன்றிரண்டு என்கிற வகையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

இன்றைய நிலைமை என்ன?  மலேசியர்கள் ஓரங்கட்டப்பட்டு  அதனை வங்காளதேசிகள் தங்களது கையில் எடுத்திருக்கிறார்கள்! இதெல்லாம் அரசாங்கத்திற்குத் தெரியாமலா நடக்கிறது? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாருக்கும் தெரிந்து தான் நடக்கிறது!

அரசாங்கம் என்ன சொல்லுகிறதோ தெரியாது. நாம் சொல்லுவதெல்லாம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு பெருந்தன்மையோடு நடந்து கொள்கிறார்கள் என்பது தான்! அப்படி இல்லையென்று சொன்னால்  இது எப்படி நடக்கும்?   

ஆனால் ஒன்று. இப்படியெல்லாம் மற்ற நாடுகளில் நடக்குமா?  நடக்க வாய்ப்பில்லை.   வெளிநாட்டவர்களுக்குத் தொழில் செய்ய வாய்ப்பில்லை. உள்நாட்டவர்களுக்கே முதல் சலுகை. நம் நாட்டில் மட்டும் இப்படி ஏன் நடக்கிறது என்பது நமக்குப் புரியவில்லை! எங்கே கோளாறு?  என்ன கோளாறு?  இதற்குக் காரணமானவர்கள் யார்.

டாக்டர் மகாதிர் காலத்தில் தான் இந்தப் பிரச்சனைகள் எல்லாம் உருவாக  ஆரம்பித்தன.  நாட்டின் மீது அவருக்கு இருந்த விசுவாசம் இப்படியெல்லாம் அவரைச் செய்ய வைத்தது!   உள்நாட்டவரை அவர் நம்பவில்லை. வெளிநாட்டவரை அவர் நம்பினார்.  அதன் விளைவு தான் இப்போது நடக்கும் இந்த அராஜகங்கள்.  வேலைக்காக அவர்களை நாட்டுக்குள் விட்டாலும் இந்த நாட்டில் வியாபாரம் செய்கின்ற அளவுக்கு அவர்களின் கை ஓங்கவைத்ததற்கு டாக்டர் மகாதிர் தான் காரணம். அன்று அவர் கண்டிப்பு காட்டியிருந்தால்  இன்று இது போன்ற செயல்கள் எல்லாம் நடைபெற வாய்ப்பில்லை. இலஞ்சம்  ஊழல் என்று வந்த பிறகு  வெளிநாட்டவர் அதனைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்! எல்லாம் டாக்டர் மகாதிர் செயல் என்பதைத் தவிர  வேறு யாரையும் குற்றம் சொல்ல இயலவில்லை!

இப்போது சிறு சிறு வியாபாரங்கள் அனைத்தும்  வெளிநாட்டவர் கையில்! அதனால் விலையேற்றத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை. மலேசிய மக்கள் இப்போது  வெளிநாட்டவர் கட்டுப்பாட்டில்!

அன்று வெள்ளையனுக்கு இடம் கொடுத்தது போல இன்று வங்காளனுக்கு  இடம் கொடுத்துவிட்டோம்!  மாட்டிக் கொண்டோம்!

Tuesday, 30 January 2024

என்னதான் குறைபாடு?

மெட் ரிகுலேஷன் கல்வியைப் பற்றி பேசும்போது ஒன்று மட்டும் தெரிகிறது.

கல்வி அமைச்சு வெளிப்படையாக செயல்படுவதில்லை. ஏதோ ஒன்று அவர்களின் கண்களை மறைக்கின்றது.  பல்கலைக்கழகங்களில்  எத்தனை இந்திய மாணவர்கள்  பயில்கின்றனர் என்கிற விபரம் கூட தெரியவில்லை என்கிறார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். 

இந்த நிலையில் மெட் ரிகுலேஷன் பயிலும் இந்திய மாணவர்களைப் பற்றி கேள்வி எழுப்பினால்  யாரிடமிருந்து பதில் வரும்?  சும்மா ஏனோ தானோ பதில்  தான் வருமே தவிர உண்மையான விபரம் வரப்போவதில்லை.

இதிலிருந்து என்ன தெரிகிறது?  பயம் தெரிகிறது!   ஒரு தலைபட்சமாக நடப்பது தெரிகிறது! கல்வி அமைச்சின் திருட்டுத்தனம் தெரிகிறது!  கல்வி அமைச்சு நேர்மையற்ற முறையில் நடப்பது தெரிகிறது!

இதற்கெல்லாம் ஒரே தீர்வு தான் உண்டு.  மலாய் மாணவரின் எண்ணிக்கை அதிகம் என்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்கள் தகுதியானவர்களா என்பதில் தான் பிரச்சனை.  தகுதியை வளர்த்துக்கொள்ள என்ன தான் பிரச்சனை? அவர்கள் எந்த வகையில் தகுதியற்றவர்கள் என்று கல்வி அமைச்சு முடிவுக்கு வருகிறது?

