வாழ்க்கையில் ஒரு சில முறை தான் சில அபூர்வ சந்தர்ப்பங்கள் சந்திப்புகள் அமையும். எதிர்பாராத சந்திப்பு எதிர்பாராத சமயத்தில் வருகின்ற போது கையும் ஓடுவதில்லை! காலும் ஓடுவதில்லை!
நெதர்லாந்து தமிழன் ஒரு பிரபலமான மனிதர். குறைந்த பட்சம் யூடியுபர் களிடையே பிரபலம். அவருடைய பெயரைச் சொன்னால் யாருக்கும் தெரியாது! நெதர்லாந்து தமிழன் என்கிற பெயரில் தான் அவர் பிரபலம். தமிழன் என்று சொல்லிக் கொண்டு நெதர்லாந்தை வலம் வந்து கொண்டிருப்பவர் இவர் ஒருவர் தான்!
நெதர்லாந்தில் இந்தியர்களால், தமிழர்களால் நடத்தப்படும் பல நிறுவனங்களைப் பேட்டி எடுத்து காணொளிகளில் வெளியிடுவதின் மூலம் உலகத் தமிழருக்கு அறிமுகமானவர்.
உணவுத் துறையில் நமது நாட்டைச் சேர்ந்த வள்ளி என்பவரை (வள்ளி உணவகம்) பேட்டி எடுத்த போது "அட! நம் ஊரைச் சேர்ந்த மலேசியப் பெண்மணி ஒருவர் நெதர்லாந்தில் உணவகம் நடத்துகிறாரே!" என்று அதிசயப்பட்டவர்களில் நானும் ஒருவன்!
இந்த நெதர்லாந்து தமிழன் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் கடைத்தெருவில் தேநீர் அருந்த சென்று கொண்டிருக்கும் போது திடீரென நெதர்லாந்து பிரதமர் தனது சைக்களை விட்டு இறங்கி பேரங்காடி ஒன்றுக்கு நடந்து கொண்டிருந்தார்! பிரதமர் சைக்கிளிலா! அதுவும் நடந்து போவதா! அதிர்ச்சியில் உறைந்து போன நெதர்லாந்து தமிழன் அவரைச் சந்தித்து வாழ்த்துக் கூறிய போது பிரதமர் கட்டி அணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்! அப்போது எடுத்த படம் தான் மேலே காணப்படுவது!
பொதுவாகவே இது போன்ற செயல்கள் எல்லாம் நம்மைப் பொறுத்தவரை அதிசயம் என்று சொல்லுவதைத் தவிர வேறொன்றுமில்லை. நமது நாட்டில் இப்படியெல்லாம் நடக்க சந்தர்ப்பமே இல்லை! சைக்கிளில் போவதே கேவலம் என்கிற ஒரு நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்! அதற்கு அப்புறம் பிரதமர் பைகளைத் தூக்கிக் கொண்டு சாமான்களை வாங்க அங்காடிகளுக்குப் போவது - இதெல்லாம் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது! அப்புறம் வேலைக்காரர்கள் எதற்கு? என்பது நமது கேள்வியாக இருக்கும்!
நல்ல நாடு, நல்ல மக்கள், நல்ல அரசு, நல்ல ஜனநாயகம், நல்ல ஒற்றுமை, நல்ல மகிழ்ச்சி - இதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்! நடக்கட்டுமே!
No comments:
Post a Comment