Saturday 7 November 2020

எது வலிமையான ஆயுதம்?

 இன்றைய நிலைமையில் எது வலிமையான ஆயுதம் என்று சொல்லுவோம்?

அமெரிக்கா வலிமையான நாடு.  உலகமே  அவர்கள் சொல்லுக்குத்தான் அடி பணிகிறது.

இன்று நடந்த அமெரிக்கத் தேர்தலில் ஜோ பைடன் 46-வது அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றிருக்கிறார். அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. 

ஆனால் துணையதிபராக யார் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதில்தான் நாம் பெருமைப்படுகிறோம். ஆமாம் அவர் தான் கமலா ஹாரிஸ். அவர் துணையதிபர் என்றாலும் வருங்காலங்களில் அமெரிக்க அதிபராகக் கூட வரலாம். அதற்கான சாத்தியம் உண்டு. 

எதற்காக நாம் பெருமைப்படுகிறோம்?  அவர் தமிழ் நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட  ஒரு பெண் என்பதாகவா? இல்லை!

கல்வி என்பது நம்மை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதற்காகத்தான் இந்த எடுத்துக்காட்டு. அவரது தாயார் தமிழ் நாட்டில் படித்தவர். அவரிடம் கல்வி இருந்தது. அந்த கல்வி அவருக்குத் துணிச்சலைக் கொடுத்தது. கல்வி இருந்தால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்கிற துணிச்சல். . அது தான் கல்வி.  அந்த கல்வியை நம்பித்தான்  அவர் அமெரிக்கா சென்றார். ஒரே தலைமுறை தான். இப்போது அவர் மகள் கமலா ஹாரிஸ் உலகில் சக்தி வாய்ந்த ஒரு பதவிக்கு  தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். 

கமலா ஹாரிஸ்ஸின் தாயார், சியாமலா கோபாலான்,  வசதியான குடுமபத்தைச் சார்ந்தவர் அல்லர்.  சாதாரண குடும்பம். தனது கல்வியைக் கொண்டு அவர் அமெரிக்கா சென்றார். அவர் கற்ற கல்வி தான் அவருக்கு வலுவான ஆயுதம். அந்த கல்வியைக் கொண்டு தான் அவரால் முன்னுக்கு வர முடிந்தது. வேறு வலிமையான ஆயுதம் எதுவும் அவரிடம் இருந்ததில்லை, கல்வியைத் தவிர!

இங்கு நாம் ஒன்றே ஒன்றைத் தான் வலியுறுத்துகிறோம். அது தான் கல்வியின் அவசியத்தை. கல்வி இருந்தால் பதவிகள் நம்மைத் தேடிவரும். ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை!

ஓர் இனத்தைச் சார்ந்தவன் என்பதால் பதவிகள் வரலாம். அது தற்காலிகம்! ஒருவன் ஒரு குறிப்பிட்ட  மதத்தைச் சார்ந்தவன் என்பதால் பதவிகள் தேடி வரலாம். அதுவும் தற்காலிகம் தான்! இதற்கெல்லாம் அறிவு  தேவை இல்லாத ஒன்று.

ஆனால் கற்ற கல்வி எல்லாக் காலங்களிலும் நம்மோடு துணை நிற்கும். பதவிகள் தேடி வரும்.  கற்ற கல்வியின் மூலம் நமது அறிவைப் பயன்படுத்தி நம்மை உயர்த்திக் கொள்ளலாம். அது தான் கல்வியின் பலம்.

எது வலிமை? கற்ற கல்வி தான் வலிமை!  கற்ற கல்வி ஒன்றே வலிமை!

நமது உயர்வுக்கு வலிமையான ஆயுதம், கல்வியே!

அது சியாமளா கோபலானுக்கும்  பொருந்தும்!  நம்ம விமலா  கோபாலனுக்கும்  பொருந்தும்!

நமது வலிமையைப் பயன்படுத்த கல்வியே சிறந்த ஆயுதம்!

No comments:

Post a Comment