Wednesday, 4 November 2020

எங்கே போனது இந்த திறமை?

 முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இப்போதெல்லாம் அடிக்கடி பத்திரிக்கைகளில் காணப்படுகிறார்!  அதுவே ஆச்சரியம் தான்!

ஆனாலும் இத்தனை திறமை உள்ள இவர் தனது ஆட்சி காலத்தில் எங்கே போனார் என்பதும்  கேட்க வேண்டிய ஒரு கேள்வி. 

அப்போதெல்லாம் தனது திறமைகளை எங்கோ ஒளித்து வைத்து விட்டு இப்போது அளவுக்கு அதிகமாகவே தனது திறமைகளை வெளிக் கொணர்கிறார்! 

அதுவும் இன்றைய முகைதீன் யாசின் ஆட்சியில் அல்லது பெரிகாத்தான் ஆட்சியில் அவரது குரல் கொஞ்சம் அதிகமாகவே ஒலிக்கிறது! 

"என்னை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது!"  என்னும் பாணியில் அவர் அடிக்கடி பேசி  வருகிறார்.

இப்படி ஒரு தைரியம் அவருக்கு எங்கிருந்து வந்தது? இப்போது  "முகைதீனின் குடுமி என் கையில்!" என்பதால் அவருடைய தைரியம் எல்லாரையும் மிஞ்சி விட்டது. எப்படியோ அவருக்குச்  சிறைவாசம் கிடைக்கப் போவதில்லை. அது ஒன்றே போதும், அதுவே அவருக்கு வெற்றி!

உலகிலேயே ஒரு நாட்டின் பிரதமர் என்னன்ன செய்யக் கூடாதோ அதனையெல்லாம் செய்தவர் அவர். ஒரு நாட்டை எப்படியெல்லாம் வழி நடத்தக் கூடாதோ அப்படி எல்லாம் வழி நடத்தி நாட்டையே அழிவு பாதைக்குக் கொண்டு சென்றவர் அவர். அப்படியிருந்தும் ஆட்சி தனது பக்கம் என்பதால் இப்போது எல்லாக் குற்றச்சாட்டுகளுமே தூசி என்கிற நிலைமைக்கு வந்துவிட்டது!

இப்போதெல்லாம் தைரியமாக மற்றவர்களைக் குறை சொல்லுகிறார்! மற்றவர்களைக் கிண்டலடிக்கிறார்!  மற்றவர்களுக்குச் சவால் விடுகிறார்! மற்றவர்களுக்குப் புத்தி சொல்லுகிறார்! புத்தியுள்ளவர் போல நடந்து கொள்ளுகிறார்! இப்போது கூட டாக்டர் மகாதிரை "வா! பேசலாம்!" என்கிறார்!  

பல வழிகளில் "நான் திறமையானவன்!" என்பதை அடிக்கடி மக்களுக்கு,  குறிப்பாக மலாய்க்காரர்களுக்கு, நினைவுறுத்துகிறார்! 

நம்மிடம் உள்ளது ஒரே கேள்வி தான். நீங்கள் ஆட்சியிலிருந்த போது  நீங்கள் எங்கே போனீர்கள் என்பது மட்டும் தான். அப்போது உங்கள் திறமைகள் எல்லாம் சமையல்கட்டுக்குத் தான் பயன்பட்டது. நாட்டுக்கு ஏன் பயன்படவில்லை என்பதைத் தானே நாங்கள் கூறி வந்தோம்! 

இப்போது உங்களுக்கு ஆட்சி  சாதகம் என்பதால் உங்களுடைய அதிபுத்திசாலைத்தனத்தை எல்லாம் காட்டி வருவது பொது மக்களுக்கு அது வியப்புக்குரியது தானே!

பரவாயில்லை!  மக்களுக்குப் புத்தி இல்லை என்றால்  நீங்கள் தான் வருங்காலங்களில் முன்னணியில் இருப்பீர்கள்! மக்கள் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள்!

அதுவரை உங்கள் "திறமையை"ப் பாராட்டுகிறோம்

Tuesday, 3 November 2020

இது என்ன சாபமா?

இது என்ன சாபமா என்பது புரியவில்லை!

ஏதோ ஒன்று இரண்டு சம்பவங்கால் நடந்தால் பரவாயில்லை எனலாம். ஆனால் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தால் என்ன சொல்லுவது?

சபிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்தே  தலைவர்கள் வருவார்கள் என்றால், அதுவும் தொடர்ந்து என்றால், நாம் யாரை நோவுவது?

