Tuesday, 27 May 2025

பேனா நண்பர்கள் (40)

பள்ளி காலத்தில் எனக்கு ஏகப்பட்ட பேனா நண்பர்கள்.   எனது ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர  சொல்லும்படியாக வேறொன்றுமில்லை!

பெரும்பாலும் வெளிநாட்டுக்காரர்கள் தான். உள்ளூர் நண்பர் ஒருவரைப்பற்றி சொல்லுகிறேன். ஒரு முஸ்லிம் இளைஞர். தமிழர். நன்றாகத்தான் எழுதி வந்தார். தனது போட்டோவை அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லி இந்து சமய மாரியம்மன் படத்தை அனுப்பிவைத்தார்! அத்தோடு உறவை முறித்துக் கொண்டார். பின்நாள்களில் இவர் கோலாலம்பூர் தமிழ் வானொலியில் பணி புரிந்திருக்கிறார், அவர் பெயர், வாழந்த தோட்டம் அனைத்தும் இப்போதும் அத்துப்படி!

ஜெர்மனியில் இருந்து ஓர் இளைஞர்.  நீண்ட நாள் எழுதிவந்தோம்.  அவர் இராணுவப் பயிற்சிக்குப் போய்விட்டார்.. சுவீடன் நாட்டிலிருந்து ஒரு பெண். நீண்ட நாள் ஏழுதிவந்தார்.  ஒரு நாள் விபத்தில் அவர் இறந்து போனதாக  செய்தி வந்தது.  எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நன்றாகவே எழுதிவந்தார். ஒரு முறை நான் அவரிடம் நீங்கள் யூதப் பெண்ணா அல்லது அரபுப் பெண்ணா என்று கேட்டிருந்தேன்.கொதித்துப் போனாள் அவள்! நீ எப்படி என்னை யூதப்பெண்ணா என்று கேட்கலாம் என்று வெடித்துச்  சிதறடித்தாள் என்னை!  எனக்கு அந்த ஊர் அரசியல் எல்லாம் தெரியாது! அத்தோடு முறிந்தது.

எது எப்படியிருந்தாலும் அந்த நண்பர்கள் எல்லாம் எனக்குப் பிடித்தவர்களாகவே இருந்தனர்.



அறிவோம்:  மனிதன் ஏழையாக இருக்கலாம் கோழையாக இருக்கக் கூடாது என்று சொன்னவர் துன் வீ.தி. சம்பந்தன். ஆனால் இன்றைய நிலையில்  ஏழையும் வேண்டாம், கோழையும் வேண்டாம்  கல்வியை மட்டும் விடவேண்டாம். கல்வி தான் ஒருவனை வீரனாக்கும்

Monday, 26 May 2025

பூ போட்ட சட்டைகள்! (39)

பு
பூ போட்ட சட்டைகளை அணிவது என்பது எந்தக் காலத்தில் ஆரம்பானது?  அப்போது எல்லாம்  'பாத்தேக்'  என்கிற வார்த்தையே நடப்பில் இல்லை என்பது தான் உண்மை. ஏறக்குறைய 1959/1960 - ம் ஆண்டுகளில் தான் இந்த ஆடைகள் பொது மக்களின் பார்வைக்கு வந்தன  என்பது எனது கணிப்பு.

பூ போட்ட  சட்டகளை அணிவது எங்கிருந்து வந்த கலாச்சாரம் என்பது தெரியவில்லை. நான் நினைப்பது 'ஹாவாய்" தீவின் கலாச்சாரமாக இருக்கலாம். ஆனால் அது அன்றைய ஹிப்பிகளால் பிரபலப்படுத்தப்பட்ட  ஒரு கலாச்சாரம் என்பதாக சில குறிப்புகள் கூறுகின்றன.

பூ போட்ட சட்டைகளை அணிந்த அந்த ஆரம்பகாலத்தில்  -  அணிபவர்களை நோக்கி வெவ்வேறு வகையில் வசைகள் பாடப்பட்டன. அகராதி, அடியாள்,  கேங்ஸ்டர்..... .இப்படியாக  பலப்பல ஏச்சும் பேச்சும்!  என்னைப் பொறுத்தவரை அது பெண்கள் அணியும் சட்டை என்பதாகவே மனதில் பட்டது. நான் அணிவதில்லை.

