Tuesday 3 November 2020

இது என்ன சாபமா?

இது என்ன சாபமா என்பது புரியவில்லை!

ஏதோ ஒன்று இரண்டு சம்பவங்கால் நடந்தால் பரவாயில்லை எனலாம். ஆனால் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தால் என்ன சொல்லுவது?

சபிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்தே  தலைவர்கள் வருவார்கள் என்றால், அதுவும் தொடர்ந்து என்றால், நாம் யாரை நோவுவது?

அரசாங்கத்தால்  இந்தியர்களுக்கென்று  ஒதுக்கப்பட்ட பணம் இந்தியர்களுக்குப் போய்ச் சேரவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. அது எப்படி முடிகிறது என்பது தான் நமக்குப் புரியாத புதிராகவே  இருக்கிறது.

பாரிசான் கட்சி ஆட்சியில் இருந்த போது "செடிக்" என்கிற ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதாக ஆரம்பிக்கப்பட்டது தான் "செடிக்". ஆனால் பின்னர் வந்த குற்றச்சாட்டுக்களோ நம்மையே வியக்க வைத்தது. பெருந்தன்மையோடு யார் அள்ளிக் கொடுத்தாரோ அவருக்கே அந்த பணத்தைக் கொண்டு போய் சேர்த்து விட்டார்கள் என்பது செய்தி!  அதாவது வேலியே 'செடி' க்கை  மேய்ந்துவிட்டது!

ஆக "செடிக்" மூலம் பல கோடீசுவரர்களை நிர்மூலம் ஆக்கிவிட்டோம்!

அதன்  பிறகு வாராது வந்த மாமணி பக்காத்தான் ஆட்சி.  ஓர் இரண்டு ஆண்டுகள் நீடித்தது.  வந்த வேகத்தில் அவர்கள் "செடிக்" பெயரை மாற்றினார்கள்.  பெயரை மாற்றி "மித்ரா" என்று  வைத்தார்கள். 

பக்காத்தான் ஆட்சி கவிழ்ந்தது. அந்த ஆட்சி கவிழும் முன்னரே  "மித்ரா" வைப் பற்றி பலவிதமாக பேசப்பட்டன. எதுவும் சரியாக இல்லை! 

இப்போது எழும் கேள்வி. "மித்ரா" விடம் ஒப்படைக்கப்பட்ட கோடிகள் பத்ரமாக இருக்கிறதா அல்லது அதுவும் மீண்டும் அரசாங்கத்திடமே அடைக்கலமாகி விட்டதா? என்பது தான்!

பத்திரமாக இருக்க வழி இல்லை! பத்திரமாக இருந்தது என்றால் "மித்ரா" இரண்டு ஆண்டுகளாக செயல்படவில்லை என்பது தான் பொருள். அப்படி இருக்க நியாயமில்லை.  அதன் பொறுப்பாளராக இருந்த அமைச்சர்  பொன்.வேதமூர்த்தி சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்திருப்பார்  எனறு சொல்ல முடியாது!

ஆனால் இப்போது, இன்றைய "மித்ரா" வின் நிலை என்ன என்பது நமக்குத் தெரியவில்லை. இப்போதைய ஆட்சி புதிது. புதிது மட்டும் அல்ல. இந்தியர் என்னும் பெயரில் இங்கு ஓர் இனம் இருப்பது கூட அறியாத ஓர் ஆட்சி. மற்ற இனத்தவர், மற்ற மதத்தினர் எல்லாம் தேவையற்றவர் என்று கருதும் ஓர் ஆட்சி.

இப்படிப்பட்ட ஓர் ஆட்சியில் "மித்ரா" இன்னும் உயிரோடு இருக்கிறதா என்பது கூட  நமக்குத் தெரியவில்லை.  தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை!

இதற்கெல்லாம் காரணம் என்ன? பணம் எதற்காகக் கொடுக்கப்பட்டது? அதன் நோக்கம் நிறைவேற்றப்பட்டதா என்பது தான்  கேள்வி. அந்தப் பணத்திற்குப் பொறுப்பு  எடுத்துக் கொண்டவர்கள் என்ன செய்தார்கள்? என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதவர்களா என்றால் "ஆமாம்!" அறியாதவார்கள் என்று தான் சொல்ல வேண்டும்!

அப்படி இல்லையென்றால் அந்தப் பணம் ஏன் அரசாங்கத்திடமே மீண்டும் செல்ல வேண்டும்?

பொருளாதார உயர்வுக்காக இந்தியர்கள் எந்தவித வங்கிக்கடனும் கிடைக்காமல் அல்லல்  படுகிறார்கள் என்பது அரசாங்கம் அறிந்திருக்கிறது. ஆனால் நமது தலைவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது தான் ஆச்சரியம்!

அதனால் தான் நமக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்துவிட்டது. சபிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து வந்தவர்களுக்கே பொறுப்புக்கள் கொடுக்கப்படுவதால் அதன் பயன் யாருக்கும் போய்ச் சேருவதில்லையோ என்கிற சந்தேகம்!

சாபம் என்பது ஏழு தலைமுறைகளுக்கு நீடிக்கும் என்பார்கள்.  ஆனால் முதல் தலைமுறையிலிலேயே அதன் அறிகுறிகள் நமக்குத்  தெரிந்துவிடும்.  ஆனால் அது சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு மட்டும் தான். பிற குடும்பங்களுக்கு அல்ல.

ஆனால் இந்த குடும்பங்கிலிலிருந்து சமுதாயத்திற்குத் தலைமை தாங்கினால் அது விளங்காது என்பது இப்போது நமக்குப் புரிகிறது!

No comments:

Post a Comment