அரசாங்கத்தால்  இந்தியர்களுக்கென்று  ஒதுக்கப்பட்ட பணம் இந்தியர்களுக்குப் போய்ச் சேரவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. அது எப்படி முடிகிறது என்பது தான் நமக்குப் புரியாத புதிராகவே  இருக்கிறது.

பாரிசான் கட்சி ஆட்சியில் இருந்த போது "செடிக்" என்கிற ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதாக ஆரம்பிக்கப்பட்டது தான் "செடிக்". ஆனால் பின்னர் வந்த குற்றச்சாட்டுக்களோ நம்மையே வியக்க வைத்தது. பெருந்தன்மையோடு யார் அள்ளிக் கொடுத்தாரோ அவருக்கே அந்த பணத்தைக் கொண்டு போய் சேர்த்து விட்டார்கள் என்பது செய்தி!  அதாவது வேலியே 'செடி' க்கை  மேய்ந்துவிட்டது!

ஆக "செடிக்" மூலம் பல கோடீசுவரர்களை நிர்மூலம் ஆக்கிவிட்டோம்!

அதன்  பிறகு வாராது வந்த மாமணி பக்காத்தான் ஆட்சி.  ஓர் இரண்டு ஆண்டுகள் நீடித்தது.  வந்த வேகத்தில் அவர்கள் "செடிக்" பெயரை மாற்றினார்கள்.  பெயரை மாற்றி "மித்ரா" என்று  வைத்தார்கள். 

பக்காத்தான் ஆட்சி கவிழ்ந்தது. அந்த ஆட்சி கவிழும் முன்னரே  "மித்ரா" வைப் பற்றி பலவிதமாக பேசப்பட்டன. எதுவும் சரியாக இல்லை! 

இப்போது எழும் கேள்வி. "மித்ரா" விடம் ஒப்படைக்கப்பட்ட கோடிகள் பத்ரமாக இருக்கிறதா அல்லது அதுவும் மீண்டும் அரசாங்கத்திடமே அடைக்கலமாகி விட்டதா? என்பது தான்!

பத்திரமாக இருக்க வழி இல்லை! பத்திரமாக இருந்தது என்றால் "மித்ரா" இரண்டு ஆண்டுகளாக செயல்படவில்லை என்பது தான் பொருள். அப்படி இருக்க நியாயமில்லை.  அதன் பொறுப்பாளராக இருந்த அமைச்சர்  பொன்.வேதமூர்த்தி சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்திருப்பார்  எனறு சொல்ல முடியாது!

ஆனால் இப்போது, இன்றைய "மித்ரா" வின் நிலை என்ன என்பது நமக்குத் தெரியவில்லை. இப்போதைய ஆட்சி புதிது. புதிது மட்டும் அல்ல. இந்தியர் என்னும் பெயரில் இங்கு ஓர் இனம் இருப்பது கூட அறியாத ஓர் ஆட்சி. மற்ற இனத்தவர், மற்ற மதத்தினர் எல்லாம் தேவையற்றவர் என்று கருதும் ஓர் ஆட்சி.

இப்படிப்பட்ட ஓர் ஆட்சியில் "மித்ரா" இன்னும் உயிரோடு இருக்கிறதா என்பது கூட  நமக்குத் தெரியவில்லை.  தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை!

இதற்கெல்லாம் காரணம் என்ன? பணம் எதற்காகக் கொடுக்கப்பட்டது? அதன் நோக்கம் நிறைவேற்றப்பட்டதா என்பது தான்  கேள்வி. அந்தப் பணத்திற்குப் பொறுப்பு  எடுத்துக் கொண்டவர்கள் என்ன செய்தார்கள்? என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதவர்களா என்றால் "ஆமாம்!" அறியாதவார்கள் என்று தான் சொல்ல வேண்டும்!

அப்படி இல்லையென்றால் அந்தப் பணம் ஏன் அரசாங்கத்திடமே மீண்டும் செல்ல வேண்டும்?

பொருளாதார உயர்வுக்காக இந்தியர்கள் எந்தவித வங்கிக்கடனும் கிடைக்காமல் அல்லல்  படுகிறார்கள் என்பது அரசாங்கம் அறிந்திருக்கிறது. ஆனால் நமது தலைவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது தான் ஆச்சரியம்!

அதனால் தான் நமக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்துவிட்டது. சபிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து வந்தவர்களுக்கே பொறுப்புக்கள் கொடுக்கப்படுவதால் அதன் பயன் யாருக்கும் போய்ச் சேருவதில்லையோ என்கிற சந்தேகம்!