எனது நண்பர் இராமன் என்பவர் எதுபற்றியும் கவலைபடாத மனிதர். எனக்குத் தெரிந்து  அவர் தான் முதன் முதலாக இது போன்ற சட்டைகளை, செனவாங் தோட்டத்தில்,  அணிய ஆரம்பித்தவர்.  ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னர்  இந்த சட்டைகள் சூடு பிடிக்க  ஆரம்பித்தன. 

அதன் பின்னர் தான் பாத்தேக் பிரபலப்படுத்தப்பட்டது.  அதன் விற்பனையை அதிகரிக்க வாரம் ஒரு முறை  பாத்தேக் அணியுங்கள் என்று பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டன.

ஒன்றை நினவுபடுத்துகிறேன். ஆரம்பகாலத்தில்  இதன் விற்பனையில்  நமது இளைஞர்களின் பங்கு அதிகம் என்பதில்   சந்தேகம் வேண்டாம். நாம்  தான் வழக்கம் போல இதன் முன்னோடி!


அறிவோம்:   தமிழர்கள் எப்போது  மேற்சட்டைகள் போட ஆரம்பித்தார்கள்? இன்றைய சட்டைகள் போன்று இல்லாது  அவ்வப்போதைய  நாகரிகத்திற்கு ஏற்றவாறு அவர்களும் அணிந்திருக்கிறார்கள்.  எழுத்தாளர் கல்கியின் 'பொன்னியின் செல்வனில்'  இதனைப் பார்க்கலாம். அப்படிப் பார்த்தால் நீண்டகாலம்  என்று சொல்லுவதைத் தவிர வேறு வார்த்தை இல்லை!

Sunday, 25 May 2025

கட்டம் போட்ட சட்டை! (38)

கட்டம்  போட்ட சட்டை  கதாநாயகர்கள்  என்று தாராளமாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த கட்டம் போட்ட சட்டைகள் இந்திய இளைஞர்களிடையே  ஆக்கிரமித்துக்  கொண்டிருந்தன.

அது ஏதோ ஒரு காலகட்டம். ஆண்டு  ஞாபகத்திற்கு வரவில்லை. தமிழ் திரைப்படம் ஒன்றில் கதாநாயகனா அல்லது வில்லனா  அதுவும் ஞாபக்த்தில் இல்லை. ஏதோ ஒரு படத்தில் கட்டம் போட்ட சட்டையைப் போட்டுக் கொண்டு அமர்க்களமாக வருவார்  ஒரு நடிகர்.     அந்த நடிகர் யார் என்று என்னால் சொல்ல முடியவில்லை.  அந்த அளவுக்கு அந்த ஸ்டைல்  இளைஞரிடைய  தீவிரமாக பற்றிக்கொண்டது!  நான் கூட சிகப்பு நிற  கட்டம் போட்ட சட்டை வைத்திருந்தாக ஞாபகம்.   

வீட்டில் நிலைமை எப்படியிருந்தாலும்  நாட்டில் ஏற்படும் மாற்றங்கள்   எல்லாத் தரப்பினரையும்  பாதிக்கத்தான் செய்யும்.  யாரும் விதிவிலக்கல்ல. அது தோட்டம் பட்டணம் என்று பார்ப்பதில்லை.                                                                                                                     



அறிவோம்: பி.கே.ஆர். கட்சியின் உதவித் தலைவராக  தேர்ந்தெடுக்க்ப்பட்ட  டத்தோஸ்ரீ ரமணன்  வாழ்த்த நினைத்தாலும்  இவரும் மற்றவர்களைப் போல "பேசாமடந்தை"  தானே? வாய் திறக்க முடியாதவர் போற்றி! போற்றி!

Saturday, 24 May 2025

சங்கிலியோடு பணப்பையை ......! (37)

அது ஒரு காலம் என்பார்கள்.  எது, எதற்கு, என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்று  புரியாத புதிர்.  என்னவோ எல்லாரும் செய்கிறார்கள்  நாமும் செய்கிறோம்! அதைத் தவிர சொல்ல வேறொன்றுமில்லை!

எங்கள் பள்ளி காலத்தில் இதுவும் நடந்திருக்கிறது. பணம் வைத்திருக்கும் பர்சில் (Purse)  பெரிதாக ஒன்றும் இருக்காது. ஆனால் என்னவோ ஆயிரக்கணக்கில் பணம் இருப்பது போல  பணப்பையை ஒரு சங்கலியோடு இணைத்து  பத்திரமாக, டிகபாதுகாப்பாக  பிண்ணி வைத்திருப்போம்!  அப்படிக் கொஞ்சம் நாள், உண்மையைச் சொன்னால், ஸ்டைல் காட்டினோம்!  அப்புறம் ஒரிரு ஆண்டுகளில்  அந்தப் பழக்கம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது!