மலேசிய மாணவர்கள் அனைவருக்கும் ஒரேவித கல்வி முறை தான். எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை.  முன்பு சொல்லப்பட்ட  காரணங்கள்  இப்போதும் சொல்லப்பட்டால்  கல்வி அமைச்சு தான் அதற்குக் காரணம்.  இத்தனை ஆண்டுகள் கல்வித் துறையில் எந்த முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை!  தரமற்ற கல்வியைத் தவிர மலேசிய மாணவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை!

மெட் ரிகுலேஷன் கல்விக்காக போராட்டம் நடத்துகிறோம்.  என்ன தான் நடத்தினாலும் நமது மாணவர்களின் எண்ணிக்கை நமக்குத் தெரிவதில்லை.  அது ஒரு பக்கம் இருக்கட்டும்.  அப்படியே இடம் கிடைத்தாலும்  மாணவர்கள் எதிர்பார்க்கின்ற கல்வி அவர்களுக்குக் கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்லப்படுகிறது.  மருத்துவம்,  எஞ்சினியரிங்  போன்ற துறைகளில், தகுதி இருந்தும்,  அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்  என்கின்றனர்.

இப்படி எல்லாவற்றிலும் புறக்கணிக்கப்பட்டால் மெட் ரிகுலேஷன் கல்வி தேவை தானா என்கிற கேள்வி எழுகிறது.  கல்வி அமைச்சு நம்மைத் தரமற்ற நிலைக்குத் தள்ளுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

நாம் அறிவற்ற சமூகம் இல்லையே!  கல்வியில் நம்மை வீழ்த்துவது என்பது அவ்வளவு சுலபமா என்ன?

Monday, 29 January 2024

முதியோர் இல்லங்கள் அதிகரிக்கலாம்!

 

வருங்காலங்களில் முதியோர் இல்லங்களுக்கு மவுசு அதிகம் இருக்குமோ என்று யோசிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது!

காரணம் அரசாங்கத்தில் பணிபுரிபவர்களுக்கு இனி மாத ஓய்வூதியம் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்குப் பதிலாக தனியார் துறை போல ஊழியர் சேமநிதியில் பணம் பிடித்தம் செய்யப்படும்.

அரசாங்கத்தில் வேலை என்பதே பலருடைய கனவு காரணம் இந்த மாத ஓய்வூதியம் தான்.  அது இல்லையென்றால்  அரசாங்க வேலையின் மீதான கவர்ச்சி போய்விடும்.

இன்று சில வீடுகளில்  அப்பனின்  ஓய்வூதியத்தை நம்பியே பல பிள்ளைகள் இருக்கின்றனர்.  குடும்பம் நடத்த அதுவே போதும் என்கிற நிலைமையில் அவர்கள் வேலை செய்வதற்கான எந்த கட்டாயமும் இல்லை.

இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால்  இந்த ஓய்வூதியதற்காகவே  பெற்றோர்களை வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர் மருமகள்கள்!   பணம் எங்கேயும் வெளியே போய்விடக் கூடாதே  என்கிற பாதுகாப்பு உணர்வு அதிகம்!

இந்த நிலையில் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் அப்பா-அம்மாக்கள் நிலைமை என்னவாகும்?  வருமானம் இல்லாத பெற்றோர்களை  வைத்துக் கொள்ள மருமகள்களால்  முடியுமா?  யோசிக்க வேண்டிய விஷயம். இத்தனை ஆண்டுகள் அந்தப் பின்விளைவுகளைப் பற்றி நாம் கவலைப்படவில்லை.  இனி நமக்கு அந்தக் கவலையையும் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

வருங்காலங்களில் சுமார் இருபது வருடங்களுக்குப் பின்னர்  வயதான பெற்றோர்களின் நிலைமை என்னவாகும் என்பது தெரியவில்லை.  எப்படியும் முதியோர் இல்லங்களின்   எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.  அரசாங்கமும் முதியோர் இல்லங்களைக் கட்ட வேண்டிய  சூழல் அதிகமாகும்.  பெரியவர்களை அப்படியே விட்டுவிட முடியாது.

பெரியவர்கள் செய்த ஒரே தவறு  தங்களுக்கென்று எதனையும் சேர்த்து வைத்துக்  கொள்ளாமல்  பிள்ளைகளுக்கே   அத்தனையையும்  தானம் செய்து விடுகின்றனர். கடைசி காலத்தில் அன்னதானத்திற்காக அலைகின்றனர்.

எப்படியோ வருங்காலங்களில் பெற்றோர்கள் - தனியாரோ அரசாங்கமோ -  எச்சரிக்கையாகவே இருப்பார்கள் என நம்பலாம்! -