Monday, 3 August 2020

ஆகா! என்ன கண்டுப்பிடிப்பு!

பெர்காசா கோமாளிகள் எப்படியெல்லாம் கோமாளித்தனமாகப் பேசுவார்கள் என்பது நமக்குத் தெரியும்!

இப்போது அவர்கள் கோமாளித்தனமாக ஓர் அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையத் தலைவராக  முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா சீனிவாசன்  நியமிக்கப்பட்டால் அவர்கள் கடுமையாக எதிர்ப்போம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்!

ஓர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு அவர்களுக்குத் துணிச்சல் வந்திருக்கிறது! அப்படியென்றால் அரசாங்கத்திற்கு யார் வேண்டுமானாலும் எச்சரிக்கை விடுக்கலாமோ!

இன்னொரு பக்கம் பார்த்தால் முதலில் அம்பிகா இந்த நியமனத்தை ஏற்றுக் கொள்ளுவாரா என்பது தெரியவில்லை! அவர் தனது கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள நினைப்பவர்.   அவரைப் பொறுத்தவரை இது ஒரு கௌரவமற்ற பதவி!  இது போன்ற பதவிகளுக்கு எத்தனையோ பேர் காத்துக் கிடக்கிறார்கள்!  அவர்களில் ஒருவர் "நாங்கள் எச்சரிக்கிறோம்!"   என்று சொல்லுகின்றவராகக் கூட இருக்கலாம்!

பொதுவாக ஓர் இந்தியர் அந்தப் பதவிக்கு வரக் கூடாது என்பது தான் அவர்களது நோக்கம்.  அதை அவர் வெளிப்படையாகச் சொல்லாமல் அம்பிகாவைப் பற்றி  வேறு ஒரு காரணத்தைச் சொல்லுகிறார்.  அவர் ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பவராம்!  அதனால் இவர்கள் எதிர்ப்பார்களாம்!

அப்படியென்றால் வேறு ஒரு இந்தியரை இவரே சிபாரிசு செய்யலாமே! மிக மிகத் தூயவர்களெல்லாம் பாஸ் கட்சியின் இந்தியர் பிரிவில் இருக்கிறார்களே!  ஒருவர் சமீப காலத்தில் மேல்சபை உறுப்பினர் ஆனாரே!

இது போன்ற பதவிகள் இந்தியர்களுக்குக் கிடைக்காது என்பது எங்களுக்குத் தெரியும். இது ஊரறிந்த ரகசியம்.  ஒரே காரணம் தான். இந்தியர்கள் இது போன்ற பதவிகளுக்குத் தகுதியானவர்கள் அல்ல என்பது பெர்காசாவின் நிலைப்பாடு! ஆமாம், இலஞ்சம் வாங்கத் தெரியாதவனுக்கு ஏன் பதவிகள் கொடுக்க வேண்டும் என்பது தான் இவர்களைப் போன்ற எச்சரிக்கையாளர்கள் நினைக்கிறார்கள்!

எது எப்படியோ நமக்கு ஒன்று தெளிவாகத் தெரியும்.  உயர் பதவிகள் வகிக்க இந்தியர்கள் தகுதியற்றவர்கள்.  யார் இலஞ்சம் வாங்குகிறானோ அவன் தான் எந்தப் பதவிக்கும் தகுதியுள்ளவன்.

இன்றைய உலக மதிப்பீடு அப்படித்தான் போகிறது!

இன்று பல பதவிகள் இந்தியர்களுக்குக் கொடுக்கப்படாதற்குக் காரணமே இலஞ்சம் தான்!

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நீதி, நியாயம் மட்டுமே நிலைக்கும்!

Saturday, 1 August 2020

ஆபத்தை விலைக்கு வாங்காதீர்கள்!

ஆபத்தை விலைக்கு வாங்காதீர்கள் என்று அரசாங்கத்தோடு சேர்ந்து நாமும் எச்சரிக்கை விடுக்க வேண்டியுள்ளது!

கொரோனா தொற்று நோய் கட்டுக்குள் வர வேண்டும்.  முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். நாம் அனைவருமே அதை விரும்புகிறோம்.

ஆனாலும் பொது இடங்களிலும் நாம் பார்க்கும் போது முகக்கவசம் அணியாது சுற்றிக் கொண்டிருக்கிறோம்! சமூக இடைவெளியை யாரும் பின்பற்றுவதில்லை!

நாம் குறைந்தபட்சமாக முகக்கவசம் அணிவதையாவது கடைப்பிடிக்க வேண்டும்  இதிலே படித்தவர் படிக்காதவர் என்கிற வேறுபாடுகள் எல்லாம் ஒன்றுமில்லை. அனைவருமே மந்தைகளைப் போல செயல்படுகிறோம்!

கட்டுப்பாடுகள் என்றால் நமக்குப் பிடிப்பதில்லை.  நமது உயிரைப்பற்றி நமக்குக் கவலையில்லாமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்களின் உயிர்களைப்பற்றி நாம் கவலைப்படத்தான் வேண்டும். ஒரு வேளை நாம் செத்தால் கவலைப்பட யாருமில்லாமல் இருக்கலாம் அதற்காக  மற்றவர்கள் உயிரை விட வேண்டும் என்கிற அவசியமில்லை. அனைவருக்கும் குடும்பம் உண்டு. குழந்தை குட்டிகள் உண்டு. இவர்களையெல்லாம் விட்டுவிட்டு உயிரை விட முடியாது.

