Tuesday, 27 May 2025

பேனா நண்பர்கள் (40)

பள்ளி காலத்தில் எனக்கு ஏகப்பட்ட பேனா நண்பர்கள்.   எனது ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர  சொல்லும்படியாக வேறொன்றுமில்லை!

பெரும்பாலும் வெளிநாட்டுக்காரர்கள் தான். உள்ளூர் நண்பர் ஒருவரைப்பற்றி சொல்லுகிறேன். ஒரு முஸ்லிம் இளைஞர். தமிழர். நன்றாகத்தான் எழுதி வந்தார். தனது போட்டோவை அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லி இந்து சமய மாரியம்மன் படத்தை அனுப்பிவைத்தார்! அத்தோடு உறவை முறித்துக் கொண்டார். பின்நாள்களில் இவர் கோலாலம்பூர் தமிழ் வானொலியில் பணி புரிந்திருக்கிறார், அவர் பெயர், வாழந்த தோட்டம் அனைத்தும் இப்போதும் அத்துப்படி!

ஜெர்மனியில் இருந்து ஓர் இளைஞர்.  நீண்ட நாள் எழுதிவந்தோம்.  அவர் இராணுவப் பயிற்சிக்குப் போய்விட்டார்.. சுவீடன் நாட்டிலிருந்து ஒரு பெண். நீண்ட நாள் ஏழுதிவந்தார்.  ஒரு நாள் விபத்தில் அவர் இறந்து போனதாக  செய்தி வந்தது.  எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நன்றாகவே எழுதிவந்தார். ஒரு முறை நான் அவரிடம் நீங்கள் யூதப் பெண்ணா அல்லது அரபுப் பெண்ணா என்று கேட்டிருந்தேன்.கொதித்துப் போனாள் அவள்! நீ எப்படி என்னை யூதப்பெண்ணா என்று கேட்கலாம் என்று வெடித்துச்  சிதறடித்தாள் என்னை!  எனக்கு அந்த ஊர் அரசியல் எல்லாம் தெரியாது! அத்தோடு முறிந்தது.

எது எப்படியிருந்தாலும் அந்த நண்பர்கள் எல்லாம் எனக்குப் பிடித்தவர்களாகவே இருந்தனர்.



அறிவோம்:  மனிதன் ஏழையாக இருக்கலாம் கோழையாக இருக்கக் கூடாது என்று சொன்னவர் துன் வீ.தி. சம்பந்தன். ஆனால் இன்றைய நிலையில்  ஏழையும் வேண்டாம், கோழையும் வேண்டாம்  கல்வியை மட்டும் விடவேண்டாம். கல்வி தான் ஒருவனை வீரனாக்கும்

No comments:

Post a Comment