Wednesday 4 November 2020

எங்கே போனது இந்த திறமை?

 முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இப்போதெல்லாம் அடிக்கடி பத்திரிக்கைகளில் காணப்படுகிறார்!  அதுவே ஆச்சரியம் தான்!

ஆனாலும் இத்தனை திறமை உள்ள இவர் தனது ஆட்சி காலத்தில் எங்கே போனார் என்பதும்  கேட்க வேண்டிய ஒரு கேள்வி. 

அப்போதெல்லாம் தனது திறமைகளை எங்கோ ஒளித்து வைத்து விட்டு இப்போது அளவுக்கு அதிகமாகவே தனது திறமைகளை வெளிக் கொணர்கிறார்! 

அதுவும் இன்றைய முகைதீன் யாசின் ஆட்சியில் அல்லது பெரிகாத்தான் ஆட்சியில் அவரது குரல் கொஞ்சம் அதிகமாகவே ஒலிக்கிறது! 

"என்னை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது!"  என்னும் பாணியில் அவர் அடிக்கடி பேசி  வருகிறார்.

இப்படி ஒரு தைரியம் அவருக்கு எங்கிருந்து வந்தது? இப்போது  "முகைதீனின் குடுமி என் கையில்!" என்பதால் அவருடைய தைரியம் எல்லாரையும் மிஞ்சி விட்டது. எப்படியோ அவருக்குச்  சிறைவாசம் கிடைக்கப் போவதில்லை. அது ஒன்றே போதும், அதுவே அவருக்கு வெற்றி!

உலகிலேயே ஒரு நாட்டின் பிரதமர் என்னன்ன செய்யக் கூடாதோ அதனையெல்லாம் செய்தவர் அவர். ஒரு நாட்டை எப்படியெல்லாம் வழி நடத்தக் கூடாதோ அப்படி எல்லாம் வழி நடத்தி நாட்டையே அழிவு பாதைக்குக் கொண்டு சென்றவர் அவர். அப்படியிருந்தும் ஆட்சி தனது பக்கம் என்பதால் இப்போது எல்லாக் குற்றச்சாட்டுகளுமே தூசி என்கிற நிலைமைக்கு வந்துவிட்டது!

இப்போதெல்லாம் தைரியமாக மற்றவர்களைக் குறை சொல்லுகிறார்! மற்றவர்களைக் கிண்டலடிக்கிறார்!  மற்றவர்களுக்குச் சவால் விடுகிறார்! மற்றவர்களுக்குப் புத்தி சொல்லுகிறார்! புத்தியுள்ளவர் போல நடந்து கொள்ளுகிறார்! இப்போது கூட டாக்டர் மகாதிரை "வா! பேசலாம்!" என்கிறார்!  

பல வழிகளில் "நான் திறமையானவன்!" என்பதை அடிக்கடி மக்களுக்கு,  குறிப்பாக மலாய்க்காரர்களுக்கு, நினைவுறுத்துகிறார்! 

நம்மிடம் உள்ளது ஒரே கேள்வி தான். நீங்கள் ஆட்சியிலிருந்த போது  நீங்கள் எங்கே போனீர்கள் என்பது மட்டும் தான். அப்போது உங்கள் திறமைகள் எல்லாம் சமையல்கட்டுக்குத் தான் பயன்பட்டது. நாட்டுக்கு ஏன் பயன்படவில்லை என்பதைத் தானே நாங்கள் கூறி வந்தோம்! 

இப்போது உங்களுக்கு ஆட்சி  சாதகம் என்பதால் உங்களுடைய அதிபுத்திசாலைத்தனத்தை எல்லாம் காட்டி வருவது பொது மக்களுக்கு அது வியப்புக்குரியது தானே!

பரவாயில்லை!  மக்களுக்குப் புத்தி இல்லை என்றால்  நீங்கள் தான் வருங்காலங்களில் முன்னணியில் இருப்பீர்கள்! மக்கள் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள்!

அதுவரை உங்கள் "திறமையை"ப் பாராட்டுகிறோம்

No comments:

Post a Comment