கொரோனாவின்  பாதிப்பைப் பற்றி நாம் சரியாக அறியவில்லை. நம் குடும்பத்தில் அதன் பாதிப்பு ஏற்படாத வரை நம்மால் அதனைப் புரிந்து கொள்ள முடியாது.  அதற்காக பாதிப்பு வர வேண்டும் என்று சொல்ல முடியுமா?  வேண்டாம்! யாருக்கும் எந்த பாதிப்பு வேண்டாம்!

எத்தனை எத்தனை பிள்ளைகள் இன்று அனாதைகளாகி விட்டனர் என்பது தெரியுமா?  நாம் அது பற்றி அக்கறை காட்டுவதில்லை! தெரிந்த கொள்ள முயற்சி செய்வதில்லை!

நண்பர்களே! நீங்கள் பெரிதாக ஒன்றையும் செய்ய வேண்டாம்.  கொஞ்ச கட்டுப்பாடு, அவ்வளவு தான்!

நமது சுகாதாரத் துறை சொல்லுவதைக் கேளுங்கள். இன்றைய நிலையில் அவர்கள் சொல்லுவதெல்லாம் முகக்கவசம் அணியுங்கள் என்பது தான்.   அத்தோடு நாம் செய்ய வேண்டியது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.  தேவை இல்லாமல் வெளியே சுற்ற வேண்டாம். .  கூட்டமான இடங்களைத் தவிர்த்து விட வேண்டும். இதெல்லாம் சுயக் கட்டுப்பாடு.

கொரோனா 19 பாதிப்பு என்பதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.  நோயைத் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறிக் கொண்டிருக்கின்றன.  அதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை.

அதனால் நாம் சுகாரத்துறையோடு ஒத்துழைப்போம்.  ஆபத்து என்று தெரிந்தும் அதனைச் சீண்டிப் பார்க்க வேண்டாம்.

ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம்!

அடுத்து எந்த மாநிலம்?

அரசியல் விளையாட்டுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன!

அடுத்த எந்த மாநிலத்திற்கு ஆப்பு என்று இன்னும் தெரிந்தபாடில்லை! சிலாங்கூரா அல்லது நெகிரி செம்பிலனா என்று  எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

சபா மாநிலத்தில் புதிய தேர்தலுக்கு வழி வகுத்துவிட்டார்கள். அது தாம் அம்னோவின் விருப்பமும் கூட. 

இப்போது  அம்னோ தனது கவனத்தை சிலாங்கூரிலும், நெகிரி செம்பிலானிலும் தனது சாக்கடை அரசியலுக்கு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது!

அம்னோவுக்கு உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும். அதற்காக அவர்கள் எதனையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். கவிழ்ப்பு வேலை எல்லாம் அவர்களுக்கு அத்துப்படி.

நஜிப் மீதான நீதிமன்ற தீர்ப்பு அவர்கள் எதிர்ப்பார்த்தபடி நடக்கவில்லை.  அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைய முடியவில்லை! முழு பூசணிக்கையைச் சோற்றில் மறைப்பது என்பது சாத்தியமா?  ஆனால் சாத்தியம் ஆக வேண்டும்  என்பது அம்னோவின் தரப்பு! அம்னோவால் அது சாத்தியம் என்பதை முன்பு அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது பார்த்திருக்கிறோம்!

இன்னொரு கேள்வியும் நம்மிடையே தொக்கி நிற்கிறது. பி.கே.ஆர். கட்சியினர் அவர்களது கட்சியிலிருந்து விலகிய சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள்,   ஒப்பந்தப்படி வெள்ளி ஒரு கோடி கட்சிக்குக் கொடுக்க வேண்டும் என வழக்குப் பதிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாயின. 

இப்படி ஒரு கோடி திருப்பிக் கொடு என்று கேட்பதில் ஏதேனும் பயன்கள் இருக்கின்றனவா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  அவர்கள் அப்படிக் கட்சி மாறினாலும் இவர்கள் போகின்ற கட்சி இந்த சில்லறைகளை வீசி எறிய தயாராகத்தான் இருப்பார்கள்!   ஆட்சியிலிருக்கும் கட்சிகள் எதுவும் வறுமையில் இல்லை! அதனால் அது ஒன்றும் மாறிப் போனவர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது.

எப்படியோ இந்தக் கட்சி மாறிகளால் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படலாம். சொல்ல முடியாது. இப்படிக் கட்சி மாறும் போது அவர்களுக்கு ஏகப்பட்ட சில்லறைகள் கிடைக்கின்றன. அதாவது அவர்கள் வாழ்நாளில் சம்பாதிக்க முடியாத அளவுக்கு இந்த ஒரே கட்சி தாவலினால் அவர்கள் சம்பாதித்து விடுகிறார்கள்!

பொதுவாகவே அரசியல்வாதிகளைப் பற்றி நமக்குத் தெரியும். நாலு காசு சம்பாதிக்க முடியாத நாதாறிகள் எல்லாம் அரசியல்வாதிகளாகி விடுகிறார்கள்! அவர்களது நோக்கம் தொண்டு செய்வது அல்ல! பணம் கொள்ளையடிப்பது!

பொறுத்திருந்து பார்ப்போம்!  என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போம்!

அடுத்து எந்த மாநிலம்?