Sunday, 8 November 2020

இது பழமையா புதுமையா?

 இன்று தொலைக்காட்சியில் பார்த்த ஒரு பெயர் எனது கவனத்தை மிகவும் ஈர்த்தது!

இப்படியெல்லாம் இன்னும் பெயர்கள் வைக்கப்படுகின்றனவா என்று ஓர் அதிர்ச்சி தான் ஏற்பட்டது! ஆனாலும் தமிழர்கள் இன்னும் பழமையைப் போற்றுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அது பெருமையே!

நான் இதுவரை கேள்விப்படாத அந்த பெயர் தான் "சோழச்சி",  தமிழ் நாடு, காரைக்குடி பக்கம் என்று தெரிந்து கொண்டேன்.  அதோடு இன்னொன்றும் எனது ஞாபகத்திற்கு வந்தது.    சோழச்சி என்று ஒரு பெயர் இருந்தால் சேரச்சி (சேரன்),  பாண்டிச்சி (பாண்டியன்) என்கிற பெயர்களும் இருக்கக் கூடும். தெரியவில்லை! இப்படியெல்லாம் பெயர்கள் வைக்கப்படுகிறது என்றால் அந்த மக்களிடையே கலாச்சாரம், பண்பாடு என்பது இரத்தத்தில் ஊறிப்போன விஷயம் என்பதை  நாம் அறிந்து கொள்ளலாம்.

நமது நாட்டில் இப்படியெல்லாம், தங்களைத் தமிழர்கள் என்று  அடையாளப்படுத்திக் கொள்வது  சாத்தியமா என்பது தெரியவில்லை. நம்மிடையே கலாச்சாரம், பண்பாடு என்பதை மறந்து போனோமோ என்பது இன்னும் புதிராகத் தான் இருக்கிறது!

தமிழர்களில் கிறிஸ்துவர்கள் கணிசமான அளவில் இருக்கின்றனர். அவர்களில் பலர் வெள்ளைக்கார  அடையாளத்தோடு தான் இருக்கின்றனர். அதில் அவர்கள் பெருமைப்படுகின்றனர். தனது அடையாளாத்தை தொலைப்பதில் என்ன பெருமை!

ஒரு காலக்கட்டத்தில் பிரபலமான ஆங்கிலப் பத்திரிக்கையில் பணி புரிந்தவர் பெலிக்ஸ் அபிஷேகநாதன் என்கிற பெயருடை ஒரு தமிழர்.  இப்போது அவரது வாரிசுகள் பல நாடுகளில் வாழ்கின்றனர். தமிழ் அறியாத அந்த வாரிசுகள் - தங்களது பெயரில் மட்டும் - அபிஷேகநாதன் என்கிற அடையாளத்தோடு வாழ்கின்றனர். அவர்களது பூர்விகம் தமிழ் என்று தெரிகிறது. தமிழ் தெரிந்தால் நல்லது தான். அது ஒரு கலப்பு இனமாக மாறிவிட்டது!

எந்த சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தங்களது  தமிழர் அடையாளத்தை இழக்கக் கூடாது என்பது தான் சரி.  முஸ்லிம்களால் அப்படி முடியுமா? முடியும். சீன முஸ்லிம்கள் தங்களது சீன அடையாளத்தைக் கொண்டிருக்கிறார்களே? எல்லாவற்றுக்கும் ஒரு வழி உண்டு.  அனைத்தும் அடைப்பட்டுவிட்டதாக நினைப்பதற்கு ஒன்றுமில்லை. 

அந்த "சோழச்சி" என்பது நமது வலிமை வாய்ந்த ஓர் அடையாளம். அதுவும் காரைக்குடியில் தங்களது முன்னோர்களின்  பெயர்கள் மறக்கப்படுவதில்லை. அது வாழயைடி வாழையாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

புதுமை என்று சொல்லி நாம் தான் நமது பழமைகளை மறந்து கொண்டிருக்கிறோம். ஆனால் பழமைகள் இன்னும் போற்றப்படுகின்றன என்பதை நம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்!

இதுவும் புதுமையே!


