Tuesday, 17 June 2025
நான் வாங்கிய முதல் புத்தகம் (44)
Monday, 24 February 2025
ஆங்கிலப்பள்ளி எப்படி? (11)
ஆங்கிலப்பள்ளி என்பதால் எந்த ஒரு பயமும் ஏற்பட்டதாக நினைவில் இல்லை. ஏற்கனவே மூன்று ஆண்டுகள் தமிழ்ப்பள்ளியில் படித்திருப்பதால் அனைத்தும் சுமூகமாகத்தான் இருந்தன. ஒரே ஒரு குறை: ஆங்கிலம் பேச வராது என்பதைத் தவிர குறை ஏதும் இல்லை!
எனது முதல், வகுப்பு (Primary 1) ஆசிரியை: மிஸ் நாயர். வகுப்பில் அதிகம் இருந்தவர்களில் மலாய் மாணவர்களே அதிகம் என நினைக்கிறேன். இந்திய மாணவர்கள் இருந்தார்களா என்பதும் தெரியவில்லை. யாரிடமும் தமிழில் பேசியதாக நினைவில் இல்லை. வகுப்பில் குறைவான மாணவர்கள் தான்.
எனது முதலாவது நண்பன் என்றால் எனது பக்கத்தில் அமர்ந்திருந்த மலாய் மாணவன் ஏடம் (Adam) என்பவன் தான். இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவனது முகம் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. எப்போதும் சிரித்த முகம். என்னைவிட இரண்டு மூன்று வயது கூட இருக்கும். என்னைப் பார்த்து அவன் காப்பி அடிப்பான்!
என்னிடம் உள்ள 'திறமை' என்னவென்றால் எனக்கு வாசிக்கும் திறன் உண்டு. புரிகிறதோ புரியவில்லையோ, வாசிக்கத் தெரியும்! சொல்வதெழுதல் (Dictation) நன்றாகவே செய்வேன்.
அந்தப்பள்ளியில் தான் நோட்டுப்புத்தகம், பென்சிலில் எழுதுகிற பழக்கம் வந்தது. தினசரி தேதி, மாதம், ஆண்டு எழுதுகின்ற பழக்கமும் வந்தது. அப்போது தான் ஆண்டு 1948 என்று மறக்க முடியாதபடி ஆண்டின் ஞாபகமும் திணிக்கப்பட்டது. பின்னர் அதுவே பழக்கத்திற்கு வந்துவிட்டது.
அறிவோம்: மலேசியாவில் தமிழ்க்கல்வி எங்கு, எப்போது ஆரம்பிக்கப்பட்டது? Penang Free School என்னும் பள்ளியில், பினாங்கில் - 21-10-1816 - அன்று தான் தமிழ்க்கல்வியின் தொடக்கம். (209 ஆண்டுகள்) தொடங்கியவர்: Rev.Hutcings. நாம் வாழும் சிரம்பான் நகரின் ஜாவா லேன் தமிழ்ப்பள்ளியில் தொடக்கம் 1898 - ம் ஆண்டு.
Wednesday, 12 January 2022
நெதர்லாந்து தமிழன் பிரதமருடன்!
வாழ்க்கையில் ஒரு சில முறை தான் சில அபூர்வ சந்தர்ப்பங்கள் சந்திப்புகள் அமையும். எதிர்பாராத சந்திப்பு எதிர்பாராத சமயத்தில் வருகின்ற போது கையும் ஓடுவதில்லை! காலும் ஓடுவதில்லை!
நெதர்லாந்து தமிழன் ஒரு பிரபலமான மனிதர். குறைந்த பட்சம் யூடியுபர் களிடையே பிரபலம். அவருடைய பெயரைச் சொன்னால் யாருக்கும் தெரியாது! நெதர்லாந்து தமிழன் என்கிற பெயரில் தான் அவர் பிரபலம். தமிழன் என்று சொல்லிக் கொண்டு நெதர்லாந்தை வலம் வந்து கொண்டிருப்பவர் இவர் ஒருவர் தான்!
நெதர்லாந்தில் இந்தியர்களால், தமிழர்களால் நடத்தப்படும் பல நிறுவனங்களைப் பேட்டி எடுத்து காணொளிகளில் வெளியிடுவதின் மூலம் உலகத் தமிழருக்கு அறிமுகமானவர்.
உணவுத் துறையில் நமது நாட்டைச் சேர்ந்த வள்ளி என்பவரை (வள்ளி உணவகம்) பேட்டி எடுத்த போது "அட! நம் ஊரைச் சேர்ந்த மலேசியப் பெண்மணி ஒருவர் நெதர்லாந்தில் உணவகம் நடத்துகிறாரே!" என்று அதிசயப்பட்டவர்களில் நானும் ஒருவன்!