இப்போதும் ஒரு சிலர் அதனைப் பயன்படுத்தித்தான்  வருகின்றனர். பெரும்பாலும் அது வெளிநாட்டவர் என நினைக்கிறேன்.

எல்லா புதுமைகளையும் விரும்புபவர்கள் இளைஞர்கள். எல்லாம் மாணவ பருவத்திலிருந்தே ஆரம்பித்துவிடுகின்றன. இன்னொரு புதுமையும் உண்டு. பார்ப்போம்.



அறிவோம்: பி.கே.ஆர். தேர்தலில் பிரதமரின் மகள்  நூருல் இஸா கட்சியின் தேர்தலில்  துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். அவருக்கு வாழ்த்துச் சொல்வதில் நம் சமுதாயத்திற்கு என்ன ஆகப் போகிறது?

Friday, 23 May 2025

ஐம்பது காசுக்கு முடிவெட்டினோம்! (36)


முன்பு காலத்தில்  முடிவெட்ட ஐம்பது காசு என்பது  என்ன அதிசயமா என்று கேள்வி எழலாம். 

அப்படி எல்லாம் சொல்ல இயலாது.  நான் முடி வெட்டிக்கொள்ள  ஆரம்பித்த காலத்தில்  ஐம்பது காசுக்கு  வெட்டியதாக ஞாபகமில்லை. நான் வெட்டுவது பெரும்பாலும்  முடிவெட்டும் நிலையங்களாக இருந்ததினால்  அங்கே ஐம்பது காசுக்கு வேலையில்லை. ஒரு வேளை குழந்தைகளுக்கு  இருந்திருக்கலாம்.

ஆனால் எங்கள் பள்ளியில் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். பள்ளியிலேயே  ஒருவர் கடை திறந்தார்.  அங்கே முடி வெட்டினால் ஐம்பது காசு திட்டத்தைக் கொண்டு வந்தார்.  அது  மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகவே அமைந்தது.  அவரது கடையில் எப்போதும் கூட்டமாகவே  இருக்கும். பள்ளி மாணவர்களுக்கு முடி வெட்டுவது ஒரே மாதிரி தான்.  வித விதமாக இருக்க வாய்ப்பில்லை.

ஒருவர் தான் முடி வெட்டுவார். இப்போது நினைத்துப் பார்க்கும் போது வியப்பைத் தருகிறது. அந்தப் பெரியவர் முயற்சி எடுத்து பள்ளியோடு பேச்சுவார்த்தை நடத்தி  கடை போட்டாரே அதனைப் பாராட்டத்தான் வேண்டும். இப்போது  அது போன்ற முயற்சிகள் வங்காள தேசிகளிடம் கைமாறி விட்டதோ என்று தோன்றுகிறது. வேலையே தெரியாமல் தொழில் செய்கிறார்கள்!  கேட்டால் அது "அவர்கள் சாமர்த்தியம்"  என்கிறார்கள்!



அறிவோம்:  பொதுவாக எண்களை, அதாவது 0 1 2 3 4 5 6 7 8 9  என்னும்   எண்களை அரபு எண்கள் என்கிறோம்.   அது எங்கள் நாட்டு எண்கள்  இல்லை  என்று  அரபு நாடுகள் சொல்லிவிட்டன. அது இந்து நாட்டிலிருந்து  வந்த எண்கள் என்று சொல்கின்றன. இந்து நாடு என்றால் இந்தியா.  அது தமிழர்கள்   பயன்படுத்திய எண்கள்  என்று  இன்றுவரை தமிழ் நாடு அரசு வெளிப்படையாகச் சொல்லவில்லை.  திராவிடர்கள்  தமிழ் நாட்டை ஆண்டால் இது தான்  நடக்கும்!

Thursday, 22 May 2025

காலணிகளுக்கு இ;லாடம் (35)

 

இலாடங்கள் என்னும் போது நமக்குத் தெரிந்தது எல்லாம் குதிரைக்கு இலாடம் அடிப்பது தான்.  இப்போது மாடுகளுக்கும்  அடிக்கப்படுகிறது  என்பதும் தெரிய வருகிறது.

