Thursday 1 October 2020

ஏன் இந்த குழப்பம்?

 நம் நாட்டில் ஏதோ ஓரு மகா பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் சில அரசியல்வாதிகள்!

ஒரு பக்கம் உடனடித் தேர்தல் நடத்த வேண்டுமென்று அழுகுரல்!  அவர்களுக்குத் தான் இப்போது வய்ற்றுவலி அதனால் இப்போதே "தேர்தல், தேர்தல்" என்று அமர்க்களப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.

இன்னொரு பக்கம் இப்போது தேர்தல் வேண்டாம். காரணம் கொரோனா தொற்று நோய். அதிலிருந்து விடுபட வேண்டும் என்கிற எச்சரிக்கை ஒரு பக்கம். 

இன்னொரு பக்கம் தீடீர்த் தேர்தல் நடத்தி கோடிக் கணக்கில் பணத்தை வீணடிக்க வேண்டுமா என்கிற குரல் எங்கள் பக்கத்திலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது! 

தேர்தல் நடத்த வேண்டுமென்று யார் அதிக அக்கறை காட்டுகிறார்கள்?  சொல்ல வேண்டியதே இல்லை! சாட்சாத் அம்னோ கட்சியினர் தான்! இப்போது அவர்களுக்கு நல்ல நேரம் என்று கணித்து வைத்திருக்கிறார்கள்! கொரோனா பற்றி அவர்கள் கவலைப்படவில்லை!  கோடிக்கணக்கில் பணம் செலவு ஆகிறதே என்கிற கவலையில்லை!

அப்படி அவசியம் நடத்தித்தான் ஆக வேண்டும் என்று நினைத்தால் இன்றைய நிலையில் அம்னோ தரப்பு தான் கொள்ளையடித்து பணத்தைச் சேர்த்து வைத்திருக்கிறார்கள்! அவர்களின் முன்னாள் தலைவரிடம் இல்லாத பணமா? கொண்டு வந்து கொட்டலாமே!  கொரோனா வந்தால் என்ன, மக்கள் செத்தால் என்ன?

மக்களைப் பற்றி அம்னோ அல்லது ம.இ.கா.வோ எந்த காலத்தில் கவலைப் பட்டிருக்கிறார்கள் என்கிற கேள்வியெல்லாம் எழுவது சகஜம் தானே!  ஆனால் ஒன்று ம.இ.காவினர் இப்போது தேர்தல் வேண்டாமென்று தான் சொல்லி வருகின்றனர்.  அவர்களுக்கு இப்போது நேரம் சரியில்லை. அப்படியே அவர்கள் அதனை தொடர்ந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்! 

சமீபத்தில் சபா தேர்தல் மூலம் மேற்கு மலேசியாவில் இன்னும் பலருக்குக் கொரோனா தொற்று பரவிக் கொண்டு வருகிறது. மக்கள் பலர் தங்களது வேலைகளை இழந்து வருகின்றனர். பிழைப்புக்கே பிரச்சனை.

இந்த நேரத்தில் தேர்தலா முக்கியம்? தேர்தல் முக்கியம் என்று சொல்லுபவர்கள் வயிற்றை எப்போதும்,  எந்நேரமும் நிரப்பி வைத்திருப்பவர்கள்! அவர்களுக்காக தேர்தலா? மக்களுக்காக தேர்தலா?

தேர்தல் வேண்டாம்!  இது சரியான தருணம் அல்ல! மக்களுக்குத் தேவையானதைச் செய்யுங்கள்! அது தான் வேண்டும்!

அரசியல்வாதிகளே கொஞ்சம் பொறுங்கள்.  காலம் வரும் அப்போது உங்களது வீர தீரத்தைக் காட்டுங்கள்!  இப்போது வேண்டாம்!

No comments:

Post a Comment