Saturday, 3 October 2020

ஓநாய் அழுகிறது!

 ஆடு நினைகிறதே என்று ஓநாய் அழுததாம் என்பதாக ஒரு ஓநாய் பழமொழி!

அம்னோ இளைஞர் தலைவர் இப்போது தான் தூக்கத்திலிருந்து விழித்திருக்கிறார் போல!  

சபா-வில் நடந்த தேர்தலையே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனாலும்  தேர்தல் நடந்தது. அதுவும் அரைகுறையான அரசாங்கத்தைக் கொண்டிருக்கிறது!  தேர்தலில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டப்பட்டதாக இப்போது செய்திகள் வெளியாகின்றன! 

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.  கொரோனா தொற்று இப்போது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாட்டில் பரவிக் கொண்டிருக்கிறது. எல்லாம் அரசியல்வாதிகள் செய்த கொடூரங்கள்! சபா தேர்தல் கொண்டு வந்த சீதனங்கள்!

இப்போது தான் அம்னோ இளைஞர் தலைவர் காணாததைக் கண்டு விட்டது போல் துள்ளிக் குதித்திருக்கிறார்! 

ஆமாம், புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும் திட்டத்தை அன்வார் ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நல்ல வேளை! தேர்தலை இப்போதே வையுங்கள் என்று கேட்டுக் கொள்ளவில்லை!  காரணம் அவர்களுக்குத் தீடீர் தேர்தல் தான் முக்கியம் என்பதாக ஒவ்வொரு நிமிடமும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள்! கொரோனா வந்தால் எத்தனை வேட்பாளர்கள் அதில் சிக்குவார்களோ என்கிற பயம் இப்போது தான் வந்திருக்கிறது!

கொரோனா தொற்றினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. அதனை நாம் விரும்பவில்லை.

ஆனால் அதனை அம்னோ இளைஞர் தலைவர் சொல்லுகிறார் என்றால் அதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறதோ என்கிற எண்ணம் எழத்தான் செய்கிறது!

புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும் திட்டம் என்றால் பெரிய புரட்சி எல்லாம் ஏற்படப்போவதில்லை! ஆயிரக்கணக்கான மக்கள் கூடப் போவதில்லை! எல்லாம் உள் அரங்கத்தில் நடக்கப்போகிற சடங்குகள். அதனை ஏதோ ஒரு மாபெரும் நிகழ்வாக காட்டிக் கொள்ள அவசியமில்லை. இந்த கொரோனா காலத்தில் பதவியேற்பை மிக எளிமையாக செய்தாலே போதும்.  

நிலையற்ற ஓர் அரசாங்கத்தை நாம் கொண்டிருக்கிறோம். நல்லதொரு வழிகாட்டுதல் இன்றி நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது! பயமுறுத்தல் நாடகம் தொடர்கிறது.  பிரதமர் முகைதீன் தடுமாறுகிறார்! எப்படி அரசாங்கம் இயந்திரம் சுமுகமாக இயங்கும்?

ஆடு நனையட்டும்! ஓநாய் அழுவட்டும்!  மாற்றம் நிகழட்டும்!

Friday, 2 October 2020

குழப்பத்தில் இருக்கிறாரோ!

 சமீபகாலமாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் மிகவும் குழப்பத்தில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்!

அவர் கடைசியாக அன்வார் இப்ராகிமைப் பற்றிப் பேசியிருப்பதைப் பார்க்கின்ற போது கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் முன்னும் பின்னும் முரணாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது!

அன்வார் சிறையிலிருந்து வேளியான பின்னர் தன்னைச் சந்திக்க வரவில்லை என்று கூறியிருப்பது ஏன் என்று நமக்குப் புரியவில்லை!  இதிலும் ஏதோ உள்நோக்கம் இருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

எத்தனை முறை அன்வார் அவரைச் சந்தித்தார் என்கிற சரியான கணக்கு நம்மிடம் இல்லை. ஆனால் அவர் சந்தித்த போதெல்லாம் அந்த சந்திப்பு பற்றி நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின என்பதை நாம் அறிவோம்.

அன்வார் ஒரு நன்றி கெட்ட மனிதர் என்பதாகவே டாக்டர்  மகாதிர் சொல்லி வருகிறார் என்றே நான் நினைக்கிறேன். இவருக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் பேசுவார் என்பது நமக்குத் தெரியும்.

ஒன்று நமக்குத் தெளிவாகத் தெரியும்.  அன்வார் இப்ராகிம், டாக்டர் மகாதிருக்கு தொடர்ந்தாற் போல மதிப்பும் மரியாதையும் கொடுத்து வந்தவர். அன்வாருக்கு ஏற்பட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் டாக்டர் மகாதீரே காரணம் என்பது மக்களுக்குத் தெரியும்.

இருப்பினும்,  தனது பிரச்சனைகளுக்கு, மகாதீரே காரணம் என்று தெரிந்தும்  சென்ற தேர்தலில் அவருடன் கைகோர்த்தவர் அன்வார். அதை நாம் மறந்து விட முடியாது. ஒன்றா, இரண்டா எத்துணைப் பிரச்சனைகளை டாக்டர் மகாதீர் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.  அப்படி இருந்தும் கூட நாட்டின் நலன் கருதி அன்வார் தனது ஒத்துழுப்பை அவருக்குக் கொடுத்திருக்கிறார் என்பது நாடறியும்.

இந்த நிலையில் டாக்டர் மகாதிர் கொஞ்சம் கூட மனசாட்சியின்றி  அன்வாரை தரம் தாழ்த்தி பேசிக் கொண்டிருப்பது நமக்கு வியப்பைக் கொடுக்கிறது. 

