Monday, 24 February 2025

ஆங்கிலப்பள்ளி எப்படி? (11)

                                SK Port Dickson (Govt. English Primary School)

ஆங்கிலப்பள்ளி என்பதால் எந்த ஒரு பயமும் ஏற்பட்டதாக நினைவில் இல்லை. ஏற்கனவே  மூன்று ஆண்டுகள் தமிழ்ப்பள்ளியில்  படித்திருப்பதால்  அனைத்தும் சுமூகமாகத்தான் இருந்தன. ஒரே ஒரு குறை: ஆங்கிலம் பேச வராது என்பதைத் தவிர குறை ஏதும் இல்லை!

எனது முதல்,  வகுப்பு (Primary 1)  ஆசிரியை: மிஸ் நாயர்.  வகுப்பில் அதிகம் இருந்தவர்களில்  மலாய் மாணவர்களே அதிகம் என நினைக்கிறேன். இந்திய மாணவர்கள் இருந்தார்களா என்பதும் தெரியவில்லை.  யாரிடமும் தமிழில் பேசியதாக நினைவில் இல்லை.   வகுப்பில் குறைவான மாணவர்கள் தான்.

 எனது முதலாவது நண்பன்  என்றால் எனது பக்கத்தில் அமர்ந்திருந்த மலாய் மாணவன் ஏடம் (Adam)  என்பவன் தான். இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவனது முகம் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. எப்போதும் சிரித்த முகம். என்னைவிட இரண்டு மூன்று  வயது கூட இருக்கும். என்னைப் பார்த்து அவன் காப்பி அடிப்பான்!

என்னிடம் உள்ள 'திறமை' என்னவென்றால்  எனக்கு வாசிக்கும் திறன் உண்டு. புரிகிறதோ புரியவில்லையோ, வாசிக்கத் தெரியும்! சொல்வதெழுதல்  (Dictation)  நன்றாகவே செய்வேன்.

அந்தப்பள்ளியில் தான் நோட்டுப்புத்தகம், பென்சிலில் எழுதுகிற பழக்கம் வந்தது. தினசரி  தேதி, மாதம், ஆண்டு எழுதுகின்ற பழக்கமும் வந்தது. அப்போது தான்  ஆண்டு 1948 என்று மறக்க முடியாதபடி ஆண்டின் ஞாபகமும்  திணிக்கப்பட்டது.  பின்னர் அதுவே பழக்கத்திற்கு வந்துவிட்டது.


அறிவோம்: மலேசியாவில் தமிழ்க்கல்வி எங்கு, எப்போது ஆரம்பிக்கப்பட்டது?  Penang Free School  என்னும் பள்ளியில், பினாங்கில் - 21-10-1816 - அன்று  தான் தமிழ்க்கல்வியின் தொடக்கம். (209 ஆண்டுகள்) தொடங்கியவர்:  Rev.Hutcings. நாம் வாழும் சிரம்பான் நகரின் ஜாவா லேன் தமிழ்ப்பள்ளியில் தொடக்கம் 1898 - ம் ஆண்டு.

No comments:

Post a Comment