சமீபகாலமாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் மிகவும் குழப்பத்தில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்!
அவர் கடைசியாக அன்வார் இப்ராகிமைப் பற்றிப் பேசியிருப்பதைப் பார்க்கின்ற போது கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் முன்னும் பின்னும் முரணாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது!
அன்வார் சிறையிலிருந்து வேளியான பின்னர் தன்னைச் சந்திக்க வரவில்லை என்று கூறியிருப்பது ஏன் என்று நமக்குப் புரியவில்லை! இதிலும் ஏதோ உள்நோக்கம் இருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
எத்தனை முறை அன்வார் அவரைச் சந்தித்தார் என்கிற சரியான கணக்கு நம்மிடம் இல்லை. ஆனால் அவர் சந்தித்த போதெல்லாம் அந்த சந்திப்பு பற்றி நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின என்பதை நாம் அறிவோம்.
அன்வார் ஒரு நன்றி கெட்ட மனிதர் என்பதாகவே டாக்டர் மகாதிர் சொல்லி வருகிறார் என்றே நான் நினைக்கிறேன். இவருக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் பேசுவார் என்பது நமக்குத் தெரியும்.
ஒன்று நமக்குத் தெளிவாகத் தெரியும். அன்வார் இப்ராகிம், டாக்டர் மகாதிருக்கு தொடர்ந்தாற் போல மதிப்பும் மரியாதையும் கொடுத்து வந்தவர். அன்வாருக்கு ஏற்பட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் டாக்டர் மகாதீரே காரணம் என்பது மக்களுக்குத் தெரியும்.
இருப்பினும், தனது பிரச்சனைகளுக்கு, மகாதீரே காரணம் என்று தெரிந்தும் சென்ற தேர்தலில் அவருடன் கைகோர்த்தவர் அன்வார். அதை நாம் மறந்து விட முடியாது. ஒன்றா, இரண்டா எத்துணைப் பிரச்சனைகளை டாக்டர் மகாதீர் அவருக்குக் கொடுத்திருக்கிறார். அப்படி இருந்தும் கூட நாட்டின் நலன் கருதி அன்வார் தனது ஒத்துழுப்பை அவருக்குக் கொடுத்திருக்கிறார் என்பது நாடறியும்.
இந்த நிலையில் டாக்டர் மகாதிர் கொஞ்சம் கூட மனசாட்சியின்றி அன்வாரை தரம் தாழ்த்தி பேசிக் கொண்டிருப்பது நமக்கு வியப்பைக் கொடுக்கிறது.
இன்றைய அரசியல் குழப்பத்துக்குக் காரண கர்த்தாவே டாக்டர் மகாதிர் தான். தனது குற்றத்தை மறைக்க யார் யாரையோ இப்போது குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்!
சென்றப் பொதுத் தேர்தலின் போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி டாக்டர் மகாதிர் செயல்பட்டிருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டிருக்க நியாயம் இல்லை. அவர் அப்படி செய்யவில்லை. முடிந்தவரை அவர் இழுத்துக் கொண்டே போனார். பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்கும் நோக்கம் அவரிடம் அறவே இல்லை என்பது பிறகு தான் தெரிந்தது.
அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் பதவியை இழந்தார்! எதிர்பாராத மாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்தன. பதவியை இழந்த பின்னர் இப்போது ஏதேதோ சொல்லிக் கொண்டு புலம்புகிறார்!
என்ன செய்வது? யாரையும் குற்றம் சொல்லுவதில் புண்ணியமில்லை. எல்லாம் கை மீறிப் போய்விட்டன!
இப்போது டாக்டர் மகாதிர் என்ன செய்யலாம்? ஒன்றுமே செய்ய வேண்டாம்! அவர் என்ன சொன்னாலும் எதுவும் எடுபடாது! யாரும் அவரைச் சட்டைச் செய்யப் போவதில்லை! ஒரு வயதானவரின் உளறல் என்பதைத் தவிர யாரும் அவர் சொல்லுவதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!
கௌரவமான முறையில் அவர் விலகி இருக்கலாம். அது நடக்கவில்லை. இனி நடக்கவும் வாய்ப்பில்லை.
அவர் பேசாமல் இருந்தாலே போதும்! அது தான் அவருக்கு மரியாதை! அவருக்குக் குழப்பமே வேண்டாம்! எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. அந்த முடிவில் எந்த குழப்பமும் இருக்காது!
No comments:
Post a Comment