மலேசிய விமான நிறுவனமான "மாஸ்" தொடர்ந்து பறக்குமா என்கிற சந்தேகம் அவ்வப்போது எழுந்து கொண்டிருந்தாலும், என்னவோ பறக்கிறது!, என்று மெல்லிய குரலில் ஒலித்துக் கொண்டிருந்தாலும் பறந்து கொண்டு தான் இருக்கிறது. அதுவரை நமக்கும் மகிழ்ச்சியே. அத்தோடு எத்தனை நாளைக்கு? என்றும் கேட்கத் தோன்றுகிறது!
வழக்கம் போல இந்த விமான நிறுவனம் குட்டிச்சுவராகி போனதற்கு டாக்டர் மகாதிர் தான் அதற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்னும் போக்கு உடையவர் அவர்! இன்றுவரை கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டினாலும் அதனால் தலைநிமிர முடியவில்லை! வயிற்றெரிச்சல் என்னவென்றால் மக்களின் பணத்தை வாரி வாரி கொட்டியிருக்கிறார்கள்! அதில் பல பேர், அரசியல்வாதிகள் உள்பட, பெரும் பணக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். விமான நிறுவனத்திற்கு மட்டும் எந்த விடிவும் பிறக்கவில்லை!
அரசியல்வாதிகள் வர்த்தகத்தில் ஈடுபட்டால் இப்படித்தான் ஆகும் என்பதற்குச் சரியான எடுத்துக்காட்டு மாஸ் விமான நிறுவனம், மைக்கா ஹோல்டிங்ஸ் போன்றவை. எல்லாம் பண முதலைகள்! கொள்ளையடிப்பதையே நோக்கமாகக் கொண்டவர்கள்! அனைத்தும் பறிபோய்விட்டன!
ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த நிறுவனம். எல்லா வசதிகளும் கொண்ட ஒரு நிறுவனம். நல்லதொரு பெயருடன் விளங்கிய நிறுவனம். ஆனால் இன்று மலிவு கட்டண விமானத்தில் நாம் எப்படிப்பட்ட நிலையில் பயணம் செய்கிறோம்? உட்கார்ந்து காலை நீட்டக்கூட முடியாது ஒரு விமானத்தில் பயணம் செய்கிறோம். ஆனாலும் அதனை நாம் குறை சொல்லுவதில்லை. காரணம் குறைந்த கட்டணம். வழக்கமான உபசரிப்புகள். அனைத்தும் உண்டு. குறைவான கட்டணம் என்னும் போதே எந்த நெருக்கடிகளையும் நாம் பொருட்படுத்துவதில்லை. சில அசௌகரியங்களை நாம் பொறுத்துக் கொள்கிறோம்.
ஆனால் இதைவிட இன்னொரு விசேஷம் உண்டு. ஏர் ஏசியா தனியார் நிறுவனம்.. ஏதும் கடன் சுமைகள் இருந்தால் அவர்கள் தான் அதனைச் சுமக்க வேண்டும். ஓடிவந்து காப்பாற்ற ஆளில்லை. அதனால் அவர்கள் தான் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு இலாபத்தைக் கொண்டு வரவேண்டும். மாஸ் அந்த வகையில் ராசி உள்ள நிறுவனம். எவ்வளவு நட்டம் ஆனாலும் அந்த நட்டத்தை ஈடுகட்ட அரசாங்கம் தயாராக இருக்கிறது! அதனால் கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தைப் போட்டும் நிறுவனத்தை மீட்க முடியவில்லை! நட்டத்தைக் கடவுள் செயல் என்று கணக்கில் எழுதிவிட்டால் அனைத்தும் முடிந்து விடும்!
இந்தியாவில் நன்றாக ஓடிய ஏர் இந்தியா விமானத்தை அரசாங்கம் வாங்கி சில ஆண்டுகளுக்கு முன்னர் மீண்டும் தனியாரிடமே ஒப்படைத்துவிட்டது. நமது மாஸ் நிறுவனத்துக்கும் அந்த நிலை வரும். தனியாரிடம் தான் போய்ச் சேர வேண்டும். வேறு வழியில்லை!
No comments:
Post a Comment