சாபம் என்பது ஏழு தலைமுறைகளுக்கு நீடிக்கும் என்பார்கள்.  ஆனால் முதல் தலைமுறையிலிலேயே அதன் அறிகுறிகள் நமக்குத்  தெரிந்துவிடும்.  ஆனால் அது சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு மட்டும் தான். பிற குடும்பங்களுக்கு அல்ல.

ஆனால் இந்த குடும்பங்கிலிலிருந்து சமுதாயத்திற்குத் தலைமை தாங்கினால் அது விளங்காது என்பது இப்போது நமக்குப் புரிகிறது!

Monday, 2 November 2020

நமது பழங்களுக்கு என்ன நேர்ந்தது?

 உலகம் பூராவும் இன்று கொரோனா தொற்று நோய் ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

நமது நாடும் விதிவிலக்கல்ல.  மூன்றாவது அலையில் இப்போது நாமும் அலைக்கழிக்கப்பட்டு  எங்கெங்கோ மோதிக் கொண்டிருக்கிறோம்! இந்த மூன்றாவது அலை என்பது நமது ஊர் ஆளும் அரசியல்வாதிகள் நமக்குப் பெருந்தன்மையாக வாரி வழங்கிய வைரம்!

அதை விடுவோம்.  நமது ஊர் உள்ளூர் பழங்களுக்கு என்ன வியாதியை அறிமுகப்படுத்தினார்களோ தெரியவில்லை! 

பொதுவாக எல்லாப் பழங்களும் ஏதோ ஒரு வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கின்றன என்பது நமக்குத் தெரிகிறது! ஆனால் தெரிய வேண்டியவர்களுக்குத் தெரியவில்லை என்பது தான் சோகம்!

மிகச் சாதாரண பழமாக நம்மிடையே அதிகம் சாப்பிடப்படுவது வாழைப்பழம். இன்னொன்று பப்பாளிப் பழம். 

இந்த பழங்களுக்கு என்ன வியாதியை உருவாக்கினர்களோ தெரியவில்லை  எதையும் சாப்பிடக் கூடிய நிலையில் இல்லை. வாழப்பழம் பாதி பழுத்தும், பாதி பழுக்காமலும்  கடை,களில் விற்கப்படுகின்றன. பப்பாளி பழங்களின் நிலையோ இன்னும் மோசம். ஒவ்வொரு பழமும் ஏதோ கரடுமுரடாக  இப்போது தான் அமேஸோன் காடுகளிலிருந்து வந்தவை போன்று தோற்றமளிக்கின்றன!   அதுவும் சாப்பிடுக்கூடிய அளவுக்குப் பழமாக இருந்தால் கூட மன்னித்து விடலாம்! என்னவோ அரைப்பழம். , முக்கால் பழம் = ஏதோ வெந்தும் வேகாமல் இருப்பது போல - இந்த பழங்கள் விற்கப்படுகின்றன!

ஏன் இந்த பழங்களின் நிலை இப்படி ஆகிவிட்டது?  யாரைக் குறை கூறூவது?  விவசாயிகளிடமிருந்து ஏன் இப்படி இந்த பழங்கள் தாறுமாறாக வெளியாகின்றன?

ரசாயனத்தைப் பயன்படுத்தி  பழங்களைப் பழுக்க வைக்கிறீர்களோ  என்று ஒரு சீனப் பெண்மணியிடம் கேட்ட போது அவர் மறுக்கிறார். இப்படிச் செய்தால் எங்களுக்கு இன்னும் அதிகம் செலவாகும் என்கிறார். 

எப்படியோ நமது பழங்களுக்கும் கொரோனா தொற்றை உருவாக்கிவிட்டார்கள்! எதுவும் சாப்பிடும்படியாக இல்லை. சீனர்கள் கைகளில் விவசாயம் போகும்போது இப்படியெல்லாம் நடக்கும் என்ப்து நமக்குத் தெரிந்ததுதான்!  ஆமாம், நேற்றுப் பொரித்த கோழிக்குஞ்சுகளையே பத்து நாள்களில் கோழிகளாக்கி விற்பனைக்குக் கொண்டுவருபவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையா!

இருந்தாலும் இதையெல்லாம் கட்டுப்படுவதற்குச் சட்டதிட்டங்கள் உள்ளன. இப்போது அது பற்றியெல்லாம் யாரும் அக்கறைக் காட்டுவதில்லை.

பார்ப்போம்! இதுதொடர்கிறதா என்று.

நோயுள்ள பழங்களைச் சாப்பிட்டு நம்மையும் நோயாளிகளாக்குவதில் அப்படி என்ன பெருமையோ!