சரி  பள்ளி மாணவர்களுக்கும்  இந்த இலாடத்துக்கும் என்ன சம்பந்தம்?  நாங்கள் இடைநிலைப் பள்ளியில் படிக்கும் போது  காலில்  தோல் சப்பாத்துகள் அணிவது  வழக்கம்.  இன்றைய நிலை எனக்குத் தெரியவில்லை.

தோல் சப்பாத்துகள் அணியும் போது  எங்கள் பள்ளி அருகிலேயே   ஒரு சீனர்  சப்பாத்துகளுக்கு இலாபம் அடித்துக் கொடுப்பார், இலாடம் என்றால்  மேலே படத்தில் உள்ளது போல் இருல்லாது. அது சிறு சிறு  துண்டுகளாக இருக்கும். அதில் இரண்டு துண்டுகளை  சப்பாத்தின் அடிபாகத்தில் இரு பக்கமும் அடித்துக் கொடுப்பார்.  நான்கு இடத்திலும் அடித்துக் கொடுதால்  நடக்கும் போது சத்தம் பயங்கரமாக இருக்கும்! அதனால் இலாடங்கள் இரண்டே போதுமானவை. 

இப்படி  இலாடம் அடிப்பது சப்பாத்துகள்  நீண்ட நாள்  உழைக்கும்  என்கிற  காரணம் தான்.  வேறு காரணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.  மேலும் அன்று  இடைநிலைப் பள்ளிகள்  என்றால்  நீண்ட காற்சட்டை  அணிவதும், தோல் சப்பாத்துகளை அணிவதும்  தொடக்கப் பள்ளிகளூக்கும் இடைநிலைப் பள்ளிகளுக்கும் உள்ள வேறுபாட்டை காண்பிக்கத் தான்..




பின் குறிப்பு:  கண்களில் உள்ள குறைபாடுகளினால்  சரியாக செயல்பட முடியவில்லை. மன்னிக்கவும்.  (கோடிசுவரன்)

Sunday, 11 May 2025

ஐந்தடிஜோசியக்காரன்! (34)


 அந்தக் காலகட்டத்தில் ஐந்தடி ஜோசியர்கள்  அதிகம்.  அடிக்கடி தோட்டப்புறங்களுக்குப் படையெடுப்பார்கள். காரணம் ஏமாறும் தமிழர் கூட்டம் தோட்டங்களில் தான் இருந்தார்கள்!

எங்கள் வீட்டில் ஜோசியம் பார்க்கும் பழக்கம் இல்லை.  எப்படியோ ஒரு முறை  ஜோசியர் ஒருவர்  என் கையைப் பிடித்து அவரே ஜோசியம் சொல்ல ஆரம்பித்துவிட்டார். வேறு வழியில்லை. ஆரம்பிக்கும் போதே தூண்டிலை வலிமையாக போட்டுவிட்டார்!  "இவனுக்கு ராஜ யோகம்!  இங்கிலாந்து அரசர்  பிறந்த நேரத்தில்  தான் இவனும் பிறந்திருக்கிறான்! வருங்காலத்தில் பெரிய ஆளாக ஆகா! ஓகோ! என்று வருவான்! என்று பொளந்து  தள்ளிவிட்டார்!   அவருக்குக் கூலி கிடைத்துவிட்டது! அது தானே அவருக்கு வேண்டும்?

இது எப்போது நடந்தது என்பது எனக்குத் தெரியாது.  பிற்காலத்தில் ஏதையோ பற்றி பேசும்போது  என் தாயார் இது பற்றி சொன்னார். அப்போது கூட எனக்கு ஏழு எட்டு வயது இருக்கும், அவ்வளவு தான். ஆனாலும் ஏதோ ஒன்று அது என்னுள்ளே அப்படியே  தங்கிவிட்டது! அதனால் தான் ஒருவன் ஜோசியனாக இருந்தாலும்  ஒரு நல்ல விஷயத்தைச் சொன்னால்  அது அப்படியே மனதில் படிந்துவிடுகிறது! அந்த ஜோசியர் அப்படி ஒன்றும் உண்மையைச் சொல்லிவிடவில்லை. ஆனால்  கேட்க சந்தோஷமாகத் தானே  இருந்தது?  அதனால் தானே மறக்க முடியவில்லை?  அதனால் தான் ஜாதகம் சொல்லும் போது சாதகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள் பெரியவர்கள்.