இன்றைய அரசியல் குழப்பத்துக்குக் காரண கர்த்தாவே டாக்டர் மகாதிர் தான். தனது குற்றத்தை மறைக்க யார் யாரையோ இப்போது குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்! 

சென்றப் பொதுத் தேர்தலின் போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி டாக்டர் மகாதிர்  செயல்பட்டிருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டிருக்க நியாயம் இல்லை.  அவர் அப்படி செய்யவில்லை. முடிந்தவரை அவர் இழுத்துக் கொண்டே போனார். பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்கும் நோக்கம் அவரிடம் அறவே இல்லை என்பது பிறகு தான் தெரிந்தது.

அப்போது ஏற்பட்ட  குழப்பத்தில் பதவியை இழந்தார்!  எதிர்பாராத மாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்தன.  பதவியை இழந்த பின்னர் இப்போது ஏதேதோ சொல்லிக் கொண்டு புலம்புகிறார்!

என்ன செய்வது?  யாரையும் குற்றம் சொல்லுவதில் புண்ணியமில்லை. எல்லாம் கை மீறிப் போய்விட்டன!

இப்போது டாக்டர் மகாதிர் என்ன செய்யலாம்?  ஒன்றுமே செய்ய வேண்டாம்! அவர் என்ன சொன்னாலும் எதுவும் எடுபடாது! யாரும் அவரைச் சட்டைச் செய்யப் போவதில்லை!  ஒரு வயதானவரின் உளறல் என்பதைத்  தவிர யாரும் அவர் சொல்லுவதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!

கௌரவமான முறையில்  அவர் விலகி இருக்கலாம்.  அது நடக்கவில்லை. இனி நடக்கவும் வாய்ப்பில்லை. 

அவர் பேசாமல் இருந்தாலே போதும்! அது தான் அவருக்கு மரியாதை! அவருக்குக் குழப்பமே வேண்டாம்! எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. அந்த முடிவில் எந்த குழப்பமும் இருக்காது!

Thursday, 1 October 2020

ஏன் இந்த குழப்பம்?

 நம் நாட்டில் ஏதோ ஓரு மகா பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் சில அரசியல்வாதிகள்!

ஒரு பக்கம் உடனடித் தேர்தல் நடத்த வேண்டுமென்று அழுகுரல்!  அவர்களுக்குத் தான் இப்போது வய்ற்றுவலி அதனால் இப்போதே "தேர்தல், தேர்தல்" என்று அமர்க்களப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.

இன்னொரு பக்கம் இப்போது தேர்தல் வேண்டாம். காரணம் கொரோனா தொற்று நோய். அதிலிருந்து விடுபட வேண்டும் என்கிற எச்சரிக்கை ஒரு பக்கம். 

இன்னொரு பக்கம் தீடீர்த் தேர்தல் நடத்தி கோடிக் கணக்கில் பணத்தை வீணடிக்க வேண்டுமா என்கிற குரல் எங்கள் பக்கத்திலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது! 

தேர்தல் நடத்த வேண்டுமென்று யார் அதிக அக்கறை காட்டுகிறார்கள்?  சொல்ல வேண்டியதே இல்லை! சாட்சாத் அம்னோ கட்சியினர் தான்! இப்போது அவர்களுக்கு நல்ல நேரம் என்று கணித்து வைத்திருக்கிறார்கள்! கொரோனா பற்றி அவர்கள் கவலைப்படவில்லை!  கோடிக்கணக்கில் பணம் செலவு ஆகிறதே என்கிற கவலையில்லை!

அப்படி அவசியம் நடத்தித்தான் ஆக வேண்டும் என்று நினைத்தால் இன்றைய நிலையில் அம்னோ தரப்பு தான் கொள்ளையடித்து பணத்தைச் சேர்த்து வைத்திருக்கிறார்கள்! அவர்களின் முன்னாள் தலைவரிடம் இல்லாத பணமா? கொண்டு வந்து கொட்டலாமே!  கொரோனா வந்தால் என்ன, மக்கள் செத்தால் என்ன?

மக்களைப் பற்றி அம்னோ அல்லது ம.இ.கா.வோ எந்த காலத்தில் கவலைப் பட்டிருக்கிறார்கள் என்கிற கேள்வியெல்லாம் எழுவது சகஜம் தானே!  ஆனால் ஒன்று ம.இ.காவினர் இப்போது தேர்தல் வேண்டாமென்று தான் சொல்லி வருகின்றனர்.  அவர்களுக்கு இப்போது நேரம் சரியில்லை. அப்படியே அவர்கள் அதனை தொடர்ந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்! 

சமீபத்தில் சபா தேர்தல் மூலம் மேற்கு மலேசியாவில் இன்னும் பலருக்குக் கொரோனா தொற்று பரவிக் கொண்டு வருகிறது. மக்கள் பலர் தங்களது வேலைகளை இழந்து வருகின்றனர். பிழைப்புக்கே பிரச்சனை.

இந்த நேரத்தில் தேர்தலா முக்கியம்? தேர்தல் முக்கியம் என்று சொல்லுபவர்கள் வயிற்றை எப்போதும்,  எந்நேரமும் நிரப்பி வைத்திருப்பவர்கள்! அவர்களுக்காக தேர்தலா? மக்களுக்காக தேர்தலா?

தேர்தல் வேண்டாம்!  இது சரியான தருணம் அல்ல! மக்களுக்குத் தேவையானதைச் செய்யுங்கள்! அது தான் வேண்டும்!

அரசியல்வாதிகளே கொஞ்சம் பொறுங்கள்.  காலம் வரும் அப்போது உங்களது வீர தீரத்தைக் காட்டுங்கள்!  இப்போது வேண்டாம்!