இந்த நெதர்லாந்து தமிழன் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் கடைத்தெருவில் தேநீர் அருந்த சென்று கொண்டிருக்கும் போது திடீரென நெதர்லாந்து பிரதமர் தனது சைக்களை விட்டு இறங்கி பேரங்காடி ஒன்றுக்கு நடந்து கொண்டிருந்தார்! பிரதமர் சைக்கிளிலா! அதுவும் நடந்து போவதா! அதிர்ச்சியில் உறைந்து போன நெதர்லாந்து தமிழன் அவரைச் சந்தித்து வாழ்த்துக் கூறிய போது பிரதமர் கட்டி அணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்! அப்போது எடுத்த படம் தான் மேலே காணப்படுவது!
பொதுவாகவே இது போன்ற செயல்கள் எல்லாம் நம்மைப் பொறுத்தவரை அதிசயம் என்று சொல்லுவதைத் தவிர வேறொன்றுமில்லை. நமது நாட்டில் இப்படியெல்லாம் நடக்க சந்தர்ப்பமே இல்லை! சைக்கிளில் போவதே கேவலம் என்கிற ஒரு நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்! அதற்கு அப்புறம் பிரதமர் பைகளைத் தூக்கிக் கொண்டு சாமான்களை வாங்க அங்காடிகளுக்குப் போவது - இதெல்லாம் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது! அப்புறம் வேலைக்காரர்கள் எதற்கு? என்பது நமது கேள்வியாக இருக்கும்!
நல்ல நாடு, நல்ல மக்கள், நல்ல அரசு, நல்ல ஜனநாயகம், நல்ல ஒற்றுமை, நல்ல மகிழ்ச்சி - இதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்! நடக்கட்டுமே!
Monday, 29 May 2017
சிக்கனமே நம்மை உயர்த்தும்!
இப்போது உள்ள விலைவாசிக்கு எப்படிச் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது என்று நாம் எல்லாருமே சொல்லிக் கொண்டு தான் இருக்கிறோம். குறைவான விலைவாசியின் போது நீங்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பவராக இருந்தீர்களா? அப்படி என்றால் விலைவாசி குறைவோ, கூடவோ சிக்கனம் என்பது நம்மோடு கூடவே ஒட்டிக் கொண்டு தான் இருக்கும்.
சிக்கனம் என்பது உங்களது தேவைகள் அனைத்தையும் குறைத்துக் கொள்ளுங்கள் என்று யாரும் சொல்லவில்லை. தேவையற்றவைகள் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளுங்கள் என்பது தான் முக்கியம். நாம் செய்கின்ற செலவுகள் அனைத்தையும் பட்டியலிட்டால் நமக்குத் தெரியும் நாம் எங்கு மிகவும் தாராளமாக இருக்கிறோம்; தாராளமற்று இருக்கிறோம் என்பது. ஒரு பிச்சைக்காரனுக்குப் போடும் போது கொஞ்சம் தாராளமாக இருக்கலாம். மற்றவர்களுக்கு உதவும் போது தாராளமாக இருக்கலாம். அது அவசியம். ஆனால் பிரச்சனை அங்கு அல்ல. நமக்குச் சொந்தமாக செலவு செய்கிறோமே அங்கு தான் நாம் ஏகப்பட்ட ஒட்டைகளை வைத்துக் கொண்டிருக்கிறோம். புகைப்பது சுகாதாரக் கேடு என்பது நமக்குத் தெரியும். மது அருந்துதல் உடல் நலக்கேடு என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் அதனை நாம் விட்டபாடில்லை. புகைப்பது என்பது நமக்கு நாமே தயாரித்துக் கொள்ளும் பிணப்பெட்டி என்பது நமக்குப் புரிகிறது. இருந்தாலும் அந்தப் பிணப்பெட்டியோடு ஒவ்வொரு நிமிடமும் நாம் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம்!
ஒவ்வொரு மனிதனும் தான் பிடிக்கும் புகைப்பழக்கத்தை விட்டாலே பல நூறு வெள்ளிகளை சேமிக்க முடியும். மது அருந்துவதை நிறுத்தினாலே பணம் மட்டும் அல்ல குடும்பத்தையும் ஒரு வளமான வாழ்க்கைக்குக் கொண்டு செல்ல முடியும். குடும்பத்தலைவன் மது அருந்தினால் அவனது பிள்ளைகளும் அப்பனையே வழிகாட்டியாகக் கொள்ளுவார்கள். நாம் வேறு எதனையும் செய்ய வேண்டாம். நாம் சிகிரெட் பிடிக்காமல் இருந்தால் போதும். நாம் மது அருந்தாமல் இருந்தால் போதும். நாம் சிக்கனத்திற்கு வந்து விடுவோம்.