   
அறிவோம்: ஜாதகம்,  ஜோதிடம், ஜோசியம், நாடி ஜோசியம்,மரத்தடி ஜோசியம், ஐந்தடி  ஜோசியம், கிளி ஜோசியம், மூச்சு ஜோசியம், தாயக்காய்,  பகடைகாய் - என்று ஜாதகத்தையே கேலிக்குரியதாக  ஆக்கிவிட்டார்கள்!  இது ஓர் உன்னதமான கலை.  அது தமிழர்களின் கலை தான். இந்த உயரிய கலையை நாம் கேலி செய்துவிட்டு அந்தப்பக்கம் போய்  சீனர்களின் ஃபெங் சூய் (Feng Shui)  பார்க்கிறோம்! சீனர்களின் பல கலைகள்  நம்மிடமிருந்து  போனவைகள் தான்! நம்முடைய மூலத்தை நாம் மறந்து விட்டோம்! நம்முடைய கலைகளையே பிறரிடமிருந்து நாம் இப்போது கற்றுக் கொண்டிருக்கிறோம்!

Wednesday, 7 May 2025

தலையாட்டி அண்ணன்! (33)

 

இது ஒரு வருத்தத்திற்கு  உரிய சம்பவம். எனது நோக்கம் எல்லாம் நமது தமிழ் மக்கள் எப்படியெல்லாம் என்னவென்றே  தெரியாத  வியாதிகளை எல்லாம் அனுபவித்திருக்கிறார்கள் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது தான்.

அப்போது தான் அந்த அண்ணன் வேலைக்குச் சேர்ந்திருந்தார். லோரி ஓட்டுநர் வேலை.  ஆனல் அவரிடம் ஒரு குறை தெரிந்தது.  தலையை ஆட்டிக்கொண்டே இருப்பார். தலையை ஆட்டி ஆட்டி ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்.  ஏதோ ஒரு வியாதி.  அப்போதெல்லாம்  இது என்ன வியாதி என்று கண்டுபிடிக்கவே மருத்தவர்கள் இல்லை. என்ன செய்ய?   அன்றைய தமிழனின் தலைவிதி  என்று தான் எடுத்தக்கொள்ள வேண்டும்.

அந்த அண்ணன் நீண்ட நாள் வேலை  செய்ய முடியவில்லை. லோரி விபத்தில் இறந்து போனார். எனக்குத் தெரிந்தது இந்த ஒரு சம்பவம் தான், ஆனால் அன்றைய மலாயாவில் எத்தனை பேர் இப்படி இறந்தார்களோ?

எனது நண்பன், கோவிந்தசாமி என்று பெயர்.  அவன் கூட இரண்டு கால்களிலும் சிறங்கு வந்து வீட்டிலேயே  முடங்கிக் கிடந்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தபோது  அவனுக்கு எல்லாம் சரியாகிவிட்டது. ஒரு வேளை நவீன மருத்துவம் அவனைக் குணமாகிவிட்டது என்றே நினைக்கிறேன்.



அறிவோம்:  அன்றைய வியாதிகள் எல்லாம் சரியான, சத்தான உணவுகள் இல்லாததால் வந்தவை.  விஷக்கடிகளால் வந்தவை.  இன்று கூடுதலான சத்தான உணவுகள்,  குப்பை உணவுகள் - இவைகளால் புற்று நோய், இதயக் கோளாறுகள், இனிப்புநீர் போன்ற வியாதிகளால்  அவஸ்தைப் படுகின்றோம்.  ஆக வியாதிகள் நிரந்தரம். காலத்திற்கு ஏற்ப மாறுபவை!


Sunday, 4 May 2025

பாட்டி வைத்தியம் (32)


 பாட்டி வைத்தியம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் என்ன செய்ய?  இப்போது படித்தவர்கள் அதிகமாகி விட்டதால் அதன் மௌசு,   இளசுகளிடையே குறைந்துவிட்டது. ஆனாலும் இன்னும் பாட்டி வைத்தியம்  உயிர்ப்புடன் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. மங்கிப்போய் விடவில்லை என்பது ஆறுதல்.

இது என் தாயார் சொன்னது. நான் பதினெட்டு மாதக் குழந்தையாக இருந்த போது  ஏற்பட்ட ஒரு வியாதி. உடல் முற்றிலுமாக செயல் இழந்துவிட்டது. படுத்த படுக்கை தான்.  போர்ட்டிக்சன். மருத்துவனைக்குக் கொண்டு சென்ற  போது டாக்டர் "ஊகூம், இவன்பிழைக்க மாட்டான்" என்று கைவிரித்து விட்டாராம்.