Saturday, 7 November 2020

எது வலிமையான ஆயுதம்?

 இன்றைய நிலைமையில் எது வலிமையான ஆயுதம் என்று சொல்லுவோம்?

அமெரிக்கா வலிமையான நாடு.  உலகமே  அவர்கள் சொல்லுக்குத்தான் அடி பணிகிறது.

இன்று நடந்த அமெரிக்கத் தேர்தலில் ஜோ பைடன் 46-வது அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றிருக்கிறார். அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. 

ஆனால் துணையதிபராக யார் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதில்தான் நாம் பெருமைப்படுகிறோம். ஆமாம் அவர் தான் கமலா ஹாரிஸ். அவர் துணையதிபர் என்றாலும் வருங்காலங்களில் அமெரிக்க அதிபராகக் கூட வரலாம். அதற்கான சாத்தியம் உண்டு. 

எதற்காக நாம் பெருமைப்படுகிறோம்?  அவர் தமிழ் நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட  ஒரு பெண் என்பதாகவா? இல்லை!

கல்வி என்பது நம்மை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதற்காகத்தான் இந்த எடுத்துக்காட்டு. அவரது தாயார் தமிழ் நாட்டில் படித்தவர். அவரிடம் கல்வி இருந்தது. அந்த கல்வி அவருக்குத் துணிச்சலைக் கொடுத்தது. கல்வி இருந்தால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்கிற துணிச்சல். . அது தான் கல்வி.  அந்த கல்வியை நம்பித்தான்  அவர் அமெரிக்கா சென்றார். ஒரே தலைமுறை தான். இப்போது அவர் மகள் கமலா ஹாரிஸ் உலகில் சக்தி வாய்ந்த ஒரு பதவிக்கு  தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். 

கமலா ஹாரிஸ்ஸின் தாயார், சியாமலா கோபாலான்,  வசதியான குடுமபத்தைச் சார்ந்தவர் அல்லர்.  சாதாரண குடும்பம். தனது கல்வியைக் கொண்டு அவர் அமெரிக்கா சென்றார். அவர் கற்ற கல்வி தான் அவருக்கு வலுவான ஆயுதம். அந்த கல்வியைக் கொண்டு தான் அவரால் முன்னுக்கு வர முடிந்தது. வேறு வலிமையான ஆயுதம் எதுவும் அவரிடம் இருந்ததில்லை, கல்வியைத் தவிர!

இங்கு நாம் ஒன்றே ஒன்றைத் தான் வலியுறுத்துகிறோம். அது தான் கல்வியின் அவசியத்தை. கல்வி இருந்தால் பதவிகள் நம்மைத் தேடிவரும். ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை!

ஓர் இனத்தைச் சார்ந்தவன் என்பதால் பதவிகள் வரலாம். அது தற்காலிகம்! ஒருவன் ஒரு குறிப்பிட்ட  மதத்தைச் சார்ந்தவன் என்பதால் பதவிகள் தேடி வரலாம். அதுவும் தற்காலிகம் தான்! இதற்கெல்லாம் அறிவு  தேவை இல்லாத ஒன்று.

ஆனால் கற்ற கல்வி எல்லாக் காலங்களிலும் நம்மோடு துணை நிற்கும். பதவிகள் தேடி வரும்.  கற்ற கல்வியின் மூலம் நமது அறிவைப் பயன்படுத்தி நம்மை உயர்த்திக் கொள்ளலாம். அது தான் கல்வியின் பலம்.

எது வலிமை? கற்ற கல்வி தான் வலிமை!  கற்ற கல்வி ஒன்றே வலிமை!

நமது உயர்வுக்கு வலிமையான ஆயுதம், கல்வியே!

அது சியாமளா கோபலானுக்கும்  பொருந்தும்!  நம்ம விமலா  கோபாலனுக்கும்  பொருந்தும்!

நமது வலிமையைப் பயன்படுத்த கல்வியே சிறந்த ஆயுதம்!

Friday, 6 November 2020

இது போதும்!

