இன்று தொலைக்காட்சியில் பார்த்த ஒரு பெயர் எனது கவனத்தை மிகவும் ஈர்த்தது!
இப்படியெல்லாம் இன்னும் பெயர்கள் வைக்கப்படுகின்றனவா என்று ஓர் அதிர்ச்சி தான் ஏற்பட்டது! ஆனாலும் தமிழர்கள் இன்னும் பழமையைப் போற்றுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அது பெருமையே!
நான் இதுவரை கேள்விப்படாத அந்த பெயர் தான் "சோழச்சி", தமிழ் நாடு, காரைக்குடி பக்கம் என்று தெரிந்து கொண்டேன். அதோடு இன்னொன்றும் எனது ஞாபகத்திற்கு வந்தது. சோழச்சி என்று ஒரு பெயர் இருந்தால் சேரச்சி (சேரன்), பாண்டிச்சி (பாண்டியன்) என்கிற பெயர்களும் இருக்கக் கூடும். தெரியவில்லை! இப்படியெல்லாம் பெயர்கள் வைக்கப்படுகிறது என்றால் அந்த மக்களிடையே கலாச்சாரம், பண்பாடு என்பது இரத்தத்தில் ஊறிப்போன விஷயம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
நமது நாட்டில் இப்படியெல்லாம், தங்களைத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வது சாத்தியமா என்பது தெரியவில்லை. நம்மிடையே கலாச்சாரம், பண்பாடு என்பதை மறந்து போனோமோ என்பது இன்னும் புதிராகத் தான் இருக்கிறது!
தமிழர்களில் கிறிஸ்துவர்கள் கணிசமான அளவில் இருக்கின்றனர். அவர்களில் பலர் வெள்ளைக்கார அடையாளத்தோடு தான் இருக்கின்றனர். அதில் அவர்கள் பெருமைப்படுகின்றனர். தனது அடையாளாத்தை தொலைப்பதில் என்ன பெருமை!
ஒரு காலக்கட்டத்தில் பிரபலமான ஆங்கிலப் பத்திரிக்கையில் பணி புரிந்தவர் பெலிக்ஸ் அபிஷேகநாதன் என்கிற பெயருடை ஒரு தமிழர். இப்போது அவரது வாரிசுகள் பல நாடுகளில் வாழ்கின்றனர். தமிழ் அறியாத அந்த வாரிசுகள் - தங்களது பெயரில் மட்டும் - அபிஷேகநாதன் என்கிற அடையாளத்தோடு வாழ்கின்றனர். அவர்களது பூர்விகம் தமிழ் என்று தெரிகிறது. தமிழ் தெரிந்தால் நல்லது தான். அது ஒரு கலப்பு இனமாக மாறிவிட்டது!
எந்த சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தங்களது தமிழர் அடையாளத்தை இழக்கக் கூடாது என்பது தான் சரி. முஸ்லிம்களால் அப்படி முடியுமா? முடியும். சீன முஸ்லிம்கள் தங்களது சீன அடையாளத்தைக் கொண்டிருக்கிறார்களே? எல்லாவற்றுக்கும் ஒரு வழி உண்டு. அனைத்தும் அடைப்பட்டுவிட்டதாக நினைப்பதற்கு ஒன்றுமில்லை.
அந்த "சோழச்சி" என்பது நமது வலிமை வாய்ந்த ஓர் அடையாளம். அதுவும் காரைக்குடியில் தங்களது முன்னோர்களின் பெயர்கள் மறக்கப்படுவதில்லை. அது வாழயைடி வாழையாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
புதுமை என்று சொல்லி நாம் தான் நமது பழமைகளை மறந்து கொண்டிருக்கிறோம். ஆனால் பழமைகள் இன்னும் போற்றப்படுகின்றன என்பதை நம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்!
இதுவும் புதுமையே!
No comments:
Post a Comment