அப்போது பக்கத்து வீட்டு பாட்டி ஒருவர் காட்டுக்குச் சென்று அங்கிருந்து இலைதழைகளைக்  கொண்டுவந்து  அவைகளைக் கொதித்தண்ணீரில் அவித்து பின்னர் அந்தத்  தண்ணீரால் உடல் முழுவதும் நீவி விட்டாராம். பல மாதங்கள் படுத்தே கிடந்தே நான் ஒரு சில மணி நேரங்களில் எழுந்து உட்கார்ந்து விட்டேனாம்!  என் தாயார் சொன்ன இலைதழைகளில்  கத்தாழை (Aloe Vera)  யும் ஒன்று. இன்றும் நாம் இந்தக் கற்றாழையை ஏதோ ஒரு வகையில்  பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.

சரி அதென்ன பாட்டி வைத்தியம்? இது தமிழரிடையே பாரம்பரியமாக வருவது. உலகின் மூத்த குடி என்னும் பெருமை உள்ள மக்களான நமக்கு  எந்தவொரு மருத்துவமும் அறியாமலா வாழ்ந்து வந்தோம்?  அதன்  பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டோம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.



அறிவோம்:  வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் - வாசல் தோறும் வேதனை இருக்கும் - வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை -  எதையும் தாங்கும் இதயம் இருந்தால்  இறுதி வரைக்கும்  அமைதி இருக்கும்  - ஏழை மனதை மாளிகை ஆக்கி  இரவும் பகலும் காவியம் பாடு -  நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து -  நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு - உனக்கும் கீழே உள்ளவர்  கோடி  - நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு 

கவிஞர் கண்ணதான்









Thursday, 1 May 2025

நாக்குப்பூச்சி! (31)

 

இன்றைய தலைமுறையினருக்கு  நாக்குப்பூச்சி என்றால் என்னவென்று தெரிய வாய்ப்பில்லை! 

அது அந்த அளவுக்குத் தேவைப்படவில்லை. ஆனால் அந்த காலகட்டத்தில் நான் வசித்தசெண்டயான் தோட்டத்தில்  அது கட்டாயம் என்கிற நிலைமையில் இருந்தது.  அது ஏன் என்பது தெரியவில்லை.  

பிரச்சனை என்பது இது தான். மாதத்திற்கு  ஒரு முறை சிறுவர்களுக்கு  வயிற்றைச் சுத்தம் செய்வதற்காக  விளக்கெண்ணய்  கொடுப்பார்கள்.   ஒவ்வொரு மாதமும் இது நடக்கும்.  மற்ற தோட்டங்களில் இப்படி நடந்ததா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த தோட்டத்தில்  மட்டும் அந்த அநியாயம் நடந்தது!  அதைக் குறையாகப் பார்த்தாலும்  விளக்கெண்ண்யை சாப்பிட்டுவிட்டு உட்கார்த்தால்  நீட்டு நீட்டு நாக்குப்பூச்சிகள் வந்து விழுவது மட்டும் உறுதி.

இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால் சீனி அதிகம் சாப்பிடுவதால் வருகிற  கோளாறு என்கிறார்கள்.  அந்த கஷ்ட காலத்தில் சீனி அப்படியென்ன கொட்டியா கிடந்திருக்கும்?அது சரியோ தவறோ  நாக்குப்பூச்சி என்பது உண்மை!

விளக்கெண்ணெய் எங்கிருந்து வந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் மாதாமாதம் வந்து கொண்டிருந்தது என்பது மட்டும் உண்மை.  தோட்ட நிர்வாகம் கொடுத்ததா என்பது தெளிவில்லை. அந்தத் தோட்டத்தை விட்டு வெளியேறிய பின்னர் இந்த விளக்கெண்ணெய் பிரச்சனை எழவில்லை!  ஏன்? அதன் பின்னர் விளக்கெண்ணெய் சாப்பிட்டதாக நினைவில் இல்லை.





அறிவோம்: ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒரு பிரச்சனை மனிதகுலத்தை  ஆட்டிப்படைக்கத் தான் செய்யும்.  ஆனால் அவற்றுகெல்லாம் மனிதன் தீர்வைக் காணாமல் இருந்ததில்லை. அப்போதும் சரி இப்போதும் சரி எல்லாவற்றுக்கும் தீர்வுகள் உண்டு.