இன்றைய நிலையில் நாம் அதிகமாகச் செலவழிப்பது புகை பிடிப்பதற்கும், மது அருந்துவதற்கு மட்டுமே! இவைகளை நிறுத்தினாலே நம் கையில் எப்போதும் பணம் இருக்கும். குடும்பத்தில் குடும்பத்தலைவர் சிக்கனமாக இருந்தாலே அந்தக் குடும்பம் வாழ்க்கையில் உயர்வைக் கண்டு விடும்.
மீண்டும் சொல்லுகிறேன் சிக்கனமே நமக்கு உயர்வைக் கொண்டு வரும்! சிக்கனத்தோடு, சிறப்பாக வாழ முயற்சி செய்வோம்!
Thursday, 8 September 2016
"நன்றி!" சொல்லுங்க சார்!
வெள்ளைக்காரன் மொழியான ஆங்கிலத்தைப் படித்தோம். படித்த அந்த ஆங்கிலம் மூலம் பெரிய பெரிய பதவிகளில் உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
நல்ல ஆசை தான். குற்றமில்லை! ஆனால் அதே வெள்ளைக்காரன் சொல்லிக் கொடுத்த "நன்றி!" என்று சொல்லை மட்டும் மறந்து விட்டோம்! வெள்ளைக்காரனுக்கு நன்றி ஒரு வார்த்தையைச் சொல்லாமல் இருக்க முடியாது. அது அவனுடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகிவிட்டது. எல்லாவற்றுக்கும் நன்றி! அவர்கள் குழந்தைகளாகட்டும் அல்லது பிச்சைக்காரனாகட்டும் அல்லது கோடீஸ்வரனாகட்டும், மனைவி பிள்ளைகளாகட்டும் யார் எதைச் செய்தாலும் நன்றி! என்று சொல்லுவதை அவனது தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது!
ஆனால் நம்முடைய நிலை என்ன? இங்கே நன்றி என்று சொல்லுவதிலும் ஒரு ஏற்றத் தாழ்வைக் கொண்டு வந்து விட்டோம். சம நிலையில் உடையவரிடையே பேசும் போது நன்றி என்று தாராளாமாகச் சொல்லுகிறோம். நமக்குக் கீழே உள்ளவர்களுக்கு நன்றி சொல்லுவதே கேவலம் என்னும் நிலைக்கு வந்து விட்டோம்!
அ) அவன் அவனுடைய வேலையைச் செய்வதற்கு நன்றி சொல்ல வேண்டுமா?
ஆ) நமக்குக் கீழே வேலை செய்பவன் அவனுக்கு நன்றியா?
இ) நாம் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் இவனை வேலையை விட்டுத் தூக்க முடியும்! இவனுக்குப் போய் நன்றி சொல்லுவதா?
ஈ) ஒரு முதாலாளி ஒரு தொழிலாளிக்கு நன்றி சொல்லுவதா?
ஒவ்வொன்றையும் இப்படித்தான் நாம் எடை போடுகிறோம்! ஆனாலும் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். நன்றி சொல்லுவதில் பெரியவர், சிறியவர் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது!
ஒருவர் நமக்கு ஏதோ ஒரு வகையில் உதவியிருக்கிறார். அவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். உங்கள் மகன் உங்களது கண்ணாடியைக் கொண்டு வது கொடுக்கிறான். . நன்றி சொல்லத்தான் வேண்டும். உங்கள் மனைவி உங்களது சட்டையை "இஸ்திரி" போட்டுக் கொடுக்கிறார். நன்றி சொல்லத்தான் வேண்டும். காவலாளி உங்களுக்காகக் கதவைத் திறந்து விடுகிறார். நன்றி சொல்லத்தான் வேண்டும். உணவகத்தில் பரிமாறுபவர் தேநீர் கொண்டு வந்து வைக்கிறார். நன்றி சொல்லத்தான் வேண்டும்.
ஆமாம், வெள்ளைக்காரன் இதனை எல்லாம் செய்கிறான் தானே? அவனது மொழியைப் படித்த நமக்கும் அந்தப் பண்புகள் வரவேண்டும் அல்லவா! நன்றி அவ்வளவு முக்கியமா என்று நாம் கருதலாம். ஆமாம் முக்கியம் தான். நன்றி சொல்லிப் பாருங்கள். அடுத்த முறை நீங்கள் உணவகத்திற்குச் செல்லும் போது உங்களை ஆர்வத்தோடு வரவேற்பார்; விசேஷமாகவும் கவனிப்பார் அந்த பரிமாறும் நண்பர்!
இந்த உலகமே நன்றிக்காகவும், பாராட்டுக்காகவும் ஏங்கித் தவிக்கின்றன. நாமும் இந்த மனித மனங்களைக் குளிர வைப்போம். நன்றி சொல்லி பாராட்டுவோம்! நன்றி சொல்லுவதன் மூலம் நல்லது தான் நடக்குமே தவிர எந்தக் கெடுதலும் நடக்கப் போவதில்லை!
நன்றி! நன்றி! நன்றி!