 இன்றைய நாட்டின் சூழ்நிலைக்கு யார் காரணம்? அரசியல்வாதிகளே காரணம் என்பதைத் தான் நாடாளுமன்றம் குறைவான எண்ணிக்கையுடன் தொடங்கப்படுவதற்கான சாட்சியாக எடுத்துக் கொள்ளலாம்!

அது போதும்! அது தான் நமக்கு  வேண்டும்!

அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு மகா அயோக்கியர்கள் என்பதை சபா  சட்டமன்ற தேர்தலின் போது தெரிந்து கொண்டோம்! அவர்கள் யோக்கியர்கள் என்றால் இப்போது மக்கள் இந்த அளவுக்குச் சிரமப்பட வேண்டிய அவசியமில்லை.

இன்று நடப்பது என்ன?  மக்களின் நலன் மறக்கப்பட்டுவிட்டது. நலன் முக்கியமல்ல. அது பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது.  பதவிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

பிரதமர் முகைதீனின் அரசாங்கம் 'மக்களின் நலன்' என எதனையும் நினைத்துச் செயல்பட வழியில்லை! அந்த அளவுக்கு அவரின் நிலை மோசமாக இருக்கிறது. இடைக் குறிக்கீடுகள் அதிகம். 

இந்த நிலையிலும் அவர் தனது பதவியைத்  தற்காத்துக் கொள்ள நாம் எதிர்பார்க்காத, நினைத்துப் பார்க்காத புதிய புதிய வழிகளைக் கண்டு பிடித்து இன்னும் பிரதமராக இருந்து கொண்டிருக்கிறார்!

அதில் ஒன்று தான் இப்போது நாடாளுமன்றத்தில் பாதி பேர் கலந்து கொள்கின்றனர்!

எப்படியிருப்பினும் பிரதமர் முகைதீனின் அரசாங்கம் தொடர வேண்டும் என்பது தான் எனது எண்ணம்.  எதிர் கட்சிகள் அவருக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.

அரசாங்கத்தின் கொள்கைகள் விமர்சிக்கப்படலாம். பிரச்சனைகள் சுட்டிக் காட்டப்படலாம்.  எல்லாம் நடக்கட்டும்.  ஆனால் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதை நான் விரும்பவில்லை.

அதற்குக் காரணம் பொருளாதார வீணடிப்பு வேண்டாம் என்பது தான்.

கொரோனா தொற்று நோயினால் இன்று நாடு பல வழிகளில் நலிந்தும்  நசிந்தும  போன நிலையில்  இருக்கிறது. மக்களிடையே வேலை இழப்புக்கள் அதிகம். 

இன்றைய நிலையில் வசதியாகவும் வாய்ப்புடனும் வாழ்பவர்கள் அரசியல்வாதிகள் தான். மக்கள் அவதிப்படுகின்றனர்.  நோயின் தாக்கம் அதிகம்.  இன்னும் அரசாங்கத்தால் கொரோனாவைக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர முடியவில்லை.

நாம் சொல்ல வருவதெல்லாம் அரசாங்கம் அடுத்த தேர்தல் வரை  "கவிழ்ப்போம்!" என்கிற பிரச்சனை இல்லாமல் தொடர வேண்டும். இங்கே அம்னோ கட்சியினர் மட்டுமே மிரட்டலாக இருந்தனர்.  அவர்கள் வாய்க்கும் தீனி போட்டாகி விட்டது!  இனி அவர்களின் பயமுறுத்தல் குறைவாகவே இருக்கும் என நம்பலாம்!

எப்படியோ ஆட்சி கவிழும் என்கிற பேச்சு இன்னும் கொஞ்ச காலம் இருக்காது. ஆனாலும் முகைதீன் அப்படியெல்லாம் அலட்சியமாக இருந்து விட மாட்டார்! அதனால் தான் நாடாளுமன்றத்தின் எண்ணிக்கை குறைப்பு. கவிழ்ப்பு பயத்திலிருந்து அவ்வளவு அளிதாக அவர் விடுபடமாட்டார்!

இப்போதைக்குக் கொரோனா கை கொடுத்திருக்கிறது! அதனால் கொரோனா தொடருமோ என்கிற பயமும் நமக்கு உண்டு!