வருங்காலங்களில் முதியோர் இல்லங்களுக்கு மவுசு அதிகம் இருக்குமோ என்று யோசிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது!
காரணம் அரசாங்கத்தில் பணிபுரிபவர்களுக்கு இனி மாத ஓய்வூதியம் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்குப் பதிலாக தனியார் துறை போல ஊழியர் சேமநிதியில் பணம் பிடித்தம் செய்யப்படும்.
அரசாங்கத்தில் வேலை என்பதே பலருடைய கனவு காரணம் இந்த மாத ஓய்வூதியம் தான். அது இல்லையென்றால் அரசாங்க வேலையின் மீதான கவர்ச்சி போய்விடும்.
இன்று சில வீடுகளில் அப்பனின் ஓய்வூதியத்தை நம்பியே பல பிள்ளைகள் இருக்கின்றனர். குடும்பம் நடத்த அதுவே போதும் என்கிற நிலைமையில் அவர்கள் வேலை செய்வதற்கான எந்த கட்டாயமும் இல்லை.
இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த ஓய்வூதியதற்காகவே பெற்றோர்களை வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர் மருமகள்கள்! பணம் எங்கேயும் வெளியே போய்விடக் கூடாதே என்கிற பாதுகாப்பு உணர்வு அதிகம்!
இந்த நிலையில் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் அப்பா-அம்மாக்கள் நிலைமை என்னவாகும்? வருமானம் இல்லாத பெற்றோர்களை வைத்துக் கொள்ள மருமகள்களால் முடியுமா? யோசிக்க வேண்டிய விஷயம். இத்தனை ஆண்டுகள் அந்தப் பின்விளைவுகளைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. இனி நமக்கு அந்தக் கவலையையும் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
வருங்காலங்களில் சுமார் இருபது வருடங்களுக்குப் பின்னர் வயதான பெற்றோர்களின் நிலைமை என்னவாகும் என்பது தெரியவில்லை. எப்படியும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். அரசாங்கமும் முதியோர் இல்லங்களைக் கட்ட வேண்டிய சூழல் அதிகமாகும். பெரியவர்களை அப்படியே விட்டுவிட முடியாது.
பெரியவர்கள் செய்த ஒரே தவறு தங்களுக்கென்று எதனையும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் பிள்ளைகளுக்கே அத்தனையையும் தானம் செய்து விடுகின்றனர். கடைசி காலத்தில் அன்னதானத்திற்காக அலைகின்றனர்.
எப்படியோ வருங்காலங்களில் பெற்றோர்கள் - தனியாரோ அரசாங்கமோ - எச்சரிக்கையாகவே இருப்பார்கள் என நம்பலாம்! -
No comments:
Post a Comment