Saturday 3 October 2020

ஓநாய் அழுகிறது!

 ஆடு நினைகிறதே என்று ஓநாய் அழுததாம் என்பதாக ஒரு ஓநாய் பழமொழி!

அம்னோ இளைஞர் தலைவர் இப்போது தான் தூக்கத்திலிருந்து விழித்திருக்கிறார் போல!  

சபா-வில் நடந்த தேர்தலையே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனாலும்  தேர்தல் நடந்தது. அதுவும் அரைகுறையான அரசாங்கத்தைக் கொண்டிருக்கிறது!  தேர்தலில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டப்பட்டதாக இப்போது செய்திகள் வெளியாகின்றன! 

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.  கொரோனா தொற்று இப்போது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாட்டில் பரவிக் கொண்டிருக்கிறது. எல்லாம் அரசியல்வாதிகள் செய்த கொடூரங்கள்! சபா தேர்தல் கொண்டு வந்த சீதனங்கள்!

இப்போது தான் அம்னோ இளைஞர் தலைவர் காணாததைக் கண்டு விட்டது போல் துள்ளிக் குதித்திருக்கிறார்! 

ஆமாம், புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும் திட்டத்தை அன்வார் ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நல்ல வேளை! தேர்தலை இப்போதே வையுங்கள் என்று கேட்டுக் கொள்ளவில்லை!  காரணம் அவர்களுக்குத் தீடீர் தேர்தல் தான் முக்கியம் என்பதாக ஒவ்வொரு நிமிடமும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள்! கொரோனா வந்தால் எத்தனை வேட்பாளர்கள் அதில் சிக்குவார்களோ என்கிற பயம் இப்போது தான் வந்திருக்கிறது!

கொரோனா தொற்றினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. அதனை நாம் விரும்பவில்லை.

ஆனால் அதனை அம்னோ இளைஞர் தலைவர் சொல்லுகிறார் என்றால் அதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறதோ என்கிற எண்ணம் எழத்தான் செய்கிறது!

புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும் திட்டம் என்றால் பெரிய புரட்சி எல்லாம் ஏற்படப்போவதில்லை! ஆயிரக்கணக்கான மக்கள் கூடப் போவதில்லை! எல்லாம் உள் அரங்கத்தில் நடக்கப்போகிற சடங்குகள். அதனை ஏதோ ஒரு மாபெரும் நிகழ்வாக காட்டிக் கொள்ள அவசியமில்லை. இந்த கொரோனா காலத்தில் பதவியேற்பை மிக எளிமையாக செய்தாலே போதும்.  

நிலையற்ற ஓர் அரசாங்கத்தை நாம் கொண்டிருக்கிறோம். நல்லதொரு வழிகாட்டுதல் இன்றி நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது! பயமுறுத்தல் நாடகம் தொடர்கிறது.  பிரதமர் முகைதீன் தடுமாறுகிறார்! எப்படி அரசாங்கம் இயந்திரம் சுமுகமாக இயங்கும்?

ஆடு நனையட்டும்! ஓநாய் அழுவட்டும்!  மாற்றம் நிகழட்டும்!

No comments:

Post a Comment