Wednesday, 11 September 2024

ஹலால் தேவைதானா?

உணவகங்களுக்கு ஹலால் சான்றிதழ் தேவையா  என்கிற சர்ச்சை இப்போது கடுமையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஹலால் சான்றிதழுக்கான, நம்மைப் பொறுத்தவரை, தேவை என்று நாம் நினைப்பதை மிக எளிதாகவே சொல்லிவிடலாம்.  அந்த உணவகங்களில்  பன்றி, மதுபானங்கள் பயன்படுத்தப்படாது  என்பது தான்.  நமது புரிதலும்  அவ்வளவுதான்.

அப்படியே அந்த சான்றிதழ்கள் இல்லையென்றாலும்  நமக்குத் தெரிந்தவரை மலாய் உணவகங்கள் மதுபானங்கள், பன்றி இறைச்சியைப் பயனபடுத்துவதில்லை என்பதை யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.  அதேபோல அவர்கள் மாட்டிறச்சியைப் பயன்படுத்துவதால் இந்துக்கள் அங்குப் போவதில்லை.   இப்படித்தான் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் உண்டு.  சீன உணவகங்கள் பன்றி இறைச்சியைப் பயன்படுத்துகின்றன. இந்திய உணவகங்கள் அனைவருக்கும் பொதுவானது என்று சொல்லலாம். அவர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிகளைப் பயன்படுத்துவதில்லை.  இந்த நடைமுறை என்பது ஹலால் சான்றிதழ்  வருவதற்கு முன்னரே உண்டு.  ஹலால் சான்றிதழ் இல்லையென்றாலும்  இப்படித்தான் நடக்கும்.

இப்போது ஹலால் சான்றிதழ் அனைத்து உணவகங்களுக்கும் கட்டாயம் என்கிற நிலை வரும் போது  அது பலவகைகளில்  தொழிலைப் பாதிக்கும் என்கின்றனர் உணவுத் தொழிலில் உள்ளவர்கள்.  

இன்றைய நிலையில் பல்வேறுவகைகளில் தொழில்கள் பாதிப்படைந்திருக்கின்றன. தொழில் செய்வோர் பலர் பிரச்சனைகளில்  மாட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் இது போன்று சிக்கல்களை மேலும் உண்டாக்குவது தேவையா என்பதை அரசாங்கம் உணர வேண்டும்.

அப்படியே ஹலால் சான்றிதழ் தேவை என்றால் அதனை எளிமைப்படுத்த வேண்டும்.  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும்  உணவுகளுக்குக் கடுமையான சட்டதிட்டங்கள் வைப்பதற்கு  நியாயம் உண்டு.  உள்நாட்டு உணவகங்களுக்குத் தேவை இல்லை.  எளிமையாக்கலாம்.   

நமது தேவை எல்லாம் உணவகங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். உணவுகள் சுத்தமாக இருக்க வேண்டும். இப்போது எத்தனை ஹலால் சான்றிதழ்  பெற்ற  உணவகங்கள் சுத்தத்தைக் கடைப்பிடிக்கின்றன என்று சொல்ல முடியுமா?   சுத்தமற்ற உணவகங்கள் என்றால்  அவை பெரும்பாலும் ஹலால் சான்றிதழ்கள் பெற்றவைகள் தாம்!  மக்களுக்குக் கெடுதலைக் கொடுக்கும் இது போன்ற உணவகங்களுக்குச் சான்றிதழ் தேவையா? என்பதை யோசிக்க வேண்டும்.

வெளிநாட்டுக்கு ஹலால் சான்றிதழ் தேவை தான். உள்நாட்டுக்கு...........?

No comments:

Post a Comment