Saturday 1 August 2020

ஆபத்தை விலைக்கு வாங்காதீர்கள்!

ஆபத்தை விலைக்கு வாங்காதீர்கள் என்று அரசாங்கத்தோடு சேர்ந்து நாமும் எச்சரிக்கை விடுக்க வேண்டியுள்ளது!

கொரோனா தொற்று நோய் கட்டுக்குள் வர வேண்டும்.  முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். நாம் அனைவருமே அதை விரும்புகிறோம்.

ஆனாலும் பொது இடங்களிலும் நாம் பார்க்கும் போது முகக்கவசம் அணியாது சுற்றிக் கொண்டிருக்கிறோம்! சமூக இடைவெளியை யாரும் பின்பற்றுவதில்லை!

நாம் குறைந்தபட்சமாக முகக்கவசம் அணிவதையாவது கடைப்பிடிக்க வேண்டும்  இதிலே படித்தவர் படிக்காதவர் என்கிற வேறுபாடுகள் எல்லாம் ஒன்றுமில்லை. அனைவருமே மந்தைகளைப் போல செயல்படுகிறோம்!

கட்டுப்பாடுகள் என்றால் நமக்குப் பிடிப்பதில்லை.  நமது உயிரைப்பற்றி நமக்குக் கவலையில்லாமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்களின் உயிர்களைப்பற்றி நாம் கவலைப்படத்தான் வேண்டும். ஒரு வேளை நாம் செத்தால் கவலைப்பட யாருமில்லாமல் இருக்கலாம் அதற்காக  மற்றவர்கள் உயிரை விட வேண்டும் என்கிற அவசியமில்லை. அனைவருக்கும் குடும்பம் உண்டு. குழந்தை குட்டிகள் உண்டு. இவர்களையெல்லாம் விட்டுவிட்டு உயிரை விட முடியாது.

கொரோனாவின்  பாதிப்பைப் பற்றி நாம் சரியாக அறியவில்லை. நம் குடும்பத்தில் அதன் பாதிப்பு ஏற்படாத வரை நம்மால் அதனைப் புரிந்து கொள்ள முடியாது.  அதற்காக பாதிப்பு வர வேண்டும் என்று சொல்ல முடியுமா?  வேண்டாம்! யாருக்கும் எந்த பாதிப்பு வேண்டாம்!

எத்தனை எத்தனை பிள்ளைகள் இன்று அனாதைகளாகி விட்டனர் என்பது தெரியுமா?  நாம் அது பற்றி அக்கறை காட்டுவதில்லை! தெரிந்த கொள்ள முயற்சி செய்வதில்லை!

நண்பர்களே! நீங்கள் பெரிதாக ஒன்றையும் செய்ய வேண்டாம்.  கொஞ்ச கட்டுப்பாடு, அவ்வளவு தான்!

நமது சுகாதாரத் துறை சொல்லுவதைக் கேளுங்கள். இன்றைய நிலையில் அவர்கள் சொல்லுவதெல்லாம் முகக்கவசம் அணியுங்கள் என்பது தான்.   அத்தோடு நாம் செய்ய வேண்டியது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.  தேவை இல்லாமல் வெளியே சுற்ற வேண்டாம். .  கூட்டமான இடங்களைத் தவிர்த்து விட வேண்டும். இதெல்லாம் சுயக் கட்டுப்பாடு.

கொரோனா 19 பாதிப்பு என்பதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.  நோயைத் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறிக் கொண்டிருக்கின்றன.  அதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை.

அதனால் நாம் சுகாரத்துறையோடு ஒத்துழைப்போம்.  ஆபத்து என்று தெரிந்தும் அதனைச் சீண்டிப் பார்க்க வேண்டாம்.

ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம்!

No comments